Latest News

September 30, 2015

ஐஎஸ்ஸுடன் செயல்படும் நான்கு பிரித்தானியர்களுக்கு எதிராக ஐ.நா. தடை!
by Unknown - 0

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் தீவிரவாதக் குழுவுக்காகப் போரிட்டுவரும் அல்லது அந்த அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பிரித்தானியர்கள் நான்கு பேர் மீது பிரிட்டனின் வேண்டுகோளுக்கிணங்க ஐ.நா. தடை விதிக்கவுள்ளது.

ஐ.நா.வின் புதுப்பிக்கப்பட்ட தடைப் பட்டியலில், ஹை வைக்கோம்பே என்ற இடத்தைச் சேர்ந்த ஒமர் ஹுசைன், கார்டிப்பை சேர்ந்த நாசர் முத்தானா, க்ளாஸ்கோவைச் சேர்ந்த அக்சா மஹமூத் மற்றும் கென்டைச் சேர்ந்த சாலி ஆன் ஜோன் ஆகியோரது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இவர்கள் மீது பயணத் தடை விதிக்கப்படுவதோடு, இவர்களது சொத்துக்களும் முடக்கப்படும்.

இந்த புதிய நடவடிக்கையானது, இஸ்லாமிய அரசினருக்கு ஆட்களை சேர்ப்பதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் காவல்துறையினர் அளிக்கும் தகவலின்படி, பிரிட்டனைச் சேர்ந்த சுமார் 700 பேர், ஜிகாதிகளுடன் இணைந்து போரிடுவதற்காக சிரியாவுக்கும் ஈராக்கிற்கும் சென்றனர். ஆனால், இவர்களில் பாதிப் பேர் மீண்டும் பிரிட்டனுக்கே திரும்பிவிட்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் தடைகள் குழுவுக்கு, 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன் முதல் தடவையாக தங்கள் நாட்டின் சார்பில் பெயர்களை சமர்ப்பித்துள்ளது.

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை சமாளிக்க ஏற்படுத்தப்பட்ட இந்த குழு, காலப்போக்கில் ஐ.எஸ். குழுவினருக்கு எதிராகவும் விரிவுப்படுத்தப்பட்டது.

பட்டியலிடப்பட்ட சந்தேக நபர்கள், தங்களுடைய பணத்தை வங்கிகளிலிருந்தோ வேறு அமைப்புகளிலிருந்தோ எடுக்க முடியாது. வங்கிகள் மூலம் பணத்தைப் பெறவும் முடியாது. பிரித்தானியர் நால்வரின் பெயர்களை அரசாங்கம் ஊடகங்களில் வெளியிட்டுள்ளதோடு, அவர்கள் ஐ.எஸ். அமைப்பினருக்கான செயற்பட்டு வருகின்றனர் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

யார் அந்த நால்வர்?

அக்சா மஹ்மூத், 21: லண்டனைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் மூவரை ஐ.எஸ்ஸில் இணைத்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அவரது பெற்றோர் மறுத்துள்ளனர்.

இவர் 2013ல் சிரியாவுக்குச் சென்றார். ஐஎஸ் குழுவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதாக நம்பப்படுகிறது.

ஷரியா சட்டம் என தாங்கள் கருதவதைச் செயல்படுத்துவதற்காக ரக்கா நகரில் அமைக்கப்பட்ட அல் - கன்ஸ்ஸா என்ற பெண்கள் படையில் அக்சா மஹ்மூத் முக்கியப்புள்ளியாவார்.

நாசர் முத்தன, 21 வயது: ஐ.எஸ். குழு கழுத்தை வெட்டி ஒருவரை கொல்லும் வீடியோவில் இவர் தோன்றியிருந்தார் என்பது குற்றச்சாட்டு. எனினும் அது தனது மகன் அல்ல என்று நாசரின் தந்தை கூறுகிறார். 2013ல் சிரியா சென்றார்.

சாலி ஆன் ஜோன்ஸ், 46 வயது: ராக் இசை கலைஞராக இருந்தவர் எனக் கருதப்படும் இவர், இந்தக் குழுவுக்கு ஆட்களைச் சேர்த்ததாக நம்பப்படுகிறது. "பங்க் ஜிகாதி" என செய்தித்தாள்களால் குறிப்பிடப்பட்டவர் இவர். ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானியரான ஜுனைத் ஹுசைன் என்பவரை இவர் திருமணம் செய்திருந்தார். தன் கணவருடன் 2013ல் அவர் சிரியாவுக்கு வந்தார்.

ஒமர் ஹுசைன், 26 வயது: சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பாதுகாவலராக இருந்தவர். ஐஎஸ்ஸின் பிரச்சார வீடியோ ஒன்றில் தோன்றியதோடு, நியூஸ்நைட் என்ற நிகழ்ச்சிக்காக பேட்டியும் அளித்திருந்தார். 2014ல் சிரியா சென்றார்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள அரசு 10 மில்லியன் பவுண்டுகள் செலவில் பிரிட்டிஷ் அரசு புதிய பிரிவு ஒன்றை உருவாக்கவுள்ளது. இந்தப் புதிய பிரிவு லண்டனிலிருந்து செயல்படுமென்றாலும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை எதிர்கொள்ள அரபு நாடுகள் முழுக்க வலையமைப்பைக் கொண்டிருக்கும்.

« PREV
NEXT »

No comments