Latest News

April 29, 2016

அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்! சீமான்
by admin - 0

கன்னியாகுமரியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வந்திருந்தார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
இந்தத் தேர்தலில், உங்கள் கட்சிக்கான வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?
மாற்றத்துக்கான களமாகத்தான் இந்தத் தேர்தலை, நாம் தமிழர் கட்சி பார்க்கிறது. நீண்ட காலமாகத் தமிழர் நிலத்தை தமிழர் ஆளவில்லை. தமிழர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. சாதி, மத மோதல்களால் தமிழர்களைப் பிரித்து வைத்திருக்கிறார்கள். அதனால், தமிழர்கள் அடிமையாக வாழ வேண்டிய சூழல் இருந்தது. தமிழன் தன்னை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வாய்ப்பு இப்போது உருவாகி இருக்கிறது.
தமிழனைத் தமிழன்தான் ஆளவேண்டும் என்கிற கோஷத்தை முன்வைக்கக் காரணம் என்ன?
தலைவனாக யார் வேண்டுமானலும் இருக்கலாம். சேவை செய்யலாம். அதைத் தான் விஜயகாந்த், வைகோ போன்றவர்களிடம் சொல்கிறேன். தலைவனாக இருந்து சேவை செய்யுங்கள். ஆனால், தமிழனை ஆள நினைக்காதீர்கள்.
பெரியார் என்ன சொன்னார். ஆளுற உரிமை பச்சைத் தமிழன் காமராஜருக்குதான் உண்டு. எனக்குச் சேவை செய்கிற உரிமைதான் உண்டு என்று சொன்னார்.
என்னை மற்றவர்கள் ஆண்டால், நான் அடிமை. என்னை நான்தான் ஆளவேண்டும். தமிழ் மண்ணை தமிழன்தான் ஆளவேண்டும்.
தமிழன் ஆட்சி செய்திருந்தால் அணு உலை வந்துருக்குமா? ஆற்று மணலை அள்ள முடியுமா? மலையைக் குடைய முடியுமா? நிலத்தடி நீரை உறிஞ்ச முடியுமா? காட்டை அழித்து மரங்களை வெட்ட முடியுமா? முடியாது.
பெரியார் சொன்னதைப் போல், தமிழனைத் தமிழன்தான் ஆள வேண்டும். இது கோஷம் அல்ல... எங்கள் உரிமை.
அப்படியென்றால், திருமாவளவன் தமிழர்தானே? அவரைப் போன்ற தமிழர்கள் பலரும் உங்களோடு அணி சேராததற்கு என்ன காரணம்?
என்னை சின்னப் பையன் என்று நினைத்திருக்கலாம். இவன் என்னடா கட்சினு சொல்லுறான், ஆட்சினு சொல்லுறான் என நினைத்திருக்கலாம். சமூக நீதி பேசுபவர்கள் எத்தனை ஆதித் தமிழருக்கு சீட் கொடுத்திருக்காங்க? நான் 17 சீட் கொடுத்திருக்கேன்.
குயவர், பொற்கொல்லர், சலவைத் தொழிலாளி என எல்லாச் சமூகங்களுக்கும், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கும் சீட் கொடுத்திருக்கேன். மற்றவர்களால் அதைச் செய்ய முடியலையே. நிச்சயமாக அவங்க எங்களோட இணைய வருவாங்க.
அன்புமணி, முதல்வர் கனவுடன் இருக்கிறாரே?
விடுதலைச் சிறுத்தைகளையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் எங்கள் உறவுகளாகத்தான் பார்க்கிறோம். எங்கள் மண்ணை ஆளவேண்டும் என்று விஜயகாந்தே நினைக்கும் போது, அன்புமணி ஆசைப்படுவதில் தப்பே இல்ல. அன்புமணி முதல்வரானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
அ.தி.மு.க., தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தே.மு.தி.க தானே பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியை தமிழக மக்கள் அப்படி பார்க்கவில்லையே?
விஜயகாந்த் அரசியலுக்கு வந்த சூழல் வேறு. நான் வந்த சூழல் வேறு. இது எங்களுக்கான காலம். மாற்றத்துக்கான நேரம். கட்சி தொடங்கிய ஆறு மாதங்களில் கேஜ்ரிவால் ஆட்சிக்கு வரவில்லையா? மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களைத் தூக்கி வீசிவிட்டு, மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வரவில்லையா?
தமிழ்நாட்டில், கீழே இருக்கும் தமிழன், நாளைக்கு மேலே வருவான். மேலே இருக்கும் திராவிடன் கீழே போவான்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரக் கூட்டங்களுக்கு மக்கள் அழைத்துச் செல்லப்படும் விதம் குறித்து கடும் விமர்சனங்கள் வந்துள்ளன. அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மொழிப்போரில் என் சொந்தங்கள் இறந்த போது, கடன் தொல்லையில் செத்தார்கள் என்றும், வயிற்று வலியால் செத்தார்கள் என்றும் பக்தவத்சலம் சொன்னார்.
தமிழினப் படுகொலை நடந்தபோது, முத்துக்குமார் போன்ற தம்பிகள் இறந்த போது, குடும்பச் சண்டையிலும், கடன் தொல்லையிலும் இறந்தார்கள் என்று கருணாநிதி சொன்னார்.
இப்போது, என் மக்களை, உடல்நிலை சரியில்லாமல் இறந்தார்கள் என்று ஜெயலலிதா சொல்கிறார்.
உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் தலைநகரை மாற்றுவேன் என்று சொல்லி வருகிறீர்களே?
என் பதவி ஏற்பு நிகழ்ச்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மக்களோடு மக்களாகத்தான் நடக்கும். நிர்வாகம், தற்காலிகமாக ஜார்ஜ் கோட்டையில் நடக்கும்.
தலைநகரைத் திருச்சிக்கும், தஞ்சாவூருக்கும் இடையில் என் சோழப் பாட்டன் ஆண்ட, நிர்வகித்த உறையூரில் அமைப்பேன். அங்குதான் தலைமைச் செயலகம் செயல்படும். அங்கிருந்துதான் ஆட்சி நடக்கும்.
நன்றி : Vikatan
« PREV
NEXT »

No comments