கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக ரஷ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 8 மாதங்களாக நீடித்து வரும் கொரோனா பரவலுக்கு இன்னும் முறையான தடுப்பு மருந்து பொதுப் பயன்பாட்டுக்கு வரவில்லை. உலக நாடுகள் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் கொரோனா தடுப்பு மருந்துக்கான அனைத்துக் கட்டப் பரிசோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. பரிசோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஓகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மொஸ்கோ மெடிக்கல் யுனிவர்சிட்டி மேற்கொண்டுள்ளது.
இந்தத் தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகள் குறுகிய காலகட்டத்தில் முடிக்கப்பட்டாலும் அனைத்துக் கட்டச் சோதனைகளுக்கும் முழுமையாக உட்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கமாலேயே ஆய்வு மையத்தின் இயக்குநர் அலெக்ஸாண்டர் கிண்ட்ஸ்பெர்க் கூறும்போது, “முதற்கட்டமாக குறைந்த அளவு மருந்துகளே பயன்பாட்டுக்கு வரும். அவை மருந்து நிலையங்களில் விற்பனைக்குக் கிடைக்காது” என்று தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment