Latest News

December 12, 2015

மகன் பிடிக்கப்பட்டதன் பின்னணியில் ஈ.பி.டி.பி இருக்கலாம் : தாய் சாட்சியம்
by admin - 0

ஆயுதம் ஏந்திய நிலையில் தங்களை இராணுவத்தினர் என அடையாளப்படுத்தி வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த என் மகனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதுடன் என்னையும் ஆயுதம் காட்டி மிரட்டினர் என தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.

இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வு இடம்பெற்றது. இந்த அமர்வில் கலந்து கொண்டு சாட்சியமளிக்கும் போதே தாய் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
என் மகன் முத்துலிங்கம் மலரவன் வயது 19( காணாமல் போகும் போது) 2007ஆம் ஆண்டு பங்குனி மாதம் 17ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் கொழும்புத்துறை ஈச்சமோட்டைப் பகுதியில் வைத்து வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த என் மகனை துப்பாக்கிகளுடன் சிவில் உடை தரித்த ஏழு பேர்  எனது மகனை வலுக்காட்டாயமாக அச்சுறுத்தி இழுத்துச் செல்ல முற்பட்டனர். ஆனால் என் மகனை அவர்களுடன் விடாது நீங்கள் கூறும் இடத்திற்கு நானே கொண்டு வந்து விடுகிறேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை என்னை ஆயுதம் காட்டி மிரட்டியதுடன் என் மகனை வலுக்காட்டயமாக இழுத்துச் சென்றனர்.

அடுத்த நாள் காலை மீண்டும் சிவில் உடை தரித்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ஆயுதம் காட்டி அச்சுறுத்தி எங்களை வெளியே செல்லுமாறு கூறிவிட்டு வீட்டுக்குள் புகுந்து தொலைபேசியையும் எடுத்துச் சென்றனர்.

இச்சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரம் கழித்து என் வீட்டுக்குள் நுழைந்து தொலைபேசியை எடுத்துச் சென்ற மூவரையும் ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கண்டேன். உடனே ஈ.பி.டி.பி அலுவலகத்திற்குச் சென்று என் மகன் எங்கே? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் நாங்கள் உங்கள் மகனை கடத்தவில்லை என்று மறுத்துவிட்டனர்.

ஆனால் மலரவனை நாம் தூக்கிவிட்டோம் என்று தனக்கு இராணுவம் தொலைபேசியில் கூறியதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் றீகனின் சகோதரர் என்னிடம் கூறினார். எனவே, எனது மகன் பிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஈ.பி.டி.பி இருக்கலாம்' என்று அத்தாயார் சாட்சியம் அளித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments