Latest News

August 03, 2015

மக்களைப் பாதுகாத்துக் கொண்டு முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதே எமது அரசியல் நிலைப்பாடாகும் - பரந்தனில் டக்ளஸ் தேவானந்தா
by admin - 0

மக்களைப் பாதுகாத்துக் கொண்டு முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதே எமது அரசியல் நிலைப்பாடாகும் - பரந்தனில் டக்ளஸ் தேவானந்தா

02.08.2015- ஞாயிற்றுக்கிழமை

எமது மக்களைப் பாதுகாத்துக் கொண்டு அபிவிருத்தியுடனான முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதே எமது நிலைப்பாடாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஆனையிறவு உப்பளத்தை மீள இயக்கும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுத்திருந்த அதேவேளை, பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயங்க வைப்பதற்கான திட்டங்களையும் வகுத்திருந்தோம்.

இந்நிலையில், ஆட்சிமாற்றத்தினால் குறித்த செயற்திட்டங்களை என்னால் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாமல் போனமை துரதிஸ்டவசமே.

இவ்வாறாக இத்தொழிற்சாலைகள் இயங்கும் பட்சத்தில் வேலைவாய்ப்பற்றிருக்கும் பெருமளவிலான இளைஞர் யுவதிகள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கக் கூடியதாக அமைந்திருக்கும்.

இருந்தபோதிலும் மக்கள் எமக்கான அரசியல் பலத்தை வழங்கும் பட்சத்தில் ஆனையிறவு உப்பளம் மற்றும் பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஆகியவற்றை புதுப்பொலிவுடன் மீளமைத்து இயங்க வைக்க உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

கடந்தகாலங்களில் கோர யுத்தத்தினால் எமது மக்கள் பல்வேறுபட்ட அழிவுகளுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுத்தது மட்டுமன்றி தமது இயல்பு வாழ்வையும் தொலைத்திருந்தனர்.

ஆனாலும் மக்களை ஏமாற்றியும் உசுப்பேற்றியும் வாக்குகளை அபகரிக்கும் சுயலாப அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மக்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதேவேளை, அபிவிருத்தியில் மட்டுமல்லாது வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதே எமது நிலைப்பாடாகுமென்றும் சுட்டிக்காட்டினார்.
« PREV
NEXT »

No comments