Latest News

April 29, 2016

கலையும் வேடங்கள் - ‘கலாநிதி’ சேரமான்.
by admin - 0

கலையும் வேடங்கள் -  ‘கலாநிதி’ சேரமான்.
வீரத்தாலும், ஈகத்தாலும் தமிழ் மக்களின் வரலாறு நிறைந்திருக்கும் அளவிற்குத் துரோகங்களாலும் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. காக்கை வன்னியன் என்றும், எட்டப்பன் என்றும் ஒரு காலத்தில் துரோகிகளை விளிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த சொற்கள், இன்று கருணா என்றும், கே.பி என்றும் பன்முகப்பட்டு நிற்கின்றன. இவ்வாறு துரோகங்களைக் கண்டு பழகிப் போன தமிழர்களுக்கு இன்று எவராவது புதிதாக ஏதாவது துரோகம் செய்தால் அது பெரிதாகத் தென்படுவதில்லை. ஏனென்றால் துரோகம் என்பது தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்துப் போன ஒன்றாகும்.

இப்படித்தான் அண்மையில் மைத்திரி அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி நற்சான்றிதழ் அளித்த சம்பவமும் தமிழ் மக்களால் பார்க்கப்படுகின்றது. எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தாரும் ஏறி விழுந்த கதையாக இப்பொழுது ஜெயானந்தமூர்த்தியும் இணைந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.

பிரதேசவாதம் கிளப்பித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இருகூறாகத் துண்டாடும் சதி நடவடிக்கையில் 2004ஆம் ஆண்டு கருணா இறங்கிய பொழுது, அவரது பின்னணியில் இயங்கிய அரூப கரங்களில் ஒன்றாக ஜெயானந்தமூர்த்தியும் திகழ்ந்தார் என்பது அப்பொழுது அவரது எதிராளிகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். அத்தோடு தமிழீழத் தேசியத் தலைவரின் படத்தை கருணா எரித்த பொழுது அதனை ஜெயானந்தமூர்த்தியும் வேடிக்கை பார்த்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனாலும் அன்று அதனை யாரும் நம்பவில்லை. அவ்வாறான நடவடிக்கைகளில் தான் ஈடுபடவில்லை என்று பிற்காலத்தில் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்த பொழுது, அதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த அளவிற்கு ஜெயானந்தமூர்த்தி அவர்களின் தமிழ்த் தேசியப் பற்று மீதான நம்பிக்கை அனைவருக்கும் இருந்தது. அவரும் அப்படித்தான் நடந்து கொண்டார்.

ஜெயானந்தமூர்த்தியின் தமிழ்த் தேசியப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் அவரது இல்லம் மீது பல தடவைகள் கருணா - பிள்ளையான் குழுவினரால் உந்துகணைத் தாக்குதல்களும், எறிகுண்டு வீச்சுக்களும் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் கருணா - பிள்ளையான் குழு ஆயுததாரிகளால் வாழைச்சேனையில் ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். தனது சகோதரரின் இறுதி நிகழ்வில் பங்கு பற்ற முடியாத அளவிற்கு கொழும்பில் தங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஜெயானந்தமூர்த்தி அவர்கள், பின்னர் அங்கும் தான் தங்கியிருப்பது பாதுகாப்பில்லை என்ற நிலையில் பிரித்தானியா சென்று அங்கு அகதித் தஞ்சம் கோரினார்.

ஜெயானந்தமூர்த்தி அவர்கள் மட்டுமன்றி அவரது குடும்பத்தினரும் பிரித்தானியாவில் அகதிகளாக அடைக்கலம் பெற்றனர். இறுதி யுத்தம் உக்கிரமடைந்த காலத்தில் புலம்பெயர் தேசங்களில் மேடையேறி வீராவேச முழக்கங்களை எழுப்பியவர் ஜெயானந்தமூர்த்தி அவர்கள். இறுதி யுத்த காலத்தில் (2008 ஆம் ஆண்டு) வன்னி சென்று தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைச் சந்தித்தவர் என்ற வகையில் ஜெயானந்தமூர்த்தியின் வீராவேசப் பேச்சுக்களுக்குப் புலம்பெயர் தேசங்களில் பெரும் வரவேற்பு இருந்தது. ஆனாலும் கள நிலவரங்கள் தொடர்பாக அவர் கூறிய சில மிகைப்படுத்தப்பட்ட தகவல்களும், அவர் ஆற்றிய சில அதி வீராவேச உரைகளும், வரிக்கு வரி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பெயரை அவர் உச்சரித்தமையும், அன்று அவரது விசுவாசம் பற்றிய சில நெருடல்களை ஏற்படுத்தத் தவறவில்லை.

உண்மையில் தமிழீழத் தேசியத் தலைவர் மீது அதிக அளவு அன்பும், விசுவாசமும் கொண்டு ஜெயானந்தமூர்த்தி நடக்கின்றாரா? அல்லது எல்லா அரசியல்வாதிகளையும் போன்று, வீராவேசப் பேச்சுக்களைப் பேசி வஞ்சனைப் புகழ்ச்சி செய்கின்றாரா? என்பதைத் துல்லியமாகக் கணிப்பிட்டுக் கூறுவது அன்று பலருக்குக் கடினமாகவே இருந்தது.

ஓர் ஓநாய் புலித்தோல் அணிந்து வந்தாலும், அதனிடம் உள்ள ஓநாய்க்கான பண்புகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்பட்டே தீரும். ஆனாலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரை தம்மிடையே புலித்தோல் அணிந்து நடமாடும் ஓநாய்களின் பண்புகளைக் கண்டறிந்து கொள்வது என்பது இப்பொழுதும் கூடக் கடினமான ஒன்றாகத்தான் இருக்கின்றது.

துரோகங்களின் உச்சமாகத் திகழும் கருணாவையும், கே.பியையும், உருத்திரகுமாரனையும் காலம் கடந்துதான் எம்மவர்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். இந்த வகையில் ஜெயானந்தமூர்த்தியின் புலிவேசத்தை இத்தனை ஆண்டுகளாக எம்மவர்கள் அடையாளம் காண முடியாமல் இருந்தது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்றல்ல என்றே கூறலாம்.

மகிந்தரை ஆட்சிபீடத்தில் இருந்து கவிழ்த்து மைத்திரியை அரியாசனம் ஏற்றும் சதிப் படலத்தை 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சந்திரிகா அம்மையாரும், ரணில் விக்கிரமசிங்கவும் தொடங்கிய சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய செயற்பாடுகளில் இருந்து ஜெயானந்தமூர்த்தி ஒதுங்கத் தொடங்கினார். தமிழீழத் தேசியத் தலைவர் வருவார் என்று மேடைகளில் முழங்கி வந்த ஜெயானந்தமூர்த்தி, திடீரென பரிநிர்வாண நிலையை எய்திய போதிசத்துவராக மாறி, ‘எனக்கு இதில் நம்பிக்கை இல்லை’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறத்தொடங்கினார். அத்தோடு புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புக்களையும் குறைகூறத் தொடங்கிய ஜெயானந்தமூர்த்தி அவர்கள், ‘இங்கிருந்து எதனையும் செய்ய முடியாது’ என்றும் கூறத்தொடங்கினார்.

ஆனாலும் அதனை யாரும் பெரிதாகக் கருதி அலட்டிக் கொள்ளவில்லை. ஏதோ விரக்தியில் ஜெயானந்தமூர்த்தி பேசுகிறார் என்றே எண்ணினார்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் தனக்கு புலம்பெயர் தேசத்தில் வேலைக்கு செய்வது கடினமாக இருக்கின்றது என்றும், தாயகத்தில் பல கோடி ரூபா பெறுமதியான அசையும், அசையாச் சொத்துக்களைக் கொண்ட தன்னால் அவற்றை இழந்து புலம்பெயர் தேசத்தில் சாதாரண ஒரு குடிமகனாக, அதுவும் அகதி என்ற பட்டத்துடன் வாழ்வது கடினமாக இருக்கின்றது என்றும் ஜெயானந்தமூர்த்தி கூறிக் கொண்டார்.

இவ்வாறு ஜெயானந்தமூர்த்தி கூறிய பொழுது, அவர் மீது பலர் பரிதாபப்பட்டுக் கொண்டார்களே தவிர, அவரது கருத்தில் பூடகமாக மறைந்திருந்த அவரது எண்ணவோட்டத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. புலம்பெயர் தேசங்களில் தமிழ்த் தேசியப் பரப்புரைப் பணிகளை முன்னெடுப்பதை விடத் தாயகம் திரும்பி அங்கு மக்களுக்கான பணிகளை முன்னெடுப்பதே சிறந்தது என்று ஜெயானந்தமூர்த்தி கூறிய பொழுதுகூட, அதனை அவரது மக்கள் நலப் பாங்கின் வெளிப்பாடாகவே பலர் கருதினார்கள். கடந்த ஆண்டு சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலுக்கான நாள் நெருங்கிய பொழுது, மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றும் வகையில் தமது வாக்குகளைத் தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜெயானந்தமூர்த்தி அறிக்கை வெளியிட்ட பொழுதுகூட, அதனை யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இன்று தாயகம் திரும்பி, மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு உகந்த சூழல் மைத்திரி அரசாங்கத்தின் ஆட்சியில் ஏற்பட்டுள்ளது என்று ஜெயானந்தமூர்த்தி அறிவித்த பின்னர் தான் அவர் அன்று கூறிய ஒவ்வொரு வார்த்தைகளின் அர்த்த பரிமாணங்களையும் பலரால் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

ஜெயானந்தமூர்த்தி தாயகம் திரும்பியது எவருக்கும் மன வருத்தம் அளிக்கும் விடயம் அல்ல. அங்கு மக்களுக்கான பணிகளை அவர் முன்னெடுக்க விரும்புவதிலும் எந்தத் தவறும் கிடையாது. அங்கிருந்தவாறு தமிழீழ தேசிய விடுதலைக்காகவும், இனவழிப்பிற்கு எதிரான பன்னாட்டு நீதி விசாரணைக்காகவும் அவர் குரல் கொடுப்பாராக இருந்தால், அதனை முதலில் வரவேற்பவர்கள் நாமாகவே இருப்போம். ஆனால், மைத்திரி அரசாங்கத்திற்கு அவர் நற்சான்றிதழ் அளித்திருப்பதைப் பார்க்கும் பொழுது, இவ்வாறெல்லாம் அவர் இனிச் செய்வார் என்று தோன்றவில்லை.

நல்லிணக்கத்தின் பெயரிலும், யதார்த்தத்தின் பெயரிலும் அரசியல் செய்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்தைக் குழிதோண்டிப் புதைக்க முற்படுவோரின் வரிசையில் ஜெயானந்தமூர்த்தியும் இனி அமர்ந்திருப்பார் என்றே கருத வேண்டியுள்ளது.

ஆனாலும் ஜெயனாந்தமூர்த்தி போன்ற பலரைக் கண்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், அவரது நல்லிணக்க ‘யதார்த்த’ அரசியலால் துவண்டு போய் விடப் போவதில்லை. அடக்குமுறைகள் தொடரும் வரை அவற்றுக்கு எதிரான விடுதலைப் போராட்டங்களும் தொடரும் என்ற வரலாற்று நியதிக்கு இணங்க, தமிழீழத் தனியரசுக்கான அரசியல் போராட்டம் அதே வீச்சுடன் நகரத்தான் போகின்றது.

ஆடுகள் வழிதவறிப் போகலாம். புலித்தோல் அணிந்த ஓநாய்களின் வேசங்கள் கலையலாம். ஆனாலும் சத்தியத்தின் சாட்சியாக நிற்கும் மாவீரர்களின் ஈக வரலாறு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை என்றோ ஒரு நாள் அதன் இலக்கில் நிச்சயம் கொண்டு போய் விடும்.
« PREV
NEXT »

No comments