Latest News

October 03, 2015

ஐநா தீர்மானம் மூலம் தமிழர்களுக்கு வழி பிறந்திருக்கிறது-சம்பந்தன்
by Unknown - 0

ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது, சர்வதேச பங்களிப்புடனான விசாரணையையும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வையும் வலியுறுத்தியிருப்பதனால் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்கு ஒரு வழி பிறந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கின்றார்.

ஐநா தீர்மானம் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருப்பதனால் ஒரு குழப்பமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றதே என்று செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது 'எந்தவிதமான குழப்பத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை' என்று அவர் கூறியிருக்கின்றார்.

சர்வதேச பங்களிப்பு மட்டுமல்லாமல் இந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளவை நிறைவேற்றப்படுவதை மேற்பார்வை செய்கின்ற பொறுப்பும் ஐநா மனித உரிமைகள் பேரவையிடம் அளிக்கப்பட்டிருக்கின்றது என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் குழப்பமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் அதனைச் சரியாக கையாள வேண்டியதே முக்கியம் என்றும் சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றார்.

மூன்று நாட்களாக யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள சம்பந்தன் சனியன்று வளலாய் மற்றும் வலிகாமம் வடக்கில் உள்ள அதியுயர் பாதுகாப்பு பிரதேசத்தின் பல இடங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டிருக்கின்றார்.
இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வலிகாமம் பகுதி மக்கள் அமைதியாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
« PREV
NEXT »

No comments