Latest News

June 12, 2015

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அனந்தி சசிதரன்
by Unknown - 0

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்தவை குறித்து இந்தியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் பங்களிப்பு பாரியளவில் இருந்தமை வெளிப்படையான உண்மை. சாட்சியங்கள் இல்லாமல் நடத்தப்பட்ட இன அழிப்புப் போரில் சாட்சியத்தைக் கொண்டுவரும்படிக் கோருவதும் அதற்கான ஆதாரத்தைக் கேட்பதும் நகைப்பிற்குரியது என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘இறுதிப்போரில் நாங்கள் இருந்தோம் எங்களுடைய சாட்சியைத் தவிர வேறு சாட்சி இல்லை,’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

இறுதிப்போரில் விடுதலைப் புலிகளின் சரணடைவு பற்றி, இன அழிப்பு பற்றி இப்பொழுது இந்திய ஜனாதிபதியாக இருக்கின்ற பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன், விஜய் நம்பியார் மற்றும் சிதம்பரம் இவர்களுக்கு எல்லாம் பங்கில்லையா என்று இந்திய மத்திய அரசைக் கேட்கின்றேன். வெறுமனே அரசியல் இலாபத்திற்காக எங்களை அழித்துவிட்டு மௌனம் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 6 வருடம் முடிந்து பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் நான் விடுக்கின்ற கோரிக்கை, இறுதி யுத்தம் தொடர்பில் இந்திய அரசாங்கம் இதய சுத்தியுடன் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடவேண்டும்.

என்றார்.

இதேவளை, கடந்தவாரம் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சரணடைந்த சம்பவம் குறித்து கூறிய கருத்துக்கு அனந்தி சசிதரன் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தனது கணவர் இராணுவ உயரதிகாரிகளிடம் தன்னால் கையளிக்கப்பட்டதாகவும் அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் ஆயிரக்கணக்கான போராளிகள், பொறுப்பாளர்கள், குடும்பத்தினர், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் என்ற வகையில் தான் அந்த சரணடைவு இடம்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனந்தி சசிதரன் மேலும் குறிப்பிட்டதாவது;

கருணாநிதியினுடைய மகள் 16.05.2009 அன்று இரவு என்னுடைய கணவருடன் செய்மதி தொலைபேசியூடாகக் கதைத்திருந்தார். அந்த சம்பவத்தின்போது நான் தான் நின்றேன். நான் தான் அதன் சாட்சி. என்னுடைய கணவரிடம் கேட்டேன். அப்போது அவர் கூறினார், ‘முதல்வர் கருணாநிதி சார்பில் கனிமொழி அவர்களிடம் நான் பேசுகிறேன். கனிமொழி அவர்கள் எங்களை ஆயுதத்தைப் போட்டுவிட்டு சரணடையுமாறும் சர்வதேசத்துடன் எங்களுடைய விடுதலை தொடர்பில் பேசுவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தார், என்றார்.


« PREV
NEXT »

No comments