Latest News

June 17, 2016

வன்னியில் வீடுகளை மக்கள் விரும்பியபடி கட்டவிடாது தாம் விரும்பியபடி கட்டுமாறு வற்புறுத்தும் அதிகாரிகள்
by admin - 0

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்கள் பலருக்கு நீண்ட காலமாக வீட்டுத்திட்டங்களை வழங்காது காரணமின்றிப் புறக்கணித்து வந்த அரச உயரதிகாரிகள் தற்போது ஆட்சி மாறியதன் பின்னர் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களை தாம் விரும்பியபடி கட்டுமாறு வற்புறுத்தி வருவதுடன் அதனை மீறி நீங்கள் விரும்பியபடி வீடுகளைக் கட்ட முற்பட்டால் வீட்டுத்திட்டத்தை நிறுத்திவிடுவோம் என்றும் கூறிவருவதாக பாதிக்கப்பட்ட மக்களால் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுவதுடன் இவ்விடயத்தில் மக்கள் பிரதிநிதிகளான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் செலுத்த முன்வரவேண்டும் என பலராலும் கூறப்படுகின்றது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் யுத்தப் பாதிப்புக்குள்ளான பல மக்கள் கடந்த கால அரசாங்கத்தாலும் அவர்களின் எடுபிடிகளாகச் செயற்பட்ட உயரதிகாரிகளாலும் அவர்கள் வாழ்வதற்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்ட நிலையில் தரப்பாள் கூடாரங்களில் அவலப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

கடந்தகாலங்களில் யுத்தப்பாதிப்புக்குள்ளான மக்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீட்டுத்திட்டங்களில் அதற்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரிகள் பலரால் பல மோசடிகளும் அடாவடிகளும் இடம்பெற்றுள்ளன. பாதகிகப்பட்டவர்களிடம் வீட்டுத்திட்டத்திற்காக பாலியல் இலஞ்சம் கோரல், மோசடியான முறையில் வீடுகளை அமைத்தல், வாடகைக்கு வழங்குதல் போன்றன அதற்குள் அடங்கும்.

இப்படியான நிலையில் கடந்தகால ஆட்சி மாறியதன் பின்னர் மைத்திரி அரசாங்கத்தின் மீள்குடியேற்ற அமைச்சினால் நீண்டகாலமாகத் தரப்பாள் கூடாரங்களில் வாழ்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ள வீடுகளை வீட்டில் வாழும் மக்கள் விரும்பியபடி கட்டவிடாது தாம் விரும்பியபடி கட்டுமாறு அரச அதிகாரிகள் மக்களை வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகின்றது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகளை தொடர்புடைய அரச அதிகாரிகள் வீட்டுத்திட்டப் பயனாளிகளிடம் ஒரு வீட்டின் வரை படத்தை மாத்திரம் வழங்கிவிட்டு அதேமாதிரியான வீட்டை கட்டுமாறு கூறப்பட்டுள்ளதுடன் அதேமாதிரிக்கட்டச் சம்மதிக்காதவர்களின் வீட்டுத்திட்;டம் இரத்துச்செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாம். ஆனால் யுத்தப்பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் அதிகாரிகளால் மூன்றுக்கு மேற்பட்ட வரைபடங்கள் மக்களிடம் வழங்கப்பட்டு மக்கள் விரும்பும் வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட மக்கள் தாம் விரும்பியபடி தாம் வாழும் வீடுகளைக்கட்டுவதற்குக்கூட அதிகாரிகள் அனுமதிக்காது தாம் விரும்பியபடிதான் வீடுகளைக் கட்ட வேண்டும் என வற்புறுத்திவருகின்றமையானது பாதிக்கப்பட்ட மக்கள் பலர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் இவ்விடயத்தில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற வீட்டுத்திட்டம் கிடைக்க உதவவேண்டும் என மக்கள் பலராலும் கோரப்பட்டுள்ளதுடன் இவ்விடயத்தை வெளிப்படையாகக் கூறினால் தமக்கான வீட்டுத்திட்டங்கள் இம்முறையும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஏக்கத்துடன் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments