Latest News

October 04, 2015

வில்பத்து சரணாலயத்தில் ஐ.எஸ் ஆயுததாரிகள்
by admin - 0

ஐ.எஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்த சிலர் வில்பத்து சரணாலயத்தில் வீடுகளை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் விமல தயாரத்ன தேரர், ஸ்ரீலங்காவிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்ற பலர் ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந்து போரிட்டு வருகின்றனர் என்றும் கூறினார்.

ஐ.எஸ் ஆயுதக் குழுவிற்கு எதிராக மேற்குலக நாடுகள் நடத்திவரும் தாக்குதல்களில் ரஷ்யாவும் அண்மையில் இணைந்துகொண்டது.

இதனை வரவேற்கும் முகமாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் விமல தயாரத்ன தேரர் கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்திற்கு சென்று தூதுவரை சந்தித்து பேசினார்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சிரியாவில் நிலைகொண்டிருக்கும் ஐ.எஸ் ஆயுததாரிகளுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யா இணைந்திருப்பது தொடர்பில் எங்களது வரவேற்பை ரஷ்ய தூதுவரை சந்தித்து இன்றைய தினம் தெரிவித்துக் கொண்டோம்.

ஐ.எஸ் ஆயுதக் குழு இன்று சிரியாவிற்கு மட்டுமன்றி முழு உலகத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக ஐ.எஸ் ஆயுதக் குழு ஸ்ரீலங்காவிலும் செயற்படுகின்றது என்பதை அமெரிக்கத் தூதரகத்திற்கு அண்மையில் வழங்கப்பட்ட மனுவில் தெரிவித்திருந்தோம். அத்துடன் இது குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தோம்.

குருநாகல் – கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந்து போரிட்டு உயிரிழந்தமை மற்றும் அளுத்கம தர்கா நகரில் இடம்பெற்ற கலவரம் என்பன அதற்கான சிறந்த உதாரணங்களாகும்.

இவர் ஒருவர் மட்டுமே ஐ.எஸ் ஆயுதக் குழுவில் இணைந்து போரிடவில்லை. ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற மேலும் பலர் குறித்த ஆயுதக் குழுவில் இணைந்து போரிட்டு வருகின்றனர்.

புத்தளம் வண்ணாத்திவில்லு, வில்பத்து சரணாலயம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தலைமையில் பாரிய காடழிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

இதனை தடுக்கும் முயற்சியில் எமது அமைப்பினரில் சிலர் வில்பத்துவிற்கு சென்றபோது அங்கு முஸ்லிம்கள் எனக்கூறிக்கொண்டு சிலர் வந்தனர். ஆனால் அவர்கள் தமிழ் மொழியிலோ, ஆங்கில மொழியிலோ அல்லது சிங்கள மொழியிலோ, அரபி மொழியிலோ அல்லாமல் வேறு மொழிகளிலேயே உரையாடினார்கள்.

இவ்வாறு ஐ.எஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீலங்காவின் பல பகுதிகளிலும், வில்பத்து சரணாலயத்திலும் வீடுகளை அமைத்துக் கொண்டு அதனை கிராமங்களாக மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை புலனாய்வுப் பிரிவு மற்றும் அரசாங்கம் கவனத்திற்கொண்டு தடுக்க வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments