Latest News

May 25, 2016

முதலமைச்சரின் அனுமதியின்றி கூட்டம் விலகினார் ஆளுநர் நடத்தினார் சுமந்திரன்! (வடக்கு உறுப்பினர்கள் 31 பேர் புறக்கணிப்பு)
by admin - 0

வடக்கு மாகாண சபை அதிகாரங்களில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே வரம்பு மீறி செயற்படுவதால் அவர் தலைமையிலான கூட்டங்களை வட மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் புறக்கணிக்க முடிபு செய்துள்ளனர். 

இதன் படி ஆளுநர் தலைமையிலான நேற்றைய கூட்டத்தையும் பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்ததால் குறித்த கூட்டத்தில் இருந்து தான் விலகுவதாகவும் நேரடியாகத் தலையிட்டு எதனையும் செய்யப் போவதில்லை எனவும் இதை வேறொருவர் பெறுப்பேற்று நடத்துமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் பெறுப்பேற்புடன் நேற்றையதினம் வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 

யாழ் நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கூட்டம் ஒன்றை நேற்றையதினம் நடத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் போன்றோருக்கு ஆளுநரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 
அதில் கலந்துகொள்வதற்கு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த  3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றையதினம் கொழும்பில் இருந்து வந்திருந்தனர். 

வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசிக்காமல் இவ்வாறான கூட்டத்தை நடத்தாது எம்முடன் முதலில் பேசுவதே சிறந்தது என வடமாகாண முதலமைச்சரால் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் குறித்த கலந்துரையாடலை வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலரும் புறக்கணித்திருந்தனர். 

55 மில்லியன் அமெரிக்க டொலரில் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ் மாநகர அபிவிருத்தி திட்டத்தை துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற் காக கடந்த வருடம் யூன் மாதத்தில் இருந்து பல நடவடிக்கைகள் யாழ் மாவட்ட அரச அதிபர்  தலைமையில்  நடைபெற்றுவந்தது.

குறித்த செயற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளநிலையில்  இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக எதிர்வரும் மே 31 ஆம் திகதி உலக வங்கி அதிகாரிகள் நியூயோர்க்கில் அனுமதியை வழங்கவுள்ளார்கள். 
இந்தநிலையிலேயே குறித்த கூட்டம் நேற்றையதினம் நடத்தப்பட்டுள்ளது.

அதில் அத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன் திட்டத்தை முன்னெடுக்கும் காலகட்டத்தில் இலகுவாக மேற்கொள்வதற்கு நிர்வாகம், குடியிருப்பு, தொழிற்சாலைகள், போக்குவரத்து போன்றவற்றுக்குரிய பிரதேசங்கள் என்பவற்றை அடையாளம் கண்டு வலயப்படுத்துவதற்காக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கி ஆலோசனை வழங்குவதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இக் கலந்துரையாடலில் பாராளு மன்ற உறுப்பினர்களான சுமந்தி ரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் மற்றும் வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வட மாகாண சபை உறுப்பினர்களான ஆனோல்ட், சுகிர்தன், அஸ்மின், பரஞ்சோதி, சிவயோகம், சயந்தன் மற்றும் அபிவிருத்திதிட்டம் தொடர்பான துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கூட்டத்தின் இறுதியில் பங்குபற்றியிருந்தார்.
இக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன்,
துரதிஷ்ட வசமாக ஆளுநர் குறித்த கூட்டத்திலிருந்து இருந்து விலகியுள்ளார் எனவும் பெரும்பாலான உறுப்பினர்களின் புறக்கணிப்பு தொடர்பாக தமது கவலையை ஆளுநருக்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அபிவிருத்தி தொடர் பான விடயங்களை முன்னெடுக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேற்படி கூட்டத்தில் வட மாகாண சபையின் 38 உறுப்பினர்கள் 7 பேர் மட்டுமே கலந்து கொண்டிருந்த நிலையில் ஏனைய 31 உறுப்பினர்களும் கூட்டத்தினை புறக்கணித்துள்ளனர். 
வடக்கு மாகாண சபையின் அதிகாரங்களில் ஆளுநர் தொடர்ச்சியாக வரம்பு மீறி செயற்படுவதாலேயே மேற்படி புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.       (செ-9,4)
« PREV
NEXT »

No comments