Latest News

January 15, 2016

ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற இடமளியுங்கள் : கயந்த
by admin - 0

ஊடகவியலாளர்களின் பணிகளுக்கு யாரும் இடையூறு செய்யக் கூடாது என்றும், அவ்வாறு இடையூறு செய்பவர்கள் குறித்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலார்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, எம்பிலிபிட்டிய நீதிமன்றில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் தொடர்ந்தும் பதில் கூறுகையில்,

‘தங்களது கடமைகளை சுயாதீனமான முறையில் சுதந்திரமாக மேற்கொள்வதற்காகவே அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் ஊடகவியலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் எம்பிலிபிட்டிய நீதிமன்றில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட இடையூறு குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி உரிய முறையில் விசாரணைகளை நடத்தவுள்ளதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க உறுதியளித்துள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெற இடமளிக்க முடியாது. இதனைத் தடுக்கவேண்டும். எம்பிலிப்பிட்டி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதன் பின்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் கூறினார்.

எம்பிலிபிடிய விவகாரம் தொடர்பில், அண்மையில் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அறிக்கையிடுவதற்காக சென்ற ஊடகவியலர்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டது.
இதன்போது, ஊடகவியலாளர்களின் குறிப்பு புத்தகங்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பிடிங்கிச் சென்றிருந்தார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments