Latest News

June 22, 2016

யாழில் ஐந்து மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: பாடசாலையில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு
by admin - 0

யாழில் ஐந்து மாணவிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: பாடசாலையில் பதற்றம்! பொலிஸார் குவிப்பு
  

யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானபாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

குறித்த ஆசிரியருக்கு எதிராக வலயக் கல்விப் பணிமனை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளின் பெற்றோர்களும், பழைய மாணவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

இதனைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

கடந்த ஒரு மாத காலமாக இப்பாடசாலையில் 7 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளை அங்கு கடமையாற்றும் 55 வயதான ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.

இது தொடர்பில் ஆசிரியர் ஒருவர் ஊடாகவும், மாணவியின் பெற்றோர்கள் மூலமாகவும் அதிபருக்கு முறைப்பாடு தெரிவித்திருந்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. அதிபர் இச் சம்பவத்தை தொடர்ந்தும் மூடி வைக்க முயன்றுள்ளதாக கூறப்படுகின்றது. தொடர்ந்தும் குறித்த ஆசிரியர் அதே செயற்பாட்டை தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையிலேயே நேற்று குறித்த பாடசாலையின் உயர்தர மாணவர்கள், பழைய மாணவர்கள் சிலர் முற்றுகை மறியலில் ஈடுபட முற்பட்டனர்.

இதனால் இப்பாடசாலைக்கு உடனடியாக பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் கல்வி அமைச்சு அதிகாரிகள் வலயக்கல்வி அதிகாரிகள் வருகை தந்து இப்பிரச்சினையை உடனடியாக கையாள்வதாக உறுதியளித்தனர்.

அத்துடன் குறித்த ஆசிரியரைக் கைது செய்வதாக கூறி பொலிஸார் அழைத்து சென்று பின்னர் விடுதலை செய்துள்ளதாக தெரிய வருகிறது.

இதனால் மீண்டும் கொதிப்படைந்த மாணவர்களும் பெற்றோர்களும் இன்று திரளாக ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நோக்குடன் பாடசாலையை முற்றுகை இட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெருமளவு கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பெரும் பதற்றமும் நிலவுகின்றது.

குறித்த சில தினங்களுக்கு முன்னர் வரணிப் பகுதிப் பாடசாலையிலும் இது போன்ற நிலைமை ஏற்பட்டு அப்பாடசாலையின் அதிபர் உட்பட ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மற்றும் இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் .
வேறுஇடங்களுக்கு மாற்றம் வழங்கப்படக்கூடாது என மாணவர்களும் பெற்றோரும் கொதிப்புடன் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments