Latest News

January 17, 2021

இந்தியாவின் முகத்தில் அறைந்ததுபோல் தமது சாவின் மூலம் பதிலளித்த தளபதி கிட்டு.
by Editor - 0

சரணடையும்படி எச்சரித்த இந்தியாவின் முகத்தில் அறைந்ததுபோல் தமது சாவின் மூலம் பதிலளித்த தளபதி கிட்டு.
07-01-1993 அன்று இந்தோனேசியாவின் மலாக்காவிலுள்ள பியூபர் கலா தீவில் தளபதி கிட்டுவும் மற்றும் 9 போராளிகளும் ஹொண்டூராஸ் நாட்டிலுள்ள சான் லோரன்யோ என்னும் துறை முகத்தில் பதிவு செய்யப்பட்ட எம்.வி. அகத் என்னும் கப்பலில் ஏறினார்கள்.

தளபதி கிட்டுவுடன் தாயகம் நோக்கி புறப்பட்டு வந்துகொண்டிருந்த எம் வி அகத் எனும் புலிகளின் அந்தக்கப்பலை இந்திய கடற்படை 14/01/1993 இரவிலிருந்து பின்தொடரத்தொடங்கியது.

தொடர்பு சாதனத்தில் தம்மை பின்தொடரும்படியும் அல்லது கப்பலை தாக்குவோம் எனவும் மிரட்டியது இந்தியக்கடற்படை.
தாம் குறிவைக்கப்படுவிட்டோம் என்பதை விளங்கிக்கொண்ட புலிகள் நிலைமையினை தலைவருக்கு தெரியப்படுத்தினர்.
புலிகளின் தலைமையோ இந்தியாவை தமது கப்பலைவிட்டு அகலுமாறு கேட்டுக்கொண்டது.
ஆனால் இந்தியா தாம் சோதனை செய்துவிட்டு கப்பலை விட்டுவிடுவதாக கூறியிருந்தது.

மூத்த தளபதிகளான லெப் கேணல் புலேந்திரன் லெப் கேணல் குமரப்பா உட்பட கடற்புறாவில் பயணித்த புலிகளின் கைதுகளின் போதும் இந்தியா தம்மை ஏமாற்றி அவர்களை அழித்ததன் அனுபவபாடத்தை ஏற்கனவே பெற்றிருந்த புலிகளின் தலைமை அதற்கு சம்மதிக்காது மறுப்புத் தெரிவித்தது.

ஐ.என்.எஸ். 38 விவேகா என்னும் இந்திய கடற்படைக் கப்பல்தான் தங்களை வழி மறித்துள்ளதென்பதை புலிகள் புரிந்து கொண்டனர். இதையடுத்து எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இறங்க வேண்டாமென தளபதி கிட்டு தனது போராளிகளுக்கு உத்தரவிட்டார். இதன் பின் இந்திய கடற்படைக் கப்பலின் கப்டனுடன் தொடர்பு சாதனத்தில் பேசுவதற்கு விரும்புவதாக கிட்டு அவர்கள் அறிவித்தார்.

இதையடுத்து இடம்பெற்ற உரையாடலின் போது எங்களுடைய கப்பலை ஏன் தடுத்து வைத்துள்ளீர்களென தளபதி கிட்டு விசாரித்தபோது அது பற்றி எனக்குத் தெரியாது. உங்களுடைய கப்பலை கரைக்கு கொண்டு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதற்கு உடன்படத் தவறினால் உங்கள் கப்பல் தாக்கப்படுமென இந்தியக் கடற்படைக் கப்பலின் கப்டன் தெரிவித்தார்.

ஏற்கனவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான உறவு சீராக இல்லாததால் இந்திய கடற்படைக் கப்பலை தாக்கினால் அது வேண்டாத விளைவுகளை ஏற்படுத்துமென்பதை உணர்ந்து கொண்ட தளபதி கிட்டு, எமது உயிரை இழந்தாலும் பரவாயில்லை இந்திய கப்பலைத் தாக்கக் கூடாதென போராளிகளுக்கு கடும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்திய கப்பலைத் தொடர்ந்து செல்லுமாறு தனது கப்பலின் கப்டனுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் மற்றொரு இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒரு புறமும் ஐ.என்.எஸ் 38 விவேகா கப்பல் மறுபுறமுமாக எம் வி அகத் கப்பலை இந்தியக்கரை நோக்கி நகர்த்திச்சென்றன.

பேச்சுக்கள் தொடர இந்தியா கப்பலை விட்டுவிடும் எனும் நம்பிக்கையோடு 
புலிகளின் கப்பல் இந்தியக்கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
ஆனால் புலிகள் அதிரடி நடவடிக்கைகள் ஏதேனும் நடைபெற்றாலும் என சந்தேகங்கொண்டு 
கப்பலைச் சூழ்ந்துகொண்ட இந்தியக்கடற்படை கப்பலை நிறுத்துமாறும் போராளிகளை சரணடையும்படியும் அறிவித்தது.

16/01/1993 அதிகாலை நிலைமையின் விபரீதத்தை முற்கூட்டியே அறிந்த தளபதி கிட்டு நேரடியாகவே இந்திய அதிகாரிகளுடன் தொடர்புசாதனத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து சமாதான திட்டமொன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக தளபதி கிட்டு விளங்கப்படுத்தினார். ஆனால், இந்தியக் கடற்படைக் கப்பல் கப்டனோ அவர்களை சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத்தினார். சென்னைக்கு ஏன் தாம் வரவேண்டுமென தளபதி கிட்டு வினவியபோது தனக்கு எதுவும் தெரியாதெனவும் சென்னை வந்தவுடன் உயர் அதிகாரிகள் உங்களைச் சந்தித்து விபரம் தெரிவிப்பார்களெனவும் இந்திய கடற்படைக் கப்பல் கப்டன் கூறினார்.

இப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே கப்பலும் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. சென்னைக்கு அருகேயுள்ள எண்ணூரிலிருந்து கிழக்கே 16 ஆவது மைலுக்கு எம் வி அகத் கப்பல் வந்த போது, அதை நிறுத்திவிடும்படி தளபதி கிட்டு கப்பல் கப்டனுக்கு உத்தரவிட்டார். இதற்கு மேல் பயணம் செய்து இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு தளபதி கிட்டு மறுத்து விட்டார்.

இதேநேரம் இன்னொரு இந்திய கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ்.சாவித்திரியும் தளபதி கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்டிருந்த இரு கப்பல்களுடன் இணைந்து கொண்டது.

இந்நிலையில் உடனடியாக சரணடையும் படி தளபதி கிட்டுவுக்கு மீண்டும் உத்தரவிடப்பட்டது. அதற்கு மறுத்து விட்டு தளபதி கிட்டு, தன்னுடன் பேச்சு வார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத் துறை தலைவர்களையோ அல்லது சென்னையிலுள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் இதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்து விட்டார்.

16 ஆம் திகதி காலை 6 மணிவரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் அதற்குள் தளபதி கிட்டுவும் ஏனையவர்களும் சரணடைய வேண்டுமெனவும் இல்லையெனில் கப்பல் தாக்கப்பட்டு சிறை பிடிக்கப்படுவீர்களெனவும் தளபதி கிட்டுவுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

சரியாக காலை 6 மணிக்கு இரு ஹெலிகொப்டர்களும் மூன்று போர் விமானங்களும் தளபதி கிட்டுவின் கப்பலை சுற்றி வட்டமிட்டன. சிறிது நேரத்தில் தளபதி கிட்டுவின் கப்பலை இந்திய கடற்படைக் கப்பல்கள் மிகவும் நெருங்கி வந்தன.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட தளபதி கிட்டு கப்பலின் கப்டன் ஜெயச்சந்திரனையும் மாலுமிகளையும் கடலில் குதித்து தப்பிச் செல்லுமாறு உத்தரவிட்டார். இதற்கு அவர்கள் மறுக்கவே சிலரை தளபதி கிட்டு தானே கடலுக்குள் தள்ளிவிட்டார். தனக்காக உயிர் விட தயாரான கப்பலின் கப்டனையும் மாலுமிகளையும் அநியாயமாக பலி கொடுக்க விரும்பாததாலேயே தளபதி கிட்டு அவர்களை தப்புமாறு உத்தரவிட்டார்.

சரியாக காலை 6.30 மணியளவில் தளபதி கிட்டு பயணித்த எம்.வி.அகத் கப்பல் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இந்தியாவின் கைகளில் சிக்க விரும்பாத தளபதி கிட்டுவும் ஏனைய 9 போராளிகளும் வங்கக் கடலிலேயே தம்மைத் தாமே வெடிக்க வைத்து கப்பலுடன் சங்கமமாகினர்.
« PREV
NEXT »

No comments