Latest News

June 17, 2016

உதய கம்மன்பிலவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி
by admin - 0

tgte
தமிழர்களின் மண்ணில் இருந்து, தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தினரை நிலையாக நிறுத்துவதற்கு, கடந்த காலத்தில் ‘புலிப்பயங்காட்டியவர்கள் தற்போது ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்று பயங்காட்டுகின்றார்கள். இவ்வாறு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் கருத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதிலடி கொடுத்துள்ளது.


இலங்கையின் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக் கூடாது என்பதனை வலியுறுத்தி, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, பத்துக் காரணங்களை சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் அடுக்கியிருந்தார்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் பிரிவினைவாதம் தோற்கடிக்கப்படவில்லை என்றும், புலம்பெயர்ந்த நாடுகளில் அவர்களது செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என்றும், நாடுகடந்த தமிழீழ அரசு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பல நாடுகள் ஆதரவளித்துள்ளன என்றும் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில், கருத்தினை வெளியிட்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பாடல் அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள், சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் எப்போதுமே தமிழினத்தின் மீதான இனஅழிப்பினையும், தமிழர் தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பினையையும் நியாயப்படுத்த ஆயிரம் ஆயிரம் காரணங்களை சொல்லியே வந்துள்ளார்கள்.

அந்தவகையில், தான் ஆக்கிரமிப்புச் செய்துள்ள தமிழ்மண்ணில் இருந்து, தனது ஆக்கிரமிப்பு இராணுவத்தினை நிலையாக நிறுத்துவதற்கு கடந்த காலத்தில் ‘புலி’ பயங்காட்டியவர்கள் தற்போது ‘நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்’ என்று பயங்காட்டுகின்றார்கள்.

இந்நிலைப்பாட்டில் சிங்கள தேசத்தின் எந்த அணிகளுக்கும் இடையில் வித்தியாசத்தினைக் காண முடிவதில்லை என அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்
« PREV
NEXT »

No comments