Latest News

January 09, 2015

தமிழர்களை மறந்த புதிய ஜனாதிபதி கொதித்த மனோ கணேசன்-பேரினவாதப் புத்தியை காட்டிய ஜனாதிபதி மைத்திரி
by admin - 0

தமிழர்களை மறந்த புதிய ஜனாதிபதி கொதித்த மனோ கணேசன்-பேரினவாதப் புத்தியை காட்டிய ஜனாதிபதி மைத்திரி 

 தேர்தல் காலங்களில் தமிழர்களின் ஆதரவைக் கோரிப் பெறுவது. தேர்தல் முடிந்ததும் தமிழர்களை உதாசீனம் செய்து உதறித் தள்ளுவது. இதுதான் தென்னிலங்கை அரசுகளின் காலாகால பரவணிப் பழக்கம். அதை இன்று ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடனேயே செயலில் காட்டத் தொடங்கி விட்டீர்களே!"
என்று புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சீறி வீழ்ந்தார் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்.

புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோர் பதவியேற்கும் நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. அந்த நிகழ்வை ஒட்டி இடம்பெற்ற உரையாடல் ஒன்றின் போதே புதிய பிரதமர் மீது இப்படிப் பாய்ந்து விழுந்தார் மனோ கணேசன்.

பதவியேற்ற பின்னர் உரையாற்றிய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வெற்றிக்கு உழைத்தவர்களைப் பெயர் குறிப்பிட்டு பட்டியலிட்டு நன்றி பாராட்டினார். ஆனால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களான சம்பந்தர், மனோ கணேசன், திகாம்பரம், போன்றவர்களின் பெயர்களையோ, கட்சிகளையோ குறிப்பிட்டு நன்றி கூறாமல், வேண்டுமென்றே தவிர்ப்பவர் போல, தமது உரையை அவர் முடித்துக் கொண்டார்.

இதனால் சீற்றமடைந்த மனோ கணேசன் தனது எரிச்சலை புதிய பிரதமரிடம் கொட்டித் தீர்த்தார்.

ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா, சந்திரிகா குமாரதுங்க, சம்பிக்க ரணவக்க, ஹக்கீம், ரிசாட் பதியுதீன் போன்றவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்ட புதிய ஜனாதிபதிக்கு ஏனோ சம்பந்தன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் பெயர்கள் மட்டும் தெரியவில்லை; அல்லது நினைவுக்கு வரவில்லை. இவர்களில் சில தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஆரம்பத்தில் முன்வரவில்லை. அவர்களின் மக்கள் ஏற்கனவே மைத்திரிபாலவை ஆதரிக்க முன்வந்து விட்டமையால் வேறு வழியின்றி தமது ஆதரவை வழங்க அவர்கள் முன்வந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நன்றி கூறத் தெரிந்த புதிய ஜனாதிபதியின் கணிப்பில் தமிழர் தலைவர்கள் மட்டும் தட்டுப்படாமல் போய்விட்டார்கள்."

"தேர்தலில் தோற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தம்மை வரவேற்பதாக ஹம்பாந்தோட்டை, மெதமுலன மக்கள் முன்னிலையில்  உரையாற்றினார்.

"நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மக்கள் தமக்கு வாக்களித்தனர் என்று அங்கு கூறிய அவர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களே தமக்கு வாக்களிக்காமல் விட்டு தோற்கடித்துள்ளனர் என்ற சாரப்பட உரையாற்றினார்.

இந்தத் தேர்தலில் தமக்கு தோல்வியையும், மைத்திரிபால சிறிசேனவுக்கு வெற்றியையும் தேடிக் கொடுத்தவர்கள் யார்? என்பதை இனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், அவர் வெளிப்படையாகக் கோடி காட்டிப் பேசியுள்ளார்.

ஆனால் அந்த மக்கள் மூலம் வெற்றியைப் பெற்றவருக்கு மட்டும் அதன் தாற்பரியம் விளங்கவில்லை; புரியவில்லை.

"இந்தப் போக்கு புதுமையன்று. இப்படி நடப்பதுதான் தென்னிலங்கை அரசுத் தரப்புக்களின் பரவணிப் பழக்கம். தமிழர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டு அவர்களின் காலை வாரி விடுவது அவர்களின் போக்கு. அதனை - இத்தகைய வெற்றியை, தமது ஒற்றுமையான வாக்களிப்பு மூலம் உங்களுக்குப் பெற்றுத் தந்த தமிழர்களுக்கு பதவியேற்ற அன்றே, அதிகாரத்துக்கு வந்த உடனேயே. நீங்கள் காட்டுவீர்கள் என்று நாம் நம்பவில்லை." என்று சீறினார் மனோ கணேசன்.

அவரை சமாதானப்படுத்த முயன்ற புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது குறித்து மனோ கணேசனுடன் விரிவாக உரையாடி பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஒழுங்கைத் தாம் செய்வார் என்று உறுதியளித்தார் என்று அறிய வந்தது.
« PREV
NEXT »