Latest News

January 31, 2016

கட்சிக்கான விசுவாசம் என்பது சிலரின் கண்களை மூடிவிட்டது!- யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் பேச்சு
by admin - 0

கட்சிக்கான விசுவாசம் என்பது சிலரின் கண்களை மூடிவிட்டது!- யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் பேச்சு



அரசியல் தீர்வு சம்பந்தமான திட்ட வரைவு சமர்ப்பித்தல் தொடர்பில் 31.01.2016 அன்று மாலை 03.00 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆற்றிய முழுமையான உரை...

குருர் ப்ரம்மா …………

இணைத்தலைவர்களே, தமிழ் மக்கள் பேரவையினரே, மற்றும் இங்கு வந்திருக்கும் எனதினிய
சகோதர சகோதரிகளே,

இன்று ஒரு முக்கியமான கட்டத்தைத் தமிழ் பேசும் மக்களாகிய நாம் அடைந்துள்ளோம். தமிழ் மக்கள் பேரவையினர் குழு அமைத்து குழுவில் அங்கம் வகிக்கும் எமது அங்கத்தவர்கள் படித்து, ஆய்ந்தறிந்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமான ஒரு திட்ட வரைவைத் தயாரித்துள்ளார்கள்.

வேலைப்பழுக்கள் காரணமாக என்னால் எந்தவொரு கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் எனது மாணவர் திரு.புவிதரன் தலைமையில் இக்குழு தனது கடமைகளைச் செய்தமை மனமகிழ்வை அளிக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்வதைத் தடுக்கும் முகமாக எங்கள் வடமாகாணசபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் ஒரு கூட்டம் நடத்தி எனக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு.இரா சம்பந்தன் அவர்கள் மக்கள் மட்டத்திலே அரசியல் ரீதியான சிந்தனைகளை ஏற்படுத்தி, அரசியல் யாப்பு பற்றிய தமது கருத்துக்களை மக்கள் எடுத்துக் கூற வழியமைப்பது வரவேற்கத்தக்கதே என்று கூறிய பின்னர் கூட எமது மதிப்புக்கும் அன்புக்கும் பாத்திரமான சிலர் சேர்ந்து இப்பேர்ப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது விந்தையாக இருக்கின்றது.

இவை தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரான நடவடிக்கைகளா அல்லது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகளா என்று புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேராதரவாளர்கள் பலர் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பதை இவர்கள் அறியவில்லையோ என்று எண்ண வேண்டியுள்ளது.

இன்று காலை எமது தெருக்கள் சம்பந்தமான விடயங்களைப் பரிசீலிக்கும் எமது உறுப்பினர் திரு.சிவயோகம் அவர்கள் என்னைச் சந்தித்து நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போவதைத் தாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.
எங்கள் நடவடிக்கைகள் எந்தத் தருணத்திலும் கூட்டமைப்புக்குப் பாதகமாக அமையாதென்றும் அனுசரணையாகவே அமையும் என்ற உறுதி மொழியை அவருக்கு வழங்கினேன்.

அத்துடன் நாளை வடமாகாணசபையும் திட்ட வரைவொன்றைத் தயாரிக்கக் குழு கூடுகின்றது. அது என் தலைமையில் கூடுகின்றது. 2013ம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் எங்கள் வரைவு தயாரிக்கப்படும்.

எது எவ்வாறிருப்பினும் தமிழ் மக்களின் எதிர்காலமே எமது கரிசனையாகும். இன்று வெளியிடப்பட இருக்கும் திட்ட வரைவு மட்டுமே தமிழ் மக்களின் ஒரேயொரு தீர்வு என்று நாங்கள் கூறவில்லை. கூறவும் முடியாது. பலவிதமான தீர்வுகளைப் பலரும் முன்வைக்கலாம்.
ஆனால் இதுவரை காலமும் எமது அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் தீர்வுத் திட்டங்களை உருவாக்கி மக்களிடையே பரப்பி மக்களின் கருத்துக்களை அறிய எவருமே முன்வந்ததில்லை. 

தமிழ் மக்கள் பேரவை அத்தகையதொரு மகத்தான கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பது சிலருக்கு ஒரு வேளை மனத்தாக்கத்தைக் கொடுத்திருக்கலாம்.
நாங்கள் அதைச் செய்யவில்லையே என்ற ஒரு மனக் குறையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய கருத்துரைகள், தீர்மானங்கள் கட்சி ரீதியாக மட்டுமே வெளிவரவேண்டும் என்று எதிர்பார்ப்பது வருத்தத்திற்குரியது. மக்களுக்காகக் கட்சிகள் இருக்கின்றனவே ஒளிய கட்சிக்காக மக்கள் இருக்க முடியாது.

கட்சிகள் மக்கள் மனமறிந்து நடந்து கொள்ள வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் நலம் சார்ந்த விடயங்களில் மக்களின் மனமறிய முற்படாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படக் கூடாது.

கடந்த கால கட்சி அனுபவங்களை முன்வைத்து தமிழ் மக்களின் வருங்கால வாழ்வைப் பாழடித்து விடாதீர்கள் என்று யாவரிடமுந் தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழ் மக்கள் பேரவை கட்சியாக மாற்றப்படமாட்டாது, அரசியல் ரீதியாகச் செயற்படமாட்டாது என்ற உத்தரவாதம் தந்த பின்னரே நான் இதில் கலந்து கொண்டேன்.

தமிழ் மக்களின் புத்திஜீவிகள் மக்கள் சார்பாக நடவடிக்கைகள் எடுத்து தமிழ் மக்களுக்கு நன்மை தரக்கூடிய அரசியல் வழிமுறைகளை எடுத்தியம்புவது எந்த வித்திலும் பிழையென்று யாராலும் கூற முடியாது.

உண்மையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் மற்றைய சகல கட்சிகளும் சேர்ந்து தமிழ் மக்கள் பேரவையை ஊக்குவிக்க வேண்டுமேயொழிய எதிர்ப்பைத் தெரிவிக்கக் கூடாது.

கட்சிக்கான விசுவாசம் என்பது சிலரின் கண்களை மூடிவிட்டது. ஆனால் வடகிழக்குமாகாண மக்களின் வருங்காலமே முக்கியம். வழி வழியாக வரவிருக்கும் எமது வாரிசுகளின் வருங்கால வாழ்க்கையே எமக்கு முக்கியம். அதற்காக எந்த ஒரு கடினமான பாதையில் பயணிக்கக்கூட நாங்கள் தயங்கக் கூடாது.

அரசாங்கங்கள் தயாரிக்கும் அரசியல் யாப்பில் தமிழ் மக்களின் தேவைகள், அபிலாசைகள், நோக்குகள், உரிமைகள் யாவையும் உள்ளடக்கப்படாவிடில் அத்தகைய அரசியல் யாப்பு ஒரு போதும் நன்மை பயக்கப் போவதில்லை.

உதாரணத்திற்கு 1981ம் ஆண்டில் பேசப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகளே எமக்குப் போதும் என்று கட்சி ரீதியாக நாங்கள் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் வலியுறுத்தல்களுக்குக் கட்டுப்பட்டு திணறிக் கொண்டிருக்கின்றது. அரசங்தத்தினுள் பிளவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் “எதைத் தந்தாலும் தாருங்கள் நாம் அதை ஏற்றுக் கொள்வோம்” என்ற மனோ பக்குவம் எங்களிடம் இருப்பது சரியென்று எனக்குப் படவில்லை.

எமது அபிலாசைகள், நோக்குக்கள், உரித்துக்கள், எதிர்பார்ப்புக்கள் என்பன பெரும்பான்மையின மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். சர்வதேச அமைப்புக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.
இவற்றை நாங்கள் எமது சரித்திர ரீதியான பின்னணியிலிருந்தே கூறுகின்றோம். நாம் எமது நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்களே. அண்மைக் காலங்களில் அரச உள்ளீடுகளால் மக்களின் பரம்பல் மாறுபடவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருப்பினும் தமிழ்ப் பேசும் மக்கள் வடகிழக்கில் பெரும்பான்மையான மக்களே.

இதனைச் சென்ற நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் அப்போதிருந்த இந்நாட்டின் பெரும்பான்மையின மக்கட் தலைவர்கள் கூட ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
தமிழ்ப் பேசும் மக்கள் 2000 வருடங்களுக்கு மேல் வடகிழக்கு மாகாணங்களில் நிலைபெற்றிருக்கின்றார்கள். சோழர் காலத்தில் 10ம் நூற்றாண்டில் மட்டும் வந்த வந்தேறு குடிகள் அல்ல அவர்கள். எமது தொடர் பாரம்பரியம் 2000 வருடங்களுக்கு மேலானது.

இதனை மனதில் நிறுத்தி வடகிழக்கு மாகாணங்களில் வாழும் எமது மக்களின் சரித்திர ரீதியான உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பதே எமது அவா.
அவற்றை மனதில் முன்னிறுத்தியே இன்றைய வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்புக் குழு கூறியுள்ளது. அதனைப் பரிசீலித்துப் பாரப்பது எமது கடப்பாடாகும். சில இடங்களில் முரண்பாடுகள் காணப்படலாம். ஒவ்வாத தன்மை எழக்கூடும்.
மேலதிக ஏற்புக்கள் தேவை என்று மனதிற்குப் படலாம். இவை அனைத்தும் மக்களால் பரிசீலிக்கப்பட்டுத் தயாரிப்புக் குழுவிற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். நான் கூட அவ்வாறான எனது கருத்துக்களை வெளியிடுவேன்.

இந்த வரைவை யார் தயாரித்தார்கள் என்பதிலும் பார்க்க எந்தளவுக்குக் குறித்த வரைவு எமது தமிழ் மக்களின் உள்ளக் கிடக்கைகளை எதிர்பார்ப்புக்களைப் பிரதிபலிக்கின்றது என்பதே முக்கியம்.

எமது மக்கள் மனமறிய முதல் அடி எடுத்து வைத்து விட்டோம் என்பது தான் இன்றைய நிகழ்வின் முக்கியத்துவம். வரைவில் சில இடங்களில் மாற்றுச் சொற் பிரயோகங்கள் அமைய இடமளித்து குறிப்புரைகள் தரப்பட்டுள்ளமை இவ்வரைவின் சிறப்பம்சமாகும். அத்துடன் அரசியல் யாப்பு தயாரிக்கத் தொடங்கமுன் தமிழ் மக்கட் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு பூர்வாங்க உடன்பாடு இடம் பெற வேண்டும் என்பதும் ஒரு சிறப்பம்சமாகும்.

எமது வரைவு முற்றிலும் மாற்றப் பட வேண்டும் என்று கூட மக்கள் விரும்பலாம். அத்தகையதொரு நிலை வந்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வோம். காரணம் இந்த செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை அவசியம்.
ஜனநாயக வழிமுறை அவசியம். தமிழர் நலம் பேணும் ஆத்மார்த்த எதிர்பார்ப்பும் அவசியம். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் நலம் தேடும் ஒரு புனித கைங்கரியத்தில் நாம் யாவரும் ஈடுபட்டுள்ளோம் என்பதை நாம் மறத்தலாகாது.

வரைவு பற்றி நான் ஏதும் இத்தருணத்தில் கூற வேண்டிய அவசியமில்லை. அதைப் பற்றித் தயாரிப்புக் குழு அங்கத்தவர்கள் பேசுவார்கள்.

ஆனால் ஓரிரு கவனிப்புக்களை நான் கூற வேண்டிய கடப்பாடு உடையேன். ஆங்கிலத்தில் catalyst என்று ஒரு சொல் இருக்கின்றது. அதாவது ஒரு செயற்பாட்டைக் கூடிய விரைவில் நடைபெற வைக்கும் ஒரு பொருள் என்று அர்த்தம். எமது தமிழ் மக்கள் பேரவை பல நல்ல நடவடிக்கைகளுக்கு முன்னோடியாகப் பரிணமித்துள்ளது.

எமது தமிழ் மக்களிடையே அரசியல் யாப்பு ரீதியான சிந்தனைகளை மேலோங்கச் செய்துள்ளது. அதாவது வெறும் கட்சி அடிப்படையில் சிந்திக்காது தமிழ் மக்களின் தூரகால நலம் பற்றிச் சிந்திக்க வைத்துள்ளது.
எமது தமிழ் மக்கள் பேரவை எந்தக் கட்சிக்குஞ் சார்பாகவோ எதிராகவோ நடக்க முன்வராததால் அவர்கள் வெளிக்கொண்டு வந்திருக்கும் வரைவை மக்கள் யாவரும் சுதந்திரமாகவும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்க வழி வகுத்துள்ளது.

பல்கட்சியினர் பலர் சேர்ந்து கலந்துறவாடியதால் கட்சிகளுக்கு அப்பால் நின்று கடமையாற்ற வழி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்து அரசியல் ரீதியாக இதுவரை செயற்பட்ட தமிழ் மக்களின் கட்சிகள் யாவும் மக்கள் மனோநிலைக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டிய ஒரு நிலையை எழுப்பியுள்ளது.
அரசியல் யாப்பு மாற்றங்கள் எவ்வளவு முக்கியமானவை, எத்துணை தொடர் விளைவுகள் கொண்டவை, எந்தளவு கடமையுணர்ச்சியுடனும் கண்ணியத்துடனும், கரிசனையுடனும் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பது இப்பொழுது சகலராலும் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

மூன்றாவதாக பெரும்பான்மை தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்குச் செயலுரு கொடுத்துள்ளது. இன்றைய வரைவு என்று கூறலாம். அதாவது எமது தேர்தல் மேடைகளில் சில சொற்களைப் பாவித்துக் கைதட்டல் வாங்கிய காலம் போய் அச்சொற்களின் தாற்பரியம் என்ன, தகைமைகள் என்ன, தத்துவங்கள் என்ன என்றெல்லாம் அலசி ஆராய ஒரு சந்தர்ப்பம் அளித்துள்ளது தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள்.

ஆகவே சொற்களுக்குச் செயலுரு கொடுக்கத் துணைபுரிந்துள்ளது தமிழ் மக்கள் பேரவை. தேசியம் என்றால் என்ன, சுயாட்சி என்றால் என்ன, சமஷ்டி என்றால் என்ன என்று மக்கள் கேட்டு அவற்றிற்கான பதிலைப் பெற்றுக் கொள்ள வழி அமைத்துத் தந்துள்ளது தமிழ் மக்கள் பேரவை.

மேலும் அரசாங்கமானது யாவரிடமும் புதிய அரசியல் யாப்பு வரைவிற்கான கருத்தறியும் ஒரு செயற்பாட்டில் தற்போது ஈடுபட்டிருக்கும் போது எமது செயற்பாடுகள் அதற்கு ஒத்திசைவாக நடந்தேறி வருவது திருப்தியை அளிக்கின்றது. எந்த ஒரு தனி நபரும், சங்கமும், மக்கள் குழுவும், ஏன் கட்சிகளுங்கூட தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்படும் கருத்தாவணத்தை அடிப்படை ஆவணமாகப் பாவிக்க நாம் வழி அமைத்துக் கொடுத்துள்ளோம்.

மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எமது தமிழ் மக்கட் தலைவர்கள் கூட தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்து என்ன என்பதை ஆராய்ந்தறிந்து அதனை வெளிக்கொண்டு வரவுந் தயங்காதிருப்பது எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது.

எமது செயற்பாடு தமிழ்ப் பேசும் மக்கள் கருத்தறிந்து செயற்படும் ஒரு நிலைக்கு அரசாங்கத்தை அழைத்துச் சென்றால் அதுவே எமது வெற்றியென்று கருதலாம். பதின்மூன்றாவது திருத்தமே தீர்வு, அதற்கு மேல் எதுவுந் தரமுடியாது, சமஷ்டியை வழங்க முடியாது என்றெல்லாம் கூறும் ஆளுங்கட்சி அவற்றிற்கப்பால் சென்று எமது மக்கள் மனம் அறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

கட்சிகளை மையமாக வைத்து இப்பிரச்சனையை அணுகாமால் களநிலையை அறிந்து கருத்துக்கு முதலிடம் கொடுத்து சர்வதேச தமிழ்ப் பேசும் மக்களின் ஒருமைப்பாட்டுடனும் எமது தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடனும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் அதாவது வடகிழக்கு மாகாணத் தமிழரும், முஸ்லீம்களும், மலையக மக்களும் நிலையான ஒரு அரசியல் தீர்வைப் பெற எமது இந்த கைங்கரியமானது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்தி என் சிற்றுரையை முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி. வணக்கம்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

« PREV
NEXT »

No comments