Latest News

April 02, 2016

ஒப்பிரேசன் சாவகச்சேரி – இளையவன்னியன்
by kavinthan Sivakurunathan - 0

2009 இல் இருண்ட தமிழரின் வாழ்வு இன்னும் விடியவில்லை, அந்த இருட்டையே முதலீடாக கொண்ட அரசியல் சக்திகள் ஒரு போதும் விடியலுக்கு வழிவிடபோவதில்லை. அதற்கான தடைகளின் ஒரு வெளிப்பாடுதான் சாவச்சேரி சம்பவம்.

உச்ச பட்ச திட்டமிடலுடன் கூடிய ஒரு புலனாய்வுத்துறையின் நடவடிக்கையா இது? தெய்வீகன், கோபி, போன்றோரின் படுகொலைத்திட்டமிடலின் நீட்சியாக பார்க்கப்படவேண்டிய ஒன்றா இது? ஒரு கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தும் இலக்கினை கொண்ட நடவடிக்கையா? கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்து கொண்டே செல்கிறது.

சரி என்ன நடந்தது?

செவ்வாய் இரவு சாவச்சேரி மறவன்புலோ பிரதேசத்தை சேர்ந்த வீடு ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு அங்கே தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் அங்கி, கிளைமோர், சன்னங்கள், மற்றும் கஞ்சா போன்றன எடுக்கப்பட்டிருக்கிறது.

புதன் மதியம் அந்த வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டவர் வழங்கிய வாக்கு மூலம் என்று பொலிசார் ஒன்றை வெளியிட்டனர்.

அது இப்படி சொல்லுகிறது. முல்லைத்தீவில் இருந்து மீன் பிடிக்கு பயன்படுத்துவதற்காக வெடிபொருட்களை அவர் தன்னுடைய வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்திருக்கிறார். அவரது இரண்டாவது மனைவி அவருடன் கொண்டிருந்த சச்சரவு காரணமாக பொலிசாருக்கு தகவல் வழங்கி இருக்கிறார்.

அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவே அதன் சாராம்சம்.

ஆனால் அதில் முக்கியமான ஒரு விடயம் விடுபட்டிருப்பதாக சிலர் சொல்லுகின்றனர். அது என்னவெனில் அந்த ”வெடி பொருட்களை குறித்த நபர் முல்லைத்தீவில் இராணுவத்திடம் இருந்தே பெற்றிருக்கிறார்” என்பதே அது. அப்படியாயின் ஒரு தமிழ் ஆடு சிக்கிக்கொண்டாதாக, சிக்கவைக்கப்பட்டதாக சந்தேகிக்கலாமா ?

அதே நேரம் சமூக வலைத்தளங்களில் கனமான சந்தேகங்கள் பல இச்சம்பவம் தொடர்பாக எழுப்பப்படுகிறது,  அங்கி சுற்றப்பட்டிருந்த சிங்கள பத்திரிகை எப்படி அங்கே சாத்தியம் (அது 2008 ம் ஆண்டுக்குரிய பத்திரிக்கை )

பயங்கரவாத செயற்பாடாக அதி உயர் தண்டனைக்குரிய குற்றமாக நோக்கப்படும் வெடிபொருட்களை , தற்கொலை அங்கி உட்பட அவற்றை இவ்வளவு சாதாரணமாக ஒருவர் வீட்டில் வைத்திருத்தல் சாத்தியமா?

கஞ்சா இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சுற்றி வளைத்தோம் என்கிறது முதல் போலிஸ் தகவல்.
வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட பின் இது ஒரு ”ஒருமாத கால நடவடிக்கை என்கிறது”பிந்திய போலிஸ் தகவல்.

மிக விரைவாக அவர் இருக்கும் இருப்பிடம் அறிந்து அந்த பிரதேசம் சோதனைக்கு உற்படுத்தப்பட்டு எப்படி குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இப்படி பல கேள்விகள் தொடர்கின்றன.

இது இப்படி இருக்க அரசாங்கம் ”இது யுத்தத்துக்கு பின் மீட்கப்படும் ஆயுதங்களின் தொடர்ச்சியே” என்று சொல்லுகிறது.

” மஹிந்த தரப்பு புலிகளின் மீள் எழுச்சியின் வெளிப்பாடு” என்கின்றனர். நல்லாட்சியின் வேலிகள் ”மைத்ரி மீது தாக்குதல் நடத்துவற்காக மேற்கொள்ளப்பட்டது, நல்லாட்சியை குழப்புவற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

தமிழர் தரப்பு, தம் மீதான திட்டமிட்ட நடவடிக்கையாகவே இதனை பார்க்கிறது. அதனை இந்நடவடிக்கை மீது எழுப்பும் சந்தேகங்கள் அதிகப்படுத்துகிறது.

எது எப்படியாயினும் தமிழர் தரப்புக்கே சேதாரம் அதிகம். இதுவே மறுவளத்தில், அரசுக்கும், அரச இராணுவத்துக்கும் ஆதாயம் அதிகம்.

அப்படியாயின் என்ன என்னதான் நோக்கம்?

முதலாவது இராணுவம் வெளியேற வேண்டும் என்ற பலமான கோரிக்கையை மலினப்படுத்துவதற்கான வாய்ப்பாக , தொடர்ச்சியாக இராணும் தனது இருப்பை, நிலைகளை பலப்படுத்தி கொள்ளுவதற்கான சந்தர்பமாக இதனை பயன் படுத்த போகிறது.

”வடக்கில் இராணுவம் எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது” இது யுத்த காலத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை அல்ல. நான்கைந்து தினங்களுக்கு முன் சாவச்சேரி சம்பத்துக்கு முன் யாழ் இராணுவ கட்டளைத்தளபதி சொன்ன கருத்து இது .

மிகவும் சாதாரண சூழலில் எதற்கு இராணுவம் யுத்தத்துக்கு தயாரான நிலையில் வைத்திருக்கபடவேண்டும். அப்படியாயின் அவர்கள் தொடர்ச்சியாக நிலை கொள்ளுவதற்கு இப்பிராந்தியத்தை அபாய பிராந்தியாமாக சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பிராந்தியமாக காட்ட வேண்டிய தேவை ஏற்படுகிறது. அதற்கான தங்கு தடையற்ற ஒரு வாய்ப்பு இதன் மூலம் இராணுவத்துக்கு கிடைக்கிறது.

இரண்டாவது முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சற்று வெளிப்படையாக பேசுவதற்கு அண்மைக்காலமாக முன்வந்திருந்தார்கள். அது இராணுவத்துக்கு ஒரு நெருடலாக நிச்சயம் இருந்திருக்கும்.

புலிகள் அமைப்பில் இருந்த ஆனால் புனர்வாழ்வு பெறாத ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது, புனர்வாழ்வு பெற்று வந்திருப்போரின் குரலை நிச்சயம் அடக்கக்கூடிய , அச்சுறுத்தக்கூடிய ஒன்றுதான்.

மூன்றாவது தமிழர்களை ஒரு விதமான அச்ச உணர்வுக்குள் எப்போதும் வைத்திருக்கவே இராணுவம் விரும்புகிறது, இது ஒரு உளவியல் ரீதியான தந்திரம்.

அவ்வப்போது இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளும் கைதுகளும் அவர்கள் மீது அச்ச உணர்வை திணிப்பதற்கான கைங்கரியங்களாகவே பார்க்க முடிகிறது.

தெய்வீகன் கோபி போன்றோரின் படுகொலை மற்றும் விபூசிகா அவரின் தாயார் மீதான கைதுகள் எப்படி தன்னெழுச்சியான போராட்டங்களை தணிய செய்ததோ அப்படியே இதுவும் விரிந்திருக்கும். ஒரு சிவில் வெளியை கணிசமான அளவு சுருங்க செய்யும் . மன்னாரில் சோதனைச்சாவடி உருவாக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு நிச்சயம் அச்சத்தை தரக்கூடிய ஒரு விடயம் தான்.

நான்காவது விடுதலைப்புலிகள் மீள எழுகிறார்கள் என்னும் கோசத்தை சிங்களத்தின் ஒரு தரப்பு முன்வைப்பதனூடாக தமிழர் விரோத சிங்கள சக்திகளை கூர்மையாக்குவதோடு தெற்கின் மன நிலையில் வடக்கு தொடர்பான ஒரு எரிச்சலை நிரந்தராமாக்கி பேணுவதற்கும் சந்தர்ப்பத்தை இச்சம்பவம் வழங்குகிறது.

ஐந்தாவது வடக்கில் கஞ்சா கடத்தல் , விநியோகம் மிகப்பெரும் பிரச்சனையாக எழுந்து வருகிறது, இச்சூழலில் கஞ்சாவும் இங்கே கைப்பற்றபட்டிருப்பது முன்னர் விடுதலைப்புலிகளாக இருந்தவர்களே சமூகவிரோத செயற்பாடுகளை செய்கின்றனர் என்கிற பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் இது பாதை அமைத்திருக்கிறது.

நல்லாட்சியிலும் நாடகங்கள் அப்படியே நடந்தேருவதாகவே உணரமுடிகிறது. ஆனால் யார் ஆட்சி செய்தாலும் பாத்திரங்களை ஏற்பவர்கள் தமிழர்களாகவே இருக்கிறார்கள்.

பலிக்கடாவாக்கப்படுவதும் அவர்களே. கைது செய்யப்படும் தனியனாகவோ அல்லது அதன் அதிர்வுகளால் சமூகமாகவோ தமிழர்களே இலக்காக்கப்படுகின்றனர். பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது நடந்தது. நடக்கிறது. நடக்கும் …

இவற்றில் இருந்து மீட்சி தான் எப்போது?

இளையவன்னியன்

« PREV
NEXT »

No comments