Latest News

July 24, 2016

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு படையினர் பாதுகாப்பு தேவை (சிங்கள மாணவர்களது பெற்றோர் ஒன்றியம் கோரிக்கை)
by admin - 0

யாழ். பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற தமிழ் - சிங்கள மாணவர்களிடையேயான மோதல் நிலைமை சீர்செய்யப் பட்டு அனைத்து பீடங்களும் விரைவில் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்.பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மையின மாணவர்களின் பாதுகாப்புக்காக பல்கலைக் கழகத்திற்கு அருகில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட வேண்டும் என சிங்கள மாணவர்களது பெற்றோர்களின் ஒன்றியம் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்காக இராணுவம் அல்லது பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு கோரி சிங்கள மாணவர்களின் பெற்றோர்களின் ஒன்றியம் ஜனாதிபதி, பிரதமர் உயர்கல்வி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த கடிதம் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அருகில் துணை பொலிஸ் நிலையம் ஒன்றை ஸ்தா பிக்குமாறும் அவர்கள் கேட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தலையிட முடியாது என்றால், அவர்களை வேறு பல்கலைக்கழகங்களில் சேர்க்குமாறும் பெற்றோர் கேட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் அனைத்து பீடங்களிலும் கல்வி கற்கும் 800 சிங்கள மாணவர்களையும் அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வரையில், கல்வி நடவடிக்கைக்கு அனுப்பப் போவதில்லை என மாணவர்களினது பெற்றோர்கள் தெரிவித்துள்னர்.
 இது தொடர்பில் அவர்கள் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 800 இற்கு மேற்பட்ட சிங்கள மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து துணை வேந்தர் வசந்தி அரசரட்ணத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
எமது பிள்ளைகள் யாழ்.பல்கலைக் கழகத்தில் தொடர்ச்சியாக அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வை அதிகரிப்பதற்குரிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழக துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
எங்கள் பிள்ளைகள் தங்குவதற்கு வீடுகள் அல்லது மாணவர் விடுதிகள் நிர்வாகத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

இவை உடனடியாகச் செய்யப்பட வேண்டும். யாழ். பல்கலைக் கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து, அங்கு கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர்களாகிய நாங்கள் சங்கடத்தை எதிர்கொண்டுள்ளோம்.

இந்நிலையில் பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உறுதியான, நம்பிக்கையான நடவடிக்கை எடுக்கும் வரையில், யாழ். பல்கலைக்கழகத்துக்கு எங்கள் பிள்ளைகளை அனுப்புவதில் விருப்பமில்லை என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை இந்தக் கடிதம் நேற்று இரவு வரை தனக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும், இன்றும் ஞாயிறும் விடுமுறை என்பதால் நாளை கிடைக்கப் பெறலாம் எனவும் துணைவேந்தர் வலம்புரியிடம் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments