Latest News

February 29, 2016

சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகை: 500 பேர் கைது
by admin - 0

தமிழக மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதை கண்டித்தும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், நிம்மதியாக மீன்பிடிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அனைத்திந்திய மீனவர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பாரதி தலைமை தாங்கினார். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ம.தி.மு.க. துணை செலயாளர் மல்லை சத்யா, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹருல்லா, காங்கிரஸ் இயத்துல்லா, த.மா.கா. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். 

போராட்டத்தையொட்டி தூதரகம் முன்பு இரும்பு தடுப்பு கம்பிகள் போடப்பட்டு இருந்தன. நூற்றுக்கணக்கான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மீனவர்கள் தடுப்பு கம்பியை தள்ளிக் கொண்டு தூதரகத்தை முற்றுகையிட செல்ல முயன்றனர். 

இதனால் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கு பதட்டமும் பரபரப்பும் காணப்பட்டது. 

போராட்டத்தில் திடீரென ஒரு பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார். அவரை உடனே போலீசார் தடுத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். 

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 500–க்கும் மேற்பட்ட மீனவர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள சமுதாய கூடத்திற்கு அழைத்து சென்றனர். 

முற்றுகை போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் பாரதி கூறியதாவது:– 

இலங்கை நீதிமன்றம் விடுவித்த 78 விசைப்படகுகளையும் 21 மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. சேதம் அடைந்த 18 படகுகளுக்கும் நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

« PREV
NEXT »

No comments