Latest News

July 29, 2015

தேர்தலில் கூட்டமைப்புக்கு ஆதரவில்லை - முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு!!!
by வல்வை அகலினியன் - 0

தேர்தலில் கூட்டமைப்புக்கு ஆதரவில்லை - முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதிரடி அறிவிப்பு!!!


என் அன்பார்ந்த சகோதரச கோதரிகளே,

நான் வெளிநாடுகள் சென்ற சமயத்தில்த்தான் பொதுத்தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுது திரும்பி வந்துள்ளேன். தேர்தலில் உங்கள் பங்களிப்பு என்ன என்று பலரும் என்னைக் கேட்கின்றார்கள். யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பத்துப் பேர் ஏழு ஆசனங்களுக்காகவும் வன்னியில் ஒன்பது பேர் ஆறு ஆசனங்களுக்காகவும் போட்டியிடுகின்றனர். தற்போதைய தேர்தல் முறைமையின் கீழ் ஒரே கட்சிக்குள்ளேயே விருப்பு வாக்குகளைப் பெற போட்டியாளர்களிடையே முரண்பாடுகள் எழுவது எதிர் பார்க்கப்படுவதொன்றே.

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ம் ஆண்டில் பொது வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டேன். நான் பதவிக்கு வந்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் பலநான் பக்கச் சார்பற்று நடுநிலை வகிக்கவில்லையே என்று என் மீது குறைபட்டுக் கொண்டனர். நான் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குப் பக்கச் சார்பாக நடந்து கொள்வதாக என்னை விமர்சித்தனர். முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்றமுறையில் பக்கச் சார்பற்று நடந்து கொள்ளவேண்டும் என்றார்கள். 

உண்மையில் இதே மாதிரியான ஒரு நிலை சுமார் 53 வருடங்களுக்கு முன்னர் நான் கொழும்பு சட்டமாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு ஏற்பட்டது. 

ஒருசாரார் தேர்தலில் எனக்கு வாக்களித்து வெற்றிகொள்ளச் செய்தனர். எனக்கெதிராக வாக்களித்தவர்கள் தலைவர் பதவி வகிக்கவந்தவுடன் நீங்கள் சகல சட்ட மாணவ மாணவியர்களுக்குந் தலைவர் என்ற முறையில் பக்கச் சார்பற்று நடந்து கொள்ளவேண்டும் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். 

எனக்குவாக்களித்தவர்கள் தாம் அவ்வாறு என்னைத் தேர்ந்தெடுக்கக் காரணமாய் இருந்ததால் தமது நலவுரித்துக்களை மட்டுமே நான் பேணிப் பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். நான் ஏற்றுக் கொண்ட பதவியின் கடமைகள், பொறுப்புக்கள், கடப்பாடுகள் ஆகியவற்றை உத்தேசித்து சட்ட மாணவனாக நான் இருந்தபோதே அத் தருணத்தில் பக்கச் சார்பற்றவனாக நடந்துகொள்வதே எனது கடமை என்று முடிவுசெய்தேன். எனது தலைவர் பதவிக்காலம் முழுவதும் என் ஆதரவாளர்களின் மன உளைச்சலுக்கு மத்தியில் நான் பக்கச் சார்பற்றே நடந்து கொண்டேன். எது சரியோ,எது முறையோஅதையே செய்தேன்.

அதேவிதமான ஒரு சூழ்நிலை தற்போது என்னை நாடிவந்துள்ளது.

என்னைக் கூட்டமைப்பினர் வடமாகாண முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பினும் அவர்களின் தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக இறங்கி அக்கட்சி அபேட்சகர்களுக்காக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என்பதே எனது கருத்து.

என்னைப் பொறுத்தவரையில் மக்கள் யார் யாரைத் தேர்ந்தெடுக்கின்றார்களோ அவர்கள் யாராக இருப்பினும் அவர்களுடன் சேர்ந்து அன்னியோன்யமாக இயங்குவது எனக்கு ஒரு பிரச்சினையல்ல. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடனும் ஐக்கியத்துடனும் கடமையாற்றக் கூடியவர்களாக இருக்கவேண்டும். கட்சிகளின் நலனை விட எமது மக்களின் நலனும் நலவுரித்துக்களுமே முதன்மை பெறவேண்டும் என்பது எனது கருத்து. 

அண்மையில் இங்கிலாந்தில் ஹரோ என்ற இடத்தில் இம் மாதம் 17ந் திகதி பேசும் போது நான் கூறியதை இங்கு உங்களுக்கு குறித்துக் கூற ஆசைப்படுகின்றேன். 

“மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களை எதிர்வரும் பொதுத்தேர்தலில் எம்நாட்டில் வாழும் எமதுமக்கள் தெரிவு செய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. தமிழ்ப் பிரதிநிதிகளைப் பொறுத்தவரையில் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலை போகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள்.

அத்துடன்,தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்.

அதனை உணர்ந்து அவர்கள் தமக்குள்ள வரலாற்றுப் பொறுப்பை, தார்மீகக் கடமையைச் சரிவரச் செய்வதற்கு நான் துணையாக நிற்பேன்”என்று கூறினேன்.

போர் முடிந்து ஆறு வருடங்கள் கழிந்த நிலையில் எமது வடமாகாண சபை தேர்ந்தெடுக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் போருக்குப் பின்னரான சூழலில் மூன்று முக்கிய சவால்களை நாம் யாவரும் எதிர் நோக்கியுள்ளோம்.

முதலாவதாக போருக்குப் பின்னரான புனர்நிர்மாண, மீள்குடியேற்ற, அபிவிருத்திப் பணிகள் எமதுமக்களின் தேவைகளையும் அத்தியாவசியங்களையும் அறிந்து அனுசரித்து முழுமையான நோக்குடன் நடத்தப்படாமல் தான் தோன்றித் தனமாக அப்போதைக்கப் போதையவாறு நடைபெற்றுவருவது மனவருத்தத்தை அளிக்கின்றது.

இரண்டாவதாக அரசியல் ரீதியாக நிரந்தரத் தீர்வு இன்னமும் எங்கள் கைகளுக்குப் படாமல் விலகிச் செல்வதாகவே இருக்கக் காண்கின்றோம். மூன்றாவதாக போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிகிடைப்பதும் சேய்மைப் பட்டுக் கொண்டே இருக்கின்றது. 

இவ்வாறான ஒரு சூழலிலேயே நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரு கடப்பாட்டில் உள்ளீர்கள். இவ்வாறான சூழலிலே, இங்கிலாந்தில் நான் குறிப்பிட்டதற்கிணங்கவே எமது பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டியது அத்தியாவசியமென்று எனக்குப்படுகிறது. நான் குறிப்பிட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கும் விதத்தில் உங்களுள் சிறந்த பிரதிநிதிகளை நீங்கள் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது உங்கள் தலையாய கடமையாக விளங்குகின்றது.

தேர்தல் முடிந்ததும் எமது மிகமுக்கிய சவாலான அரசியல் தீர்வுகளுக்காக ஒரு மனதுடன் அரசியல் ரீதியாக ஒத்துழைக்கக் கூடிய பிரதிநிதிகளையே நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும். 

அண்மையில் தெற்கத்தைய அரசியல்வாதியொருவர் என்னிடம் கேட்டார் புதிதாக அமைக்கப்படப் போகும் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மந்திரிப் பதவிகள் கொடுக்க முன்வந்தால் உங்கள் கட்சி அவற்றை ஏற்குமா என்று. அப்போது பிரித்தானிய பிரதமர் கமரூன் அவர்களுக்கு ஜேர்மானியத் தலைவி அன்ஜெலாமேர்கல் அவர்கள் கூறியதுதான் என் நினைவுக்கு வந்தது. அரசியல் ரீதியான கூட்டுக்களிலும் கூட்டமைப்புக்களிலும் “சிறியகட்சியே எக்காலத்திலும் அடிபட்டுப் போய் விடுகிறது”என்றார் அவர். எனது சிங்கள நண்பருக்கு நான் கூறினேன்- அரசியல் ரீதியான ஒரு நிரந்தரத் தீர்வு எமக்குக் கிடைக்கும் வரையில் எக்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை எமது பிரதிநிதிகள் ஏற்கக் கூடாது என்பதே எனது கருத்து என்று. 

இல்லையென்றால் அதாவது அவ்வாறு நாங்கள் ஏற்றுக் கொண்டால் எமது மக்களின் கோரிக்கைகள் காற்றோடு காற்றாய்ப் பறந்துவிடுவன. எம்மைப் பெரும்பான்மைச் சமூகம் தன்னுள் உள்ளிழுத்துக் கொண்டுவிடும் என்றேன். மேலும் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு என்ற கொள்கையின் கீழ் எமதுஅமைச்சர்கள் சுதந்திரம் இழந்து விடுவார்கள். எமதுமக்களின் உரித்துக்களையும் எதிர்பார்ப்புக்களையும் அவர்கள் கைவிடவேண்டிய நிலை வரும் என்றேன்.

மேற்கூறியவை பல எமது வடமாகாண மக்களுக்கு மட்டும் பொருந்தும் கூற்றுக்கள் என்று எண்ணவேண்டியதில்லை. இந்நாட்டின் சகலருக்கும் பொதுவான கருத்துக்களேஅவை. இவ்வருடத் தொடக்கத்தில் எம்மக்கள் புதியதொரு சகாப்தத்தை உருவாக்க முன்வந்தனர். நல்லாட்சி, நீதி, நியாயம், சமத்துவம், சமாதானம், சகலருக்கும் பாதுகாப்பு போன்ற கொள்கைகளை முன்வைத்து புதியதொரு எதிர்காலத்தைக் கட்டி எழுப்ப முன் வந்தார்கள். அந்தவாறான மக்களின் அபிலாஷைகளை, எதிர்பார்ப்புக்களை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு சகல அரசியல்வாதிகளுக்கும், சகல நிறுவனத் தலைமைத்துவங்களுக்கும், ஊடகங்களுக்கும், குடிசனசங்கங்களுக்கும் இருக்கின்றது என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. 

தனிப்பட்ட மனித குழுக்களின் நன்மைகளுக்காக மட்டும் நடந்து கொள்ளாது, மற்றைய மக்கட் கூட்டங்களுக்குக் கெடுதி விளைவிக்காது, நல்லாட்சியை ஏற்படுத்தக் கூடியசக்திகளை இனங்கண்டு ஜனநாயகரீதியில் நாம் யாவருஞ்சேர்ந்து அச்சக்திகளுக்குத் துணையாக நிற்பதற்கு வருந்தேர்தலானது களம் அமைத்துக் கொடுக்கும் என்றுநம்புகின்றேன். எமதுதேர்தல் வாக்குறுதிகளும் விஞ்ஞாபனங்களும் இந்நாட்டின் கூடியமக்களின் நலனைப் பேணும் விதமாக அமையவேண்டும். அப்படி நடந்துகொண்டால்த்தான் வருங்காலச் சந்ததியினர் எம்மை நன்றிக் கண்களுடன் பார்ப்பார்கள்.

எது எவ்வாறு நடப்பினும் ஜனநாயக அத்திவாரத்தை இட்டு அதன் மீது எமது வருங்காலத்தை நம் நாட்டில் ஏற்படுத்த சர்வதேச சமூகமானது துணையாக நிற்கும் என்று எதிர்பார்க்கின்றோம். எமது மக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் சர்வதேச சமூகம் எம்முடன் கைகோர்த்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.

எனவே எனது சதோதர சகோதரிகளே! நான் உங்களிடம் இச் செய்தியின் ஊடாகக் கேட்டுக் கொள்வது யாதெனில் திறமான வேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யுங்கள். வள்ளுவன் வழிநின்று உங்களை வாழவைக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுங்கள். நாம் யாவரும் எமது ஜனநாயக உரித்துக்களை முழுமையாகப் பாவித்து எமது அரசியல் பயணத்தை பலம் மிக்கதாகச் செய்வோமாக! 

எம்முடைய நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து நாம் யாவரும் உங்கள் சேவையில் வெளிப்படைத் தன்மையுடனும் பதிலளிக்கும் கடப்பாட்டுடனும் நடந்துகொள்ள உதவுவீர்களாக! தேர்தல் காலங்களில் நாம் சுற்றுலாக்காலப் பயணிகள் போன்று நடந்துகொள்ளாதிருப்போமாக! 

“அரசாங்கம் ஒரு நம்பிக்கைப் பொறுப்பு. அதன் அலுவலர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். நம்பிக்கைப் பொறுப்பும் அதன் பொறுப்பாளர்களும் மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளார்கள்” (ஹென்றிக்ளே–மேம்பட்ட அரசியல்வாதியும் சிறந்த அமெரிக்கப் பேச்சாளரும்)

இறைதுணை உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதாக!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
« PREV
NEXT »

No comments