Latest News

September 25, 2015

எக்னெலிகொட கொலை தொடர்பில் இராணுவ ஜெனரலிடம் விசாரணை
by admin - 0

காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலான விசாரணைகளின் அடுத்த கட்டமாக இராணுவ புலனாய்வு பிரிவினருடம் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கும் இராணுவ ‘ஜெனரல்’ அதிகாரியொருவரை சி.ஐ.டி.யினர் விசாரணைக்குட்படுத்தவுள்ளனர்.

இதே விவகாரம் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரியான பிரிகேடியர் அருணா வன்னியாரச்சி கடந்த வாரம் ஆறு மணித்தியாலயங்களாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இதேவேளை, அடுத்த மாதம் ஆரம்பமளவில் சி.ஐ.டி. விசாரணைக் குழுவானது இரண்டு இராணுவ முகாம்களுக்கு விஜயம் செய்யவிருப்பதாக உயர்மட்ட பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக நீதிமன்ற அனுமதி கிடைக்கும் வரையிலேயே விசாரணைக்குழு காத்திருக்கின்றது.

ஆகக்குறைந்தது செப்டம்பர் 28ம் திகதியன்றாவது இதற்கான அனுமதி கிடைக்குமென எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட ஊடகவியலாளர் கிரித்தல இராணுவ முகாமில் வைத்து புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் விசாரணைக்குட்படுத்தியது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.

மேலும் ஊடகவியலாளரை கடத்துமாறு பணித்த உயர்மட்ட அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் அனைவரும் இராணுவ புலனாய்வு துறையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் விசாணைகள் யாவும் மிகவும் நுணுக்கமாகவும் சட்டத்திற்குட்பட்டதாகவும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளமையே விசாரணைகளுக்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படுவதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சத்தியா எக்னெலிகொட, தனது கணவன் கடத்தப்பட்ட சம்பவத்துடன் சிரேஷ்ட அரச அதிகாரியொருவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர் காணாமற்போனமை தொடர்பில் லெப்டினன், கேணல் ஷம்மி குமார ரத்நாயக்க, லெப்டினன் கேணல் சிறிவர்தன, சார்ஜன்ட் ராஜபக்ச, கோப்ரல் ஜயலத், ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர் ரன்பண்டா, சார்ஜன்ட் மேஜர் உப்பணே, ஓய்வு பெற்ற கோப்ரல் ரஞ்சித் ரூப்பசேன, கோப்ரல் அநுரஜீவ மற்றும் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ. புலனாய்வு உறுப்பினர்கள் தவேந்திரன் மற்றும் சத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments