Latest News

March 30, 2016

தற்கொலை அங்கி மீட்பு- முன்னாள் போராளி கைது போராளிகளை பலிக்கடாவாக்கும் படலமா?
by admin - 0

 சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து தற்கொலை அங்கி மற்றும் கிளைமோர் உட்பட ஆயுதங்கள் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றப்பட்டு உள்ளன.

குறித்த வீட்டில் இருந்த நபர்  தப்பி சென்று இருந்த நிலையில் கிளிநொச்சி வன்னேரி பகுதியில் வைத்து புதன் கிழமை மதியம் கிளிநொச்சி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,  

குறித்த வீட்டினுள் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு  இருக்கின்றன என சாவகச்சேரி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை சுற்றி வளைத்தனர். 

குறித்த வீட்டில் இருந்த நபர் மன்னார் பகுதியை சேர்ந்தவர் ஆவார். மறவன்புலவில் வாடகைக்கு எடுத்து அவருடைய மனைவி மற்றும் தந்தையார் உடன் இருந்துள்ளார். பொலிசார் வீட்டை சுற்றி வளைத்ததும் வீட்டில் இருந்து அவர் தப்பி சென்றுள்ளார்.


அதனை அடுத்து வீட்டினுள் நுழைந்த பொலிசார் வீட்டினை சோதனை இட்ட பொழுது, தற்கொலை அங்கி ஒன்று, கிளைமோர் குண்டுகள் 4, கிளைமோர் குண்டுக்கு பயன்படுத்தும் பற்றரிகள் 4, வெடி மருந்து 12 கிலோ, 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி ரவைகள் 100 , மற்றும் சிம்கார்ட் 5 என்பன பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து வீட்டில் இருந்த ( தப்பியோடிய நபரின்) தந்தையார் மற்றும் மனைவியிடம் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டார்கள். 

அத்துடன் தப்பி சென்ற நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்தனர். 


அந்நிலையில் புதன் கிழமை காலை கிளிநொச்சி வன்னேரி பகுதியில் சந்தேக நபர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கிளிநொச்சி பொலிசாரின் உதவியுடன் சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார், 

கைது செய்யப்பட்டுள்ள நபர் 31 வயதுடைய எட்வேர்ட் ஜூட் எனும் நபராவார் எனவும் இவர் ஒரு முன்னாள் விடுதலைப்புலிகளின் போராளி எனவும் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டவர் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் விசாரைனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இதேவேளை யாழ்.நல்லூர் யமுனா எரி பகுதியில் உள்ள வெற்றுக் காணிக்குள் வீடு கட்டும் நோக்குடன் அத்திவாரம் வெட்டிய  போது மூன்று பரல் வெடிமருந்து கடந்த திங்கட்கிழமை மீட்கப்பட்டன.அவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் வைத்து அழிக்கப்பட்டன.
« PREV
NEXT »

No comments