Latest News

September 30, 2015

அடிப்படை தேவைகளாவது சீர்செய்யப்படவேண்டும். மூங்கிலாறு மக்கள் ரவிகரனிடம் கோரிக்கை
by admin - 0

தம் கிராமத்தில் காணப்படுகின்ற அடிப்படைத்தேவைகளாவது சீர்செய்யப்படவேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட மூங்கிலாறு மக்கள் ரவிகரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வாழ்வாதாரமென பல்வேறு நிலைகளிலும் தம் கிராமம் பின்தங்கியுள்ளதைத்தெரிவித்த மக்கள் பிரதிநிதிகள் அவற்றில் அடிப்படைத்தேவைகளையாவது இங்கு பூர்த்தி செய்து எம் இயல்பு வாழ்க்கைக்கான வழியை ஏற்படுத்தித்தாருங்கள் என குறித்த குறைகேள் சந்திப்பில் அவர்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில், 

கடந்த 2015-09-27 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மூங்கிலாறு கிராமத்தின் மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக அப்பகுதியில் குறைகேள் சந்திப்பொன்று ஏற்பாடாகியிருந்தது. 

மதிப்புக்குரிய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்குறைகேள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் தம் கிராமம் சார்பான பல்வேறு முறைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர். 

குன்றும் குழியுமான வீதிகள், மக்கள் எதிர்நோக்கும் சுகாதாரச்சிக்கல்கள், மழைநீரால் நிறையும் கிராமத்து முன்பள்ளியென கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், வாழ்வாதாரம் என்ற நிலைகளில் தம் கிராமம் பின்தங்கியுள்ளதை தெரிவித்து அவை தொடர்பான மேம்பாட்டு வழிவகைகளை உருவாக்கித்தருமாறு ரவிகரன் அவர்களிடம் கோரியிருந்தனர். 

மக்கள் பிரதிநிதிகளின் முறைப்பாடுகளை உள்வாங்கிய ரவிகரன் அச்சந்திப்பின் நிறைவில் அவர்களால் முன்வைக்கப்பட்ட குறைகள் தொடர்பான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அக்குறைகள் அனைத்தும் உரிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுமெனவும் அக்குறைகள் தீர்வதற்கான வழிவகைகளை இயலுமான வரையில் விரைவாகச்செய்ய முயற்சி செய்வதாகவும் கூறி அச்சந்திப்பை நிறைவுசெய்தார்







« PREV
NEXT »

No comments