Latest News

August 14, 2020

அல்லைப்பிட்டி படுகொலை
by Editor - 0

அல்லைப்பிட்டி படுகொலை.

யாழ் அல்லைப்பிட்டி படுகொலைகளை கோர தாக்குதலின் 14 ஆம் ஆண்டு வலி சுமந்த படுகொலை நினைவு நாள்!

 

2006 ஆகஸ்ட் 13 அன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீதும் மற்றும் இரு ஊர்களிலும் இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் இதே நாளில் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலைகளின் தொகுப்பாக “அல்லைப்பிட்டி படுகொலைகள்” என்ற படுகொலை இலங்கையின் வடக்கே வேலணைத் தீவில் மூன்று வெவ்வேறு கிராமங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்களினை குறிக்கும்.

2006, மே 13 சனிக்கிழமை இரவு வேலணையின் அல்லைப்பிட்டி, புளியங்கூடல், வங்களாவடி ஆகிய கிராமங்களில் இப்படுகொலைகள் இடம்பெற்றன.

இம்மூன்று கிராமங்களிலும், இலங்கைக் கடற்படயினர் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தோர் மீது துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டியில் பச்சிளம் ஆறு மாத குழந்தை உள்ளிட்ட இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் ஒரே வீட்டில் மிக கொடூரமாக கொல்லப்பட்டனர்.

புளியங்கூடலில் மூன்று பேரும், வங்களாவடியில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

மேலும் பலர் காயமடைந்தனர். பொதுமக்கள் மீதான தாக்குதல்களை அடுத்து சுமார் 150 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்த சிலர் தாம் கடற்படையினரால் தாக்கப்பட்டதாகவும், படுகொலைகளை அவர்களே நடத்தியிருந்தனர் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் வழமை போல சிறிலங்கா அரசு இதை மறுத்தது.

இப்படுகொலைகளை நடத்தியதில் சம்பந்தப்பட்ட இலங்கைக் கடற்படையினர், துணை இராணுவப் படையினரான (EPDPஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள்) ஆகியோரை பன்னாட்டு நெருக்கடிக் குழு அடையாளம் காட்டியிருக்கிறது.

உள்ளூரில் இயங்கும் மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகளும் இத்தாக்குதலை நடத்தியவர்கள் கடற்படையினரும், துணை இராணுவக் குழுவினருமே என உறுதி படுத்தி இருக்கின்றது.

தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கடற்படையினரும், ஈபிடிபியினரும் இருந்தமை பற்றித் தமக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக பன்னாட்டு மன்னிப்பு அவை அறிவித்திருந்தது.

படுகொலைகளின் பின்னர் இலங்கையின் ஆங்கிலிக்க ஆயர் துலீப் டி சிக்கேரா நிலைமைகளை ஆராயும் பொருட்டு அல்லைப்பிட்டிக்குச் சென்று பார்த்து, பின்வருமாறு கூறியிருந்தார்:

“அல்லைப்பிட்டித் தீவுக்கு நான் சென்ற போது, பொதுமக்கள் அங்கு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் அங்கிருந்த இறுக்கமான நிலைமைகளை நான் அவதானித்தேன்.

ஒரே குடும்பத்தில் எட்டுப் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இக்குடும்பத்தில் எஞ்சியிருப்போர் கொலையாளிகளைத் தாம் அடையாளம் காட்ட முடியும் எனத் தெரிவித்திருந்தனர்.

பொதுமக்களை இத்தீவில் இருந்து வெளியேறும் படி குழுவொன்று அச்சுறுத்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் அங்கு பயத்துடன் வாழ்கிறார்கள். 

இப்படுகொலைகள் குறித்து விரைவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலமே இலங்கைப் படைத்துறையினருக்கும், மக்களுக்கும் இடையே சுமுகமான உறவை பேண முடியும்.” என்றார்.

ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த விசாரணைகள், சம்பந்தப்பட்டவர்களின் ஒத்துழையாமை காரணமாக இடை நிறுத்தப்பட்ட நாடகம் நடந்தேறியது.

இதே வேளை இந்த நாளில் புனித பிலிப்பு நேரியார் ஆலயம் மீதான எறிகணை வீச்சுத் தாக்குதல் (St. Philip Neri Church shelling) இதே நாளில் i இடம்பெற்றது.

புனித பிலிப்பு நேரியார் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணைத் தீவில் அல்லைப்பிட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. 

இவ்வாலயம் மீதான எறிகணைத் தாக்குதல் இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்டு குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டு மேலும் 54 பேர் காயமடைந்தனர்.

தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டு இருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எறிகணை வீச்சுக்களுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தார்கள்.

2006 ஆகத்து 12 சனிக்கிழமை காலையில் விடுதலைப் புலிகள் அல்லைப்பிட்டியில் தரையிறங்கினர். இதனை அடுத்து இராணுவத்தினர் பின்வாங்கி அருகில் அமைந்திருந்த கடற்படைத் தளத்தினுள் சென்றனர்.

இராணுவத்தினர் பின்னர் மக்கள் குடிமனைகளை நோக்கி எறிகணை வீச்சை ஆரம்பித்தனர். இது அன்று இரவு முழுவதும் தொடர்ந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றின் படி இராணுவத்தினரின் பல்குழல் ஏவுகணைகள் அல்லைப்பிட்டிக் கிராமம் முழுவதும் வந்து வீழ்ந்ததாகத் தெரிவித்திருக்கிறது.

2006 ஆகத்து 13 ஞாயிற்றுக்கிழமை அதிகால 04:30 மணிக்கு பிலிப்பு நேரியார் ஆலயம் மீது எறிகணை ஒன்று வீழ்ந்தது. ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்த 15 பேர் கொல்லப்பட்டனர். 54 பேர் காயமடைந்தனர்.

தேவாலய குருவானவர் திருச்செல்வம் நிகால் ஜிம் பிறவுண் காயமடைந்தோரை யாழ்ப்பாணம் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அல்லைப்பிட்டியில் தங்கியிருந்த மேலும் 300 குடும்பங்களை அவர் ஊர்காவற்துறையில் உள்ள புனித மேரி தேவாலயத்திற்கு அனுப்பினார். 

குண்டு வீச்சு இடம்பெற்று ஒரு வாரத்தின் பின்னர் ஆகத்து 20 இல் அருட்தந்தை ஜிம் பிறவுன் காணாமல் போன கொடுமையும் நிகழ்ந்தது.

வழமை போல் தேவாலயம் மீது தாம் தாக்குதல் நடத்தவில்லை என இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்தனர். ஆனாலும், அரசுப் படையினராலேயே எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

பலாலி இராணுவமுகாமில் இருந்து ஏவுகணைகள் வீசப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததாக யாழ் பல்கலைக்கழக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளும் இவ்வாறே உறுதிப்படுத்தினார்கள்.

வழமை போல் சிறிலங்கா இனவெறிப்படை நிகழ்த்திய இந்த கொடூர இனப்படுகொலைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை.

வலிகளை பத்திரப்படுத்தும் நினைவுகள் நீதிக்கான போராட்டத்திற்கு வலு சேர்க்கும் சக்தியாக எமக்குள் கரு கொண்டு “போராடு” என உந்தி தள்ளும்.
« PREV
NEXT »

No comments