Latest News

October 15, 2015

தமிழ்க் கைதிகளின் பிரச்சனைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வு!
by Unknown - 0

இலங்கைச் சிறைச்சாலைகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் பிரச்சனைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமுகமான தீர்வு காணப்படும் என்று நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கின்றது.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளில் 8 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மகசின் சிறைச்சாலைக்குச் சென்று உண்ணாவிரதம் இருந்து வருகின்ற கைதிகளைச் சந்தித்து உரையாடிவிட்டுத் திரும்பிய அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, கைதிகளின் பிரச்சனைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வுகாணப்படும் என்று கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் நீதி அமைச்சருடன் சென்று சிறைக்கைதிகளைச் சந்தித்திருக்கின்றனர்.

நாட்டில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளிலும் சுமார் 150 கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி உண்ணாவிரதம் இருந்து வருவதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தாா்.

இந்த சிறைக்கைதிகளின் விபரங்களை சட்டமா அதிபர், நீதி அமைச்சின் செயலாளர் ஆகியோர் தற்போது திரட்டி வருவதாகவும் அதனடிப்படையில் பிரதமருடனும் ஜனாதிபதியுடனும் கலந்துபேசி இந்த ஆண்டு இறுதிக்குள் பிரச்சனைக்குத் தீர்வு காண இருப்பதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறினார்.

இதனிடையே, உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்க் கைதிகளை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அரசியல்வாதிகள் பலரும் சென்று பார்வையிட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் மற்றும் சிவகச்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன் ஆகியோர் இன்று அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் இன்று அனுராதபுரத்திற்கு சென்று கைதிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இதனிடையே, தமிழ்க் கைதிகளை பொதுமன்னிப்பு அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
« PREV
NEXT »

No comments