Latest News

October 15, 2015

தயவுசெய்து அம்மாவை விட்டுவிடுங்கள்'' - நெஞ்சை உலுக்கிய மகளின் கதறல்
by admin - 0

அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என வவுனியாவைச் சேர்ந்த யுவதியான சசிதரன் யதிந்தினி கதறியழுதமை அரசியல் கைதிகளது உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் நெஞ்சை உலுக்கியது.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு – கோட்டையில் உறவினர்கள், அரசியல் வாதிகள் சிவில் சமூகப் பிரதிநிதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே இந்த யுவதி கதறியழுத வண்ணம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது அம்மா சசிதரன் தங்கமலர் (வயது 53) அப்பா சசிதரன். அவருக்கு நெஞ்சில் வருத்தங்கள் காணப்படுகின்றன. அதனால் உள்ளுரில் கூலி வேலைக்குச் செல்ல முடியாதென்பதால் கட்டாரில் பாதுகாப்பு உத்தியோகத்தராக உள்ளார்.

நான் குடும்பத்தில் கடைசிப்பிள்ளை. எமது குடும்பம் வவுனியாவில் உள்ளது. நாம் வீடொன்றை வாடகைக்கு வழங்கியதால் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென கூறி அம்மாவை 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி கொண்டு சென்றனர்.

எனது சகோதரர்கள் இருவரும் சகோதரியும் திருமணம் முடித்து விட்டார்கள். நான் அக்காவின் வீட்டில் உள்ளேன். எனது அப்பா தற்போது விபத்தில் சிக்கியுள்ள போதும் அவர் நாட்டிற்கு வந்தால் கைது செய்யப்படுவார் எனக் கூறுகின்றார்கள். ஆகவே அவர் கட்டாரிலேயே உள்ளார்.

எனது அம்மாவை விடுதலை செய்வதற்காக எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டோம். ஆனால் என்ன காரணம் என்று கூறவில்லை. விசாரணை செய்வதாக கூறுகின்றார்கள். நான் இன்று அம்மாவும் இல்லாது அப்பாவும் இல்லாது தனியாக கஷ்டங்களுக்குள் உள்ளாகிக்கொண்டிருக்கின்றேன்.

அக்காவுடன் தற்போது இருந்தாலும் அவருக்கும் குழந்தைகள் இரண்டு உள்ளனர். ஆகவே எத்தனை நாளைக்கு எனது அம்மாவை பிரிந்து இருப்பது? அம்மா வருவார் வருவார் என்று எதிர்பாத்து களைத்துப்போய்விட்டோம். அவரின் விடுதலைக்காக நடைபெறும் அனைத்து விடயங்களிலும் பங்கெடுக்கின்றோம். இன்னமும் எத்தனை நாளைக்கு நான் அம்மாவுக்காக ஏங்குவது. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என்றார்.





« PREV
NEXT »

No comments