Latest News

February 21, 2016

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில்
by admin - 0

நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் இன்றுமுதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்பிரகாரம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். மேலும் மகஸின் சிறைச்சாலையின் ஜே பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒரு பெண் உட்பட 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.கரவெட்டி வடக்கு கரணவாயைச் சேர்ந்த மதியரசன் சுலக்சன், நாவலப்பிட்டி மக்கும்பரவைச் சேர்ந்த கணேசன் சந்திரன் ஆகியோர் இன்று முதல் தமது விடுதலை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அதேவேளை பிரமசகாயம் உதயகுமார், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், நடேஸ் குகநாதன், மு.சிவநாதன், மா.நீதிநாதன், க.வேதநாயகம், ந.தர்மராஜா, சு.ஞானசீலன், தயாபரன், செல்லத்துரை கிருபானந்தன், தி.மனோகரன், யோசப் செபஸ்சியான், சுப்பிரமணியன் கபிலன், இராசதுரை திருவருள், இரவீந்திரன் மதனி ஆகியோர் நாளை செவ்வாய்க்கிழமை மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர்.
அரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறித்த அறிவிப்பானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசுரிய, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரத்திலுள்ள இரு கைதிகளின் நிலை

அநுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மதியரசன் சுலக்சன் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஓமந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் பூசா தடுப்பு முகாமிற்கு அனுப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் மீது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் பிரகாரம் 2013ஆம் ஆண்டு கொலைக் குற்றச்சாட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் குற்றப்பத்திரிகை மீளப்பெறப்பட்டபோதும் தொடர்ந்தும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கு தவணைகள் ஒத்திவைக்கப்பட்டவண்ணமுள்ளன.

பாராளுமன்றில் பிரேரணை

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கொண்டுவரவுள்ளார்.

ஆட்சிமாற்றதின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டங்களை இரண்டு தடவைகள் மேற்கொண்டிருந்தபோது பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தொடர்ந்தும் காலதாமதங்களே காணப்படுகின்றன. அத்துடன் அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்தும் விமர்ச்சிக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய சட்டமா அதிபர் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும், விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் மீண்டும் அரசியல் கைதிகள் தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென்பமை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளமை குறிப்பித்தக்கது
« PREV
NEXT »

No comments