Latest News

May 22, 2016

தமிழ் மக்கள் மீது வீசப்பட்டது கிளஸ்ரர் குண்டுகள்!
by kavinthan Sivakurunathan - 0

முள்ளிவாய்காலில் இலங்கை அரசாங்கத்தினால் தமிழின படுகொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் பூர்த்தி ஆகியுள்ள நிலையில் இந்த கட்டுரையை எழுதுவதற்கு உந்தப்படுகிறேன்.

ஐ. நா மனித உரிமைகள் சபையில் கடந்த வருடம் இலங்கை தொடர்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது, தமக்கெதிரான அநீதிகளுக்கு ஓரளவுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ்மக்களிடம் ஏற்ப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கை இன்று வெறும் கானல் நீராக மாறிவிட்டது.

தீர்மானம் இயற்றப்பட்டபோது சர்வதேச சமூகத்துக்கு அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இன்றுவரை எதையுமே செய்யவில்லை. போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகள் இலங்கையில் ஒருபோதும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விகிரமசிங்கவும் பல சந்தர்ப்பங்களில் தீர்க்கமாக கூறி இருக்கிறார்கள்.

பொறுப்புக்கூறல் தொடர்பிலான உண்மையான தன்மை மற்றும் உள்ளக விசாரணைக்கான அரசாங்கத்தின் முனைப்புக்களும், குறிப்பாக தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களின் தீவிரத் தன்மை தொடர்பில் கவலை கொண்டுள்ளவர்களுக்கு சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றன. இந்த விசாரணைகளில் யார் நீதிபதிகளாகவும், விசாரணையாளர்களாகவும், தடயவியல் நிபுணர்களாகவும் இருக்கப்போகிறார்கள் என்பது கேள்வியாகவே இருந்துவருகிறது.

மிக முக்கியமாக, சாட்சியாளர்கள் தமது அனுபவங்கள் மற்றும் விபரங்களை தெரிவிப்பதற்கு ஏதுவான ஒரு சூழ்நிலை இருக்கிறதா என்று நாம் கேட்கவேண்டும். குறிப்பாக, பல சாட்சியாளர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர், பலர் ஏற்கனவே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர், சிலர் தமது அனுபவ உண்மைகளை விட்டுக்கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.


நான் ஒரு மருத்துவர். வடக்கு கிழக்கில் யுத்தம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அங்கு பணியாற்றினேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த யுத்தத்தில் பெரும் துன்பப்பட்டதை நான் நேரடியாக பார்த்துள்ளேன். விமான குண்டு வீச்சு தாக்குதல்கள், எறிகணை வீச்சுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆயுதங்களால் காயமடைந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் சிகிற்சை அளித்திருக்கிறேன். மருத்துவ வழங்கல்கள் இல்லாத நிலையிலும், சிகிற்சை அளிப்பதற்கு போதிய வசதிகளோ மருத்துவ பணியாளர்களோ இல்லாத நிலையிலும் எவரையும் சாவதற்கு அனுமதிப்பதில்லை என்ற பற்றுறுதியுடன் நாம் எம்மால் முடிந்தளவு சிகிற்சைகளை வழங்கினோம்.

ஆனாலும், மயக்கமளிக்கும் மருந்துகளோ இரத்தமோ இல்லாதநிலையில் நோயாளிகள் பலர் இறக்கும் நிலைமையை பார்க்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருந்தோம். நானும் ஏனைய சில மருத்துவர்களும் எமது சொந்த பாதுகாப்பையும் பொருட்படுத்தாது எமது உயிரை பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிற்சை அழிப்பது என்று முடிவு செய்து யுத்தம் முடிவடையும் வரை அங்கிருந்து பணியற்றினோம்.

கடும் விமானத்தாகுதல்கள், எறிகணை தாக்குதல்கள் மற்றும் சிறி லங்கா இராணுவத்தினரின் முன்னேற்றம் காரணமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தொடர்ந்து இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டபோதிலும் மிகவும் சொற்ப அளவிலான மருந்துகள், போதிய வசதிகள் மற்றும் பணியாளர்கள் இன்றிய நிலையிலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிற்சை அளிப்பதற்காக தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து திறந்து இருந்தன.

மறக்க முடியாத ஆயிரக்கணக்கான பல சம்பவங்களில், என்னால் என்றைக்குமே ஞாபகத்தில் வைத்திருக்கக்கூடிய ஒரு சம்பவம் உண்டு- அது கிளஸ்ரர் குண்டுடன் தொடர்புபட்டது.

காலில் ஆழமான காயத்துடன் புதுமாத்தளன் மருத்துவமனைக்கு ஒரு பெண் கொண்டுவரப்பட்டார். அவருக்கு 50 வயது இருக்கும். முழங்காலுக்கு கீழ் அவருக்கு காயம் ஏற்ப்பட்டிருந்தது. அவரது காலை அகற்றாமல் அவருக்கு சிகிற்சை அளிக்கலாம் என்று நினைத்தோம். காயத்தை சுத்தம் செய்தபோது அவரது காலுக்குள் கொள்கலன் ஒன்றுக்குள் வெடிக்காத குண்டு ஒன்று உட்செருகி இருந்ததை கண்டோம் . இது ஒரு கானின் அளவில் இருந்தது. இது வழமைக்கு மாறாக இருந்ததுடன் இதனை ‘கிளஸ்ரர்’ குண்டு என்று அறிந்துகொண்டோம். இது எமக்கு பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. சத்திரசிகிற்சை அறைக்குள் இது வெடித்து மருத்துவர்களையும் பணியாளர்களையும் கொல்லுமோ என்று பயந்தோம். மருத்துவ பணியாளர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் எப்படி இந்த பெண்ணுக்கு சிகிற்சை அளிக்கலாம் என்று ஆராய்ந்தோம். இந்த குண்டு வெடிக்காமல் எப்படி அதை வெளியே எடுக்கலாம் என்று எம்முள் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.

இந்த செய்தியை அறிந்த சிலர் மருத்துவமையில் இருந்து ஏற்கனவே வெளியேறி இருந்தனர். விரைவாக ஒரு முடிவு எடுக்கப்படவேண்டி இருந்தது. இந்தப் பெண்ணின் காலை குண்டுடன் சேர்த்து அகற்றி அதனை மருத்துவமனையில் இருந்து முடிந்தளவு தூர இடத்துக்கு கொண்டு செல்வதை தவிர வேறு வழி எமக்கு தெரியவில்லை. இதனைத்தான் நாம் செய்தோம். வெட்டப்பட்ட அவரது கால் வாகனம் ஒன்றில் தூர இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

2009 ஜனவரி மாதம் நான் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதான மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது தான் முதன் முதலாக கிளஸ்ரர் குண்டு பற்றி கேள்விப்பட்டிருந்ததுடன் அவை காரணமான காயங்களை கண்டேன். அப்போது சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு மற்றும் ஐ. நா பணியாளர்கள் மருத்துவமனையில் இருந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர் பொதுமக்கள் மீது கிளஸ்ரர் குண்டுகள் போடப்பட்ட பல சம்பவங்கள் நடைபெற்றன. அப்போது நாம் இரவு பகல் என்று நித்திரை முழித்து பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.


கிளஸ்ரர் குண்டுகள் பற்றி மட்டுமன்றி ‘ வெள்ளை பொசுபரசு’ குண்டுகள் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருந்தோம். அத்தகைய ஒரு குண்டுதாக்குதல் பற்றி கேள்விப்பட்டு அந்த இடத்துக்கு நான் சென்று பார்த்தபோது அங்கு எரிந்த ‘தீ’ வழமைக்குமாறானதாக காணப்பட்டது. கரும்புகைக்கு பதிலாக வெள்ளை நிற புகை வெளிவந்தது. பின்னர் நான் மருத்துவமனைக்கு சென்றபோது நிலைமை மோசமாக இருந்தது. ஏராளமான மக்கள் காயமடைந்து அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இருந்த சொற்ப வசதிகளைக்கொண்டு அவர்களுக்கு சிகிற்சை அளிக்க மிகவும் சிரமப்பட்டோம். நிலைமை முன்னேற்றமடையும் என்று கருதியதால் மக்கள் மீது இவ்வாறன மோசமான தாக்குதல்கள் பற்றிய சான்றுகளை சேகரிக்கவேண்டும் என்று நாம் அப்போது சிந்திக்கவில்லை.


வன்னியில் மேற்கொள்ளப்பட்ட கிளஸ்ரர் குண்டு தாக்குதல் 
கடந்த 30 வருட கால யுத்தத்தில் தம் மீது எந்தமாதிரியான குண்டுகள் போடப்பட்டன என்ற விபரம் மக்களுக்கு தெரியும். இதனை அவர்களால் வேறுபடுத்தி அறியமுடியும். இந்த அடிப்படையில் தான் ‘கிளஸ்ரர்’ குண்டு தாக்குதல்கள் பற்றி மக்கள் பேச தொடங்கி இருந்தார்கள்.

வலைஞர்மடம் தற்காலிக மருத்துவமனைக்கு அருகே 22 ஏப்பிரல் 2009 இல் நடைபெற்ற கிளஸ்ரர் குண்டு தாக்குதலில் மருத்துவர் சிவமோகன் பலியானார்.

தற்போதுள்ள கேள்வி என்னவென்றால் இவ்வாறு இழைக்கப்பட்ட கொடூரங்கள், குற்றங்களுக்கு நீதியை வழங்குவதற்கும் இவை மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கும் நம்பகத்தன்மையான நடவடிக்கைகளை சர்வதேச சமூகமும் இலங்கை அரசாங்கமும் எடுக்குமா என்பதே ஆகும். அத்துடன், இன்றும் தொடரும் துயரங்களை முடிவுக்கு கொண்டுவர என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும்? 


வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா« PREV
NEXT »

No comments