Latest News

September 24, 2015

தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய்
by admin - 0

பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. 




முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை.

எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.
மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு

இரண்டாயிரம் யூரோ வரை ஊதியம் பெறுகின்ற ஒரு குடும்பத்திற்கு வேலையையும் பணத்தையும் தவிர வேறு எந்த உலக அறிவும் கிடைக்காது. பிட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு கோதுமை மாவை எப்படி எல்லாம் ஊதிப் பெருக்கலாம் என்று தெரிகிற அளவிற்கு தான் வாழும் நாட்டின் வரலாற்றில் சிறு பகுதியாவது தெரிந்திருக்காது. தனது இரண்டாயிரம் ஊதியத்தில் வீட்டு வாடைகைக்காகவோ, வங்கிக் கடனுக்காகவோ 1200 யூரோக்கள் வரை தொலைந்துபோக மிகுதி 800 யூரோவில் ஒருபகுதி மின்சாரக் கட்டணம் தொலைபேசி எனச் செலவழிந்து போக எஞ்சிய பணத்தில் உணவு உடை என்ற எஞ்சிய செலவுகளை முடித்துக்கொள்கிறார்.

இவை அனைத்திலும் சிக்கனமாக வாழ்ந்தால் ஒரு வருடத்தின் முடிவில் இலங்கைக்கோ அல்லது இந்தியாவிற்கோ செல்வதற்கான பயணச் சீட்டிற்குப் பணத்தைச் சேமித்துக்கொள்கிறார்.
இவற்றுள் அனைத்து உண்மைகளும் இலங்கையிலிருப்பவர்களுக்கு மறைக்கப்படுகின்றது. தாம் புலம்பெயர் நாடுகளில் மன்னர்கள் போல வாழ்வதாக பொய்யைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். இதன்மூலம்தங்களை தாங்களே பெருமைப்படுத்தும் அறிவீனமும் மறைந்த நிற்கின்றது

இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பா என்பது செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்ற விம்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாழ்பவர்கள் மன்னர்கள் போல வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற தவறான புனைவுகளின் கனவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பை புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கைக்கு விடுமுறைக்குச் செல்பவர்கள் திருப்திப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதற்காக தாம் வாழும் வாழ்கையை மறைத்து ஒரு நாடக வாழ்வியலை தெரிந்தே செயல்ப்படுத்துகின்றனர் விடுமுறைக்குச் செல்லும் ஒருவருக்கும் இலங்கையிலிருக்கும் சாமானிய மனிதனுக்கும் இடையே தவறான புரிதல்களை அடிப்படையாககொண்ட போலியான உறவு ஒன்று ஏற்படுகிறது. தனது வாழ்க்கையை முழுமையாக மறைக்கும் புலம்பெயர் மனிதனின் பொய் இந்த இருவருக்கும் இடையே ஒரு இரும்புத் திரையை ஏற்படுத்துகின்றது.


« PREV
NEXT »

No comments