Latest News

February 25, 2016

சந்தா்ப்பம்கிடைத்தபோதெல்லாம் சமாதானத்துக்கானவாசல் கதவைத் திறந்தவர்கள் தமிழர்கள் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்பி உரை
by admin - 0

நேற்று பாராளுமன்றத்தில்  புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இடம்பெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் முடிவடையப்போகிறது. நல்லாட்சி அரசாங்கமென்று கூறப்படும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. ஆயினும் தமிழ் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க பெரும் சாதகமான மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. இயல்பு வாழ்வுக்காக எமது மக்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள். 

வடக்கு ,கிழக்கில் சுமார் 95,000 விதவைகள் வாழ்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான சிறார்கள் தமது எதிர்காலம் தொடர்பான கேள்விக்குறியோடு வாழ்கிறார்கள். 1,46,679 பேருக்கு என்ன நடந்ததென்பது தெரியாமல் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஏக்கத்தோடு வாழ்கிறார்கள். காணாமற்போகச் செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்ததென்பதை அறியுமுகமாக அவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் தொடர் போராட்டங்களில ஈடுபட்டுள்ளார்கள். எமது பகுதிகளில் இராணுவ ஆக்கிரமிப்பு இன்னமும் தொடர்கின்றது. மாற்றத்துக்காக வாக்களித்த மக்கள் தம்மை அரசாங்கம் மறந்துவிட்டதா? எனக் கேள்வி எழுப்புகிறார்கள். "எம்மை எம்மண்ணில் நிம்மதியாக, கெளரவமாக, சுதந்திரமாக வாழவிடுங்கள்" என்றே எம்மக்கள் கேட்கிறார்கள். தமிழர்கள் வன்முறை மீதோ, போரின் மீதோ விருப்புக் கொண்டவர்களல்லர்.எமது தேசத்தின்மீது திணிக்கப்பட்ட போருக்குள் வாழ நாம் நிர்ப்பந்திக்கப்பட்டபோதும் சந்தா்ப்பம் கிடைத்தபோதெல்லாம் சமாதானத்துக்கான வாசல் கதவைத் திறந்தவர்கள் தமிழர்கள் என்பதை  அவலங்களைச் சுமந்து வலிகளோடும் வேதனையோடும் வாழும் மக்களின் பிரதிநிதியாக நான் சொல்கிறேன். 

கட்டமைப்புசார் இன அழிப்பு எம்மண்ணில் தொடரும்வரை, அடக்குமுறையும் ஆக்கிரமிப்பும் எமது மண்ணை விட்டகலும்வரை எமது இனத்தின் இருப்புக்கும் அதன் அடையாளத்துக்குமான ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் தொடரும். அதேவேளை ஏனைய இனங்களின் ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதிலும் நாம் அக்கறையோடும் கரிசனையோடும் இருக்கிறோம். இலங்கை பல மொழிகளை, பல இனங்களை, பல மதங்களை பல பண்பாடுகளைக் கொண்ட ஒரு நாடு என்பதை எழுத்தில் மட்டும் கொண்டிராமல் அன்றாட வாழ்விலும் நடைமுறைப்படுத்திக் காட்டுவதற்கான சூழல் எழுந்துள்ளது. இதனை வெற்றிகரமாக அமுல்படுத்தாமல்போனால் இலங்கைத் தீவில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது. அத்துடன் நல்லிணக்கமோ அல்லது நிலையான சமாதானமோ ஏற்படப்போவதில்லை. அதேவேளை நீதியோ பொறுப்புக்கூறலோ இல்லாமல் நிலையான அமைதியும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் இந்தத் தீவில் ஏற்படப்போவதில்லை என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். ஆகவே அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை முன்னெடுக்கின்ற சமதருணத்தில் போரின்போது சர்வதேச சட்டமீறல்களில் ஈடுபட்டவர்களை நீதியின்முன் நிறுத்தி அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்பட வேண்டும். 

போருக்குப் பின்னரான நிலைமாற்றுக் கால நீதி நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்ட பல சர்வதேச நாடுகள் எங்கள் கண்களின் முன்னே உதாரணங்களாக விரிந்துகிடக்கின்றன. அந்த வகையில் ஜனநாயக ரீதியில் உருவான ஆட்சி மாற்றத்தையும் அதனடிப்படையிலான அரசியல் மாற்றத்தையும் தொடர்ந்து நிலைமாற்றுக் கால நீதிச் செயற்பாடுகள் இலங்கைத் தீவில் ஆரம்பித்திருக்க வேண்டும்.

 இருப்பினும் அதற்கான இதயசுத்தியுடன்கூடிய முன்னெடுப்புக்களை இதுவரை அவதானிக்க முடியவில்லை. அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவில் ஐந்து நாளிலும் பெருவில் ஒரு மாதத்திலும் சிலியில் இரண்டு மாதங்களிலும் கிழக்குத் திமோரில் நான்கு மாதங்களிலும் சியராலியோனில் சுமார் எட்டு மாதங்களிலும் நிலைமாற்றுக் கால நீதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இலங்கையில் அத்தகைய விரைவுத் தன்மையையோ அல்லது அதற்கான அரசியல் திடசங்கற்பத்தையோ காணமுடியவில்லை. அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை இதுவரை முன்னெடுக்கவில்லை. இது பாதிக்கப்பட்டு நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஆத்திரத்தையும் ஏமாற்றத்தையும் உண்டுபண்ணியுள்ளது என்பதை இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அத்துடன் எந்த காரணங்களுக்காகவும் நீதி மறுக்கப்படக்கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

ஆகவே புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பானது போர்க்குற்றம் மானுட குலத்துக்கு எதிரான குற்றம் மற்றும் இன அழிப்பு போன்ற சர்வதேச சட்ட மீறல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்க வேண்டும்.  இத்தருணத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகப் போராடுகின்ற அல்லது அத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயற்படுகின்ற சிங்கள சகோதர சகோதரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு ஏனைய முற்போக்குச் சக்திகளையும் நீதியின் பெயரால் ஒன்றிணையுமாறும் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன். அதேவேளை சிங்கள மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது நாம் அதற்கெதிராகக் குரலெழுப்புவோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனவும் தெரிவித்தார்.

« PREV
NEXT »

No comments