Latest News

October 27, 2015

வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தீர்மானம்
by Unknown - 0

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் அதன் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்திருந்தது.

இந்நிலையில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணையின் போது முறைப்பாடு செய்யப்பட்ட வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தற்போது தனியான விசாரணை மேற்கொள்ள குறித்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்கென உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

இக்குழுவின் விசாரணையில் செனல் 4 தொலைக்காட்சி அல்லது இந்த விசாரணை குறித்து ஆர்வமுள்ள தரப்பினர் அளிக்கும் சாட்சியங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் அடுத்த ஆண்டின் முற்பகுதிக்குள் வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவும் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

வெள்ளைக்கொடி விவகாரம், இசைப்பிரியா கொலை தொடர்பில் ஐந்து பேர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணை

வெள்ளைக்கொடிகளுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகள் படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கையின் அரசாங்க பத்திரிகை இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளது

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விசாரணையை நடத்தும் என்று அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைக்கான குழு விரைவில் அமைக்கப்பட்டு சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது செனல்4 தொலைக்காட்சியின் காணொளியும் கருத்திற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைக்காக ஐந்து பேரடங்கிய நீதிபதிகள் குழு அமைக்கப்படும். இந்தக்குழு பல மாவட்டங்களுக்கும் சென்று தகவல்களை திரட்டி தமது அறிக்கையை அடுத்த வருட முதல் பகுதியில் வெளியிடும் என்றும் பரணகம குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்தக்குழு இசைப்பிரியா படையினரால் கைது செய்யப்பட்ட கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும் தமது விசாரணைகளை நடத்தும் என்று பரணகம தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் வெள்ளைக்கொடி ஏந்திவந்த விடுதலைப்புலிகள் கொல்லப்படவில்லை என்று கூறிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments