Latest News

October 08, 2015

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக இருவர் கைது!
by Unknown - 0

இலங்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக 10 ஆண்டுகள் கழித்து டி.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுளனர்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர் எனப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களான இந்த இருவரையும் 90 நாட்கள் தடுத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்கள் இருவரும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என்று காவல்துறையின் ஊடகப்பேச்சாளரான ருவன் குணசேகர தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது தேவாலயத்திற்குள்ளேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் பிளவு ஏற்பட்டிருந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இந்த படுகொலை சம்பவம் இடம் பெற்றிருந்தது.

விடுதலைப்புலிகளுடன் உறவைப்பேணி வந்தவர் என கூறப்படும் ஜோசப் பரராஜசிங்கம் அவ்வேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றிருந்தார்.

அக்காலப் பகுதியில் கிழக்குப்பகுதியில் பலம்பெற்றிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் குழுவான கருணா அணியினர் மீது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அப்போது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த குற்றச்சாட்டை கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கடுமையாக நிராகரித்திருந்தார்.

தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்களில் பிரதீப் மாஸ்டர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் சார்பில் தெரிவாகி 2013 ஆம் ஆண்டுவரை உறுப்பினராக இருந்தார்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகிக்கொண்ட அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தான் இணைந்து கொள்வதாக அறிவித்திருந்தார்.

« PREV
NEXT »

No comments