Latest News

August 09, 2020

ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லை என்று புளொட் மற்றும் ரெலோ
by Editor - 0

பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் தரப்புகள் இதய சுத்தியான ஒற்றுமையுடன் இணைந்து செயற்படுமாக இருந்தால் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு பின்னிற்கப்போவதில்லை என்று புளொட் மற்றும் ரெலோ ஆகிய தரப்புக்கள் அறிவித்துள்ளன.

முதற்கட்டமாக தமிழ்த் தேசியப்பரப்பில் உள்ள அனைத்து தரப்புக்களும் பாராளுமன்றில் இணைந்து பணியாற்ற முடியும் என்றும் அத்தரப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அமைப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒற்றுமையை வலியுத்தி ஒன்றிணைவதற்கு தயாரென கருத்து பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான புளொட், மற்றும் ரெலோ ஆகிய தரப்புக்கள் இந்த விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ளன.

ரெலோ அமைப்பின் தலைவரும் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகரத்தினை கைப்பற்றியுள்ளது.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசத்தில் தமிழ்ப்பிரதிநிதித்துவங்கள் சிதறிப்போயுள்ளன. இது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தில் பலவீனமான நிலைமையை உருவாக்கும்.

ஆகவே தமிழ் தேசிய பரப்பில் உள்ள தரப்பினர் மத்தியில் ஒற்றுமையும் ஒன்றிணைந்த செயற்பாடும் மிகவும் அவசியமானதாக தற்போதைய தருணத்தில் உணரப்படுகின்றது.

ஆகவே நேர்மையான முறையில் தமிழ் கூட்டணியாக செயற்படுவது மிகவும் பொருத்தமானதொரு செயற்பாடாக இருக்கும்.

குறிப்பாக பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய தரப்பினராக கூட்டிணைந்து செயற்படுவதானது பலமானதாக இருக்கும்.

தமிழ் மக்களின் விடயங்களை கையாள்வதற்கும் பொருத்தமானதாக இருக்கும்.

அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகள் பிளவடைந்து நிற்கின்றமைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை தேடுவதன் ஊடாக, தமிழ் மக்களின் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து பலமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றார்.

இதேவேளை, புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், கூறுகையில்,

தமிழ்த் தேசியப் பரப்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்பினர்கள் ஒன்றிணைந்து பயணிப்பது மிகவும் நல்லொரு விடயமாகும். ஆனால் அது இதயசுத்தயானதாக இருக்க வேண்டும். தனிநபர் ஒருவரின் நலன்களை அடியொற்றியதாக அமையக்கூடாது.

தனியொருவருக்கு சாதகமான நிலைமைகளை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது.

புளொட்டைப் பொறுத்தவரையில் தமிழ்த் தரப்பிற்கு இடையில் ஒற்றுமைக்காக எத்தனையோ தியாகங்களையும், விட்டுக்கொடுப்புக்களையும் செய்துள்ளோம்.

எதிர்காலத்திலும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே உள்ளோம்.

ஆனால் கூட்டுச் செயற்பாடு அல்லது ஒற்றுமை என்பது நேர்மையானதாக இருக்கு வேண்டும் என்றார்.
« PREV
NEXT »

No comments