திருச்சி சிறப்பு சித்ரவதை முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ்குமார் த/பெ ஞானசௌந்தரம் (வயது 37) என்பவர் நேற்றைய முன்தினம் (01.10.2015) தன்னை விடுதலை செய்யும்படி, தனது கையினை அறுத்து தற்கொலைக்கு முயன்ற வேளை அங்குள்ள மற்றைய உறவுகளால் காப்பாற்றப்பட்டு காவல்துறையினர் ஊடாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சுரேஷ்குமார் இடுப்பிற்குக் கீழ் இயங்காதவர். ஏற்கனவே தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்கும்படி பல தடவைகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்து, நீதிமன்றம் அவருக்கு ஒரு உதவியாளரை வைத்துக் கொள்ள அனுமதி வழங்கியபோதும்... திட்டமிட்ட வகையில் தமிழக காவல்துறை யாரையும் அனுமதிக்கவில்லை.
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு பல வருடங்களாக சிறையில் தவித்து வரும் சுரேஷ்குமார், தினமும் அடுத்தவரின் உதவியை நாடியே தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். தனக்கு ஒரு உதவியாளரை நியமிக்கவில்லையே என்ற கவலையிலும், தனது விடுதலைக்காக எந்தவித முயற்சிகளையும் தமிழக அரசு எடுக்காத நிலையிலுமே... உடல் மற்றும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு மனமுடைந்தே நேற்றைய முன்தினம் தனது கையினை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரை இன்று முகாமிற்கு அழைத்து வந்த தமிழக காவல்துறையினர், அதிகாரிகளுக்கு "கொலை மிரட்டல்" விட்டதாக மிகவும் கேவலமாக ஒரு பொய் வழக்கொன்றைப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். சுரேஷ்குமார் தற்கொலைக்கு முயன்ற வேளை எந்தவொரு அரச அதிகாரிகளும் அன்றைய தினம் அங்கிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடுப்பிற்குக் கீழ் இயங்காதவர் அடுத்தவர் உதவியுடனேயே இருசக்கர நாற்காலி வண்டியில் உலாவி வருபவர் எந்த வகையில் கொலை மிரட்டல் விட்டிருக்க முடியும்??? ஒருவரின் வலிகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் மிகவும் கேவலப்படுத்தி பொய்யான வழக்கினைப் பதிவு செய்து சிறையில் அடைப்பது என்பது மிகவும் கீழ்த்தரமான செயலாகும்!!! இவ்வாறான செயல்களைத்தான் பல காலமாக, ஈழத்தமிழர் மீது தமிழக காவல்துறையினருடன் சேர்ந்து தமிழக அரசு செய்து வருகிறது.!
அத்துடன் இன்று (03.10.2015) மூன்றாவது நாளாக விடுதலை வேண்டி உண்ணாவிரதம் இருந்துவரும் மற்றைய உறவுகளையும் மிரட்டி உண்ணாவிரதத்தினை கலைக்கும் விதமாகவே இந்தச் சிறையடைப்பு நாடகத்தை சுரேஷ்குமார் என்ற இடுப்பிற்குக் கீழ் இயங்காதவர் மூலம் அரங்கேற்றி வஞ்சித்துக் கொண்டது தமிழக அரசு!!!
கடந்த 01.10.2015 முதல் தம்மை விடுதலை செய்யும்படி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வரும் மற்றைய உறவுகளை எந்தவொரு அரசு அதிகாரிகளும் இன்றுவரை வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் கிடைத்த செய்தி...
சுரேஷ்குமாரை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்திய காவல்துறையினர் மீது கடிந்து சீற்றம் கொண்டார் நீதிபதி.
சுரேஷ்குமார் மீது "தற்கொலை முயற்சி" மற்றும் "கொலை மிரட்டல்" ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு திருச்சி சித்ரவதை முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர் தமிழக காவல்துறையினர்.
மேற்படி வழக்கை ஆராய்ந்த நீதிபதி "இடுப்பிற்குக் கீழ் இயங்காத ஒரு நபர் எவ்வாறு கொலை மிரட்டல் விட முடியும்" என்றும் "அவருக்கான உதவியாளரை நியமிக்காத பட்சத்திலேயே மனவிரக்தி அடைந்து தனது கையை அறுத்துக் கொண்டார்" எனவும் கூறிய நீதிபதி அவர்கள்.... "இவ்வாறானவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்து நீதியைக் கேவலப்படுத்த வேண்டாம்" என்று கூறியதோடு மிகவும் கோபமடைந்த நீதிபதி அவர்கள் வழக்குப் பதிவு செய்த கைது ஆணையை நிராகரித்து ரத்து செய்தார்.
No comments
Post a Comment