Latest News

April 08, 2015

37 பேரை கடத்தியது இராணுவம்- ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம்!
by Unknown - 0


அம்பாறையில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்வு இன்றும் நடைபெற்றுள்ளது. இதன்போது 37 பேரை இராணுவத்தினர் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று தொடர்பில் சாட்சியம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் தமது கிராமத்தை சுற்றிவளைத்திருந்த வேளையில் தாம் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றிற்குள் தஞ்சம் புகுந்திருந்தபோது ஆலயத்திற்குள் நுழைந்த இராணுவம் அங்கிருந்த சிறுவர்கள் உட்பட 37 பேரை கொண்டு சென்றதாக நபர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் சாட்சியத்தை அளித்துள்ளார்.

அதில் பலருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை கருணா, பிள்ளையான், இனியபாரதி குழுவினர் கொலை செய்ததாக அவரது மகன் சந்திரகாந்தன் சாட்சியம் அளித்தார்.

அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்தில் நடந்த காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்விலேயேய மேற்கண்ட சாட்சியங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை குறித்த சாட்சியப் பதிவை புறக்கணித்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி ஆணைக்குழுமீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்து புறக்கணிப்பில் ஈடுபட்ட மக்கள் சர்வதேச விாரணை ஒன்றின்மூலம் தமக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

காணாமல் போனோரை கண்டு பிடிக்கும் ஆணைக்குழுவா அல்லது கண்துடைப்பு ஆணைக்குழுவா? இவ்வாறு கேள்வி எழுப்பும் பல சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஏந்தியிருந்ததுடன் தமது வாய்களையும் கறுப்புத் துணியால் கட்டியிருந்தனர். 

« PREV
NEXT »