Latest News

July 02, 2020

இன்னொரு காவியம் கரும்புலி லெப். கேணல் போர்க்
by Editor - 0

இன்னொரு காவியம்…….

இன்னொரு காவியம் கரும்புலி லெப். கேணல் போர்க்
1986, முள்ளியவளைப் பகுதி அன்று இராணுவத்தினரால் நிரம்பி இருந்தது. தமது அட்டூழியங்களை நிகழ்த்திவிட்டு இராணுவத்தினர் பின்வாங்கத் தொடங்கினார்கள். 

அவர்கள் மூன்றாம் கட்டை வயல்வெளியை அண்மித்தபோது மேஜர் பசீலனின் தலைமையில் ஒரு தாக்குதற்பிரிவு தனது தாக்குதலை ஆரம்பித்தது.

வயல்வெளி, ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அவர்களை நோக்கி ஏவப்பட்ட மோட்டார் செல்களிலும், ரவைகளிலும் அவர்கள் நனைந்தனர். இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு. போர்க் அன்றுதான் ஒரு போராளியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வந்திருந்தான். வந்த அன்றே ஒரு பெரும் போர் முனையில் அவன் பங்கு பற்றினான். அன்றுமுதல் சிறீலங்கா இராணுவத்தினருக்கு எதிரான பல போர் முனைகளில் போர்க் பங்கு பற்றிக்கொண்டிருந்தான்.

இந்தியப்படை எம் மண்ணை ஆக்கிரமித்தநேரம் சிறிது காலம் அமைதியும் பின் பலத்த போரும் ஆரம்பித்தது. அந்த யுத்தத்தின் மிகக் கடுமையான எதிர்ப்பை இந்தியப்படைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சந்தித்தன. ஒட்டிசுட்டானில், முள்ளியவளையில், தண்ணீரூற்றில், அளம்பிலில் என பல முனைகளில் இந்தியப் படையினர் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டது. எல்லாப் போர்முனைகளிலும் போர்க்கும் ஒரு போராளியாக கலந்து கொண்டான். அப்போர்க்களங்களில் தன் திறமையை வெளிப்படுத்தினான்.

அந்நேரத்தில்தான், முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் ஒரு மலைக்கல்லில் முகாம் அமைக்கும் பொறுப்பு போர்க்கிடம் ஒப்படைக்கப்பட்டது. அது ஒரு மிகக் கடுமையான வேலை, வயல்வெளிகளிலும், காட்டுப்பாதைகளிலும் மழைநீர் நிறைந்து சேறும், சகதியுமாக இருக்கும். அப் பாதைகளினால் உணவுப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு உழவு இயந்திரத்தில் செல்ல வேண்டும். அவைகள் புதையும்,வயல் வெளியில் சேற்று நிலத்தில் உழவு இயந்திரத்தை மீட்பதற்காக போராடவேண்டும். இந்திய வானூர்திகள் வந்து மிரட்டும், இடைக்கிடை தாக்குதலும் நடாத்தும். அவர்கள் தொடர்ந்து செல்வார்கள். உழவு இயந்திரத்திலிருந்து மூட்டைகளை இறக்கி மலையின் வேறு பகுதிக்கு தோள்களில் சுமக்க வேண்டும். மரங்களில் தங்கி நிற்கும் மழைநீர் அவர்களை நனைக்கும். மறுநாள் இருமலும் தடிமலும்தான் – ஆனாலும் வேலைகள் தொடரும்.

போர்க்கிற்கு ஏற்கனவே இடுப்பு முறிந்திருந்தது. பாரமான பொருட்களை தூக்க அவனால் இயலாது. அப்படித் தூக்கினால் மீண்டும் அவன் நடக்க முடியாமல் படுக்கையில் இருக்க வேண்டி வரும் என்பதை தெரிந்திருந்தும் அவன் வேலைகளைச் செய்தான். உணவுப் பொருட்கள் சேமிக்கப்பட்ட ஒரு பலமான முகாமை உருவாக்கினான்.

ஆனால், அந்த முகாம் இந்தியப்படையினரின் தேடுதல் நடவடிக்கைக்கு உட்பட்டது. பலமான ஒரு சண்டை அந்தக் காட்டுப் பிரதேசத்திலும் நடந்தது. அப்போரில் கப்டன் வாதவூரான் வீரமரணத்தைத் தழுவிக் கொண்டான். போர்க் காலில் காயமடைந்தான். கானகச் சண்டைக்கு நாம் பழக்கப்படாத காலம் அது. காட்டின் எந்தப் பக்கம் சென்றாலும் எதிரி இருந்தான். பசி, களைப்பு, தண்ணீர் இருக்குமிடங்களில் எதிரி இருந்தான். தன்னைத் தூக்கிச் செல்லும் போராளிகளுக்குப் போர்க் கதைகளின் மூலம் உறுதியூட்டினான். அவர்கள் பின்வாங்கிச் சென்றார்கள்.

அதே காட்டின் மூலையில் – எமது புதிய முகாம். அங்கு போர்க் தனது காயத்திற்கு வைத்தியம் செய்து கொண்டிருந்தான். அதே நேரம் அங்கு எமது பயிற்சி முகாமும் ஆரம்பமாகியது.

போர்க் முழுமையாக குணமடையும் முன்பே புதிய போராளிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டான். அங்கேதான் முதன் முதலாக இந்தியப்படைக்கெதிராகப் போராடும் புதிய அணி உருவாகியது.

அதன் பின்பு போர்க்,முல்லைத்தீவு மாவட்டத்தின் இராணுவப் பிரிவுப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். அக் காலத்தில் போர்க்கின் தலைமையில் பல தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இதில் 4ம் கட்டையில் நடந்த தாக்குதல் நடவடிக்கை, தேர்தல் நேரத்தில் பரவலாக நடந்த தாக்குதல்கள் ஆகியவை குறிபிடத்தக்கவை.

இதன் பின்பு, போர்க் முல்லைத்தீவு மாவட்டப் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். அந்நேரத்தில் புலிகளின் முகாம்களை சீராக்கி எந்தவொரு தாக்குதலையும் எதிர் கொள்ளக்கூடியளவு பலமுள்ளதாக மாற்றி அமைத்துக் கொண்டான். அதேவேளை தாக்குதற் திட்டங்களை உருவாக்கி இந்தியப்படையினர் மீது நெடுங்கேணி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு என எல்லா இடங்களிலும் பரவலாகத் தாக்குதலை மேற்கொண்டான்.

பின்பு, வன்னிப் பிராந்திய தளபதியின் நேரடி கண்காணிப்பிலிருந்த படைப் பிரிவொன்றின் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். இக்காலகட்டத்தில் கிளிநொச்சி, முசல்குத்தி என சமூகவிரோதிகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டான்.
ஆனி 15, இரவு 12 மணி,

இருளில் மூழ்கி இருந்த மாங்குளம் இராணுவ முகாம் புலிகளால் திடீரெனத் தாக்கப்பட்டது. பல முனைகளால் புலிகள் எதிரியின் காவலர ண்களை நோக்கி முன்னேறினார்கள். போர்க் ஒரு தாக்குதல் அணிக்கு தலைமை வகித்து முன்னேறினான். எதரியின் காவலரணுக்கு அருகில் அவனது பலமான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு நடுவே எம்மவர்களின் ஆயுதங்கள் இயங்கின. கண்ணிவெடி அகற்றியை பிரயோகித்துவிட்டு எதிரியின் காவலரணை நோக்கி போர்க் சென்றான். ஆனால் அவன் தனி ஒருவனாகவே இருந்தான். அவனுடன் சென்ற தோழர்களில் பலர் வீரமரணமடைந்து விட்டனர். சிலர் காயமடைந்து விட்டனர்.

அந்தத் தாக்குதல் முழுமையடையவில்லை. தொடர்ந்து நாம் காப்பரண்களை அமைத்து முற்றுகையிலீடுபட்டோம். முற்றுகைக்குப் பொறுப்பாக போர்க் நியமிக்கப் பட்டான். பலமுனைகளில் பலமுறை போர் நடந்தது. போர்க்கும் அவனது தோழர்களும் கடுமையாகப் போரிட்டார்கள். சில வேளைகளில் பின்வாங்கினார்கள், சில வேளைகளில் முன்னேறினார்கள். ஆனால் தொடர்ந்து எங்கள் மண்ணைக் காப்பதற்காகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள்.

பின்பு, மாங்குளம் இராணுவ முகாம் முற்றுகைக்கான பொறுப்பை மேஜர் திலீப்பிடம் ஒப்படைத்துவிட்டு போர்க் மீண்டும் தன் படைப்பிரிவின் பொறுப்பாளனாகச் செயற்பட்டான்.

மாங்குளம் இராணுவ முகாம் மீதான இரண்டாவது தாக்குதல், தளபதிகள் போர்த் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் போர்க்கும் ஒருவன். ஒரு தாக்குதற் பிரிவுக்கு தலைமையேற்று உள்ளே செல்லும்படி போர்க் கேட்கப்பட்டான்.

ஆனால் அதற்கு அவன் மறுத்து விட்டான். அக்கூட்டத்தில் “நான் வெடிமருந்து வண்டியை ஓட்டிச் செல்கின்றேன்” என்ற அவனது வார்த்தைகள் உறுதியாக வெளி வந்தது.

மற்றவர்கள் வியப்புடன் பார்த்தார்கள். ஆனால் அவனது கண்களில் தெரிந்த ஆழமான உறுதி அவர்களை மௌனமாக்கியது.

இறுதி மூன்று நாட்கள்…….

போர்க் தன்னந்தனியாக எந்தவிதமான பொறுப்புக்களும் இல்லாமல் சுற்றித்திரிந்தான். தான் பிறந்த வீடு, தவழ்ந்த மண், பழகிய மக்கள், மரங்கள், குளம் எல்லாவற்றையுமே பார்த்தான். சேமமடுதான் அவனது கிராமம். சிங்கள எல்லை அருகில்தான். “நாங்கள் ஆயுதம் தூக்கியிராவிட்டால் இப்ப இங்க சிங்களவன்தான் திரிவான்” என்று அடிக்கடி அவன் சொல்லுவதுண்டு.

போர்க் ஏற்கனவே இனிமையானவன், இறுதி மூன்று நாட்களும் அவன் சக போராளிகள் மீது அன்பையும் பாசத்தையும் கொட்டினான். அவன் என்ன செய்யப் போகிறான் என்பது எவருக்குமே தெரியாது…… அவர்கள் வழமை மாதிரி போர்க்கிடம் பழகினார்கள். ஆனால் அவன் தம்மீது ஒரு பெரும் சோகச்சுமையை சுமத்தப் போகிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது.

வன்னி மண்ணில் போராட்ட வாழ்வின் போது தன்னை அரவணைத்து வளர்த்த கிராமத்து மக்களிடம் போர்க் சென்றான். அவன் நேசித்த மண், மக்கள், காடுகள், வயல்கள்……எல்லாமே அவனுக்கு விடை தந்தன.

23-11-1990…..

திட்டமிட்டபடி மாங்குள இராணுவ முகாமைச் சுற்றி இருந்த காவலரண்கள் வீழ்ச்சியடைந்திருந்தன. அதுவரை நேரமும் தனது போராளிகளுடன் இருந்த போர்க் புறப்படுவதற்குத் தயாரானான். இறுதி நேர நிமிடங்கள், இருள், தன் போராளிகளின் முகங்களைத் தேடியபடியே – போர்க் சொன்னான்.
“பெடியள் கவனம்.பசீலன் செல் வெடிக்கேக்கை சத்தம் தாங்க முடியாமலிருக்கிறது.எதற்கும் பெடியளைத் தள்ளியே நிற்கச் சொல்லுங்கோ” தன் தோழர்கள் மீது அவன் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள் அவை.

போராளிகள் விலகிச் சென்றார்கள்.

“எல்லாம் சரியாக இருக்கிறதா?” வோக்கியில் அவனது இறுதி வார்த்தை – தன் தோழர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டான். அந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட பார வண்டி, எதிரியின் வலயத்திற்குள் உறுமிக்கொண்டு நுழைந்தது. அந்த இறுதிக் கணங்களில் போர்க்கின் முகத்தில் என்ன எழுதி இருந்தது என்பது எவருக்குமே தெரியாது.ஆனால் எல்லாப் போராளிகளைப் போலவே அவனுக்கும் தெரியும், இந்த மண் நிச்சயம் மீட்சியடையும்.

அது ஒரு உன்னதமான செயல், அந்தக் கணத்தில் அவன் எடுத்த முடிவு. குறித்த இலக்கையும் தாண்டி அந்த வண்டி மேலும் பல எதிரிகளை தேடிச் சென்றது. முகாமின் மையப்பகுதி –

மிகப் பெரிய சத்தம். அந்தப் பிராந்தியமே அதிர்ந்து மௌனமாகியது.

இருள் கலையும் விடியலின் நேரம் துப்பாக்கிகள் ஓய்ந்து விட்டன. எமது போராளிகள் மாங்குளம் இராணுவ முகாமிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. போர்க் அண்ணை எங்கே? போர்க் எங்கே? போர்க்கின் வெடிமருந்து வண்டி வெடித்த இடத்தில் ஆழமான குழி ஒன்று இருந்தது. ஆக்கிரமிப்பாளனின் முகாமின் கட்டிடங்கள் இடிந்து – நொருங்கிக் கிடந்தது. அந்தக் குழிக்கு சற்றுத் தள்ளிப் போர்க்கின் உயிரற்ற உடல்……

போர்க் வீரமரணத்தைச் சந்தித்துக் கொண்டான் – அவன் வரலாற்றில் ஒருவனாக வாழவில்லை, ஒரு புதிய வரலாற்றைப் படைத்தவன். அவனது வாழ்வு அர்த்தமுள்ளது, உன்னதமானது – தனது இனத்தின் விடுதலைக்காகத் தன்னையே ஒப்படைத்த உயர்ந்த வீரன் அவன். தனது உயிருக்கும் மேலாக தனது நாட்டின் சுதந்திரத்தை நேசித்த மாவீரன் அவன். நாளையும் காற்றாக எங்கள் உயிர் மூச்சாக வாழ்வான் அவன்.

வன்னி மண்ணில் சேமமடு என்னும் கிராமத்தைச் சேர்ந்த போர்க் – முல்லைத்தீவு மாவட்டத்தின் பொறுப்பாளராகவும், அதன் பின்பு, மாங்குளம் இராணுவ முகாம் முற்றுகைக்குப் பொறுப்பாளராகவும், பின்பு வன்னி நடமாடும் அணியின் பொறுப்பாளராகவும் இருந்தவர். இந்தியப் படைகளுக்கு எதிராகவும், சிறீலங்கா படைகளுக்கு எதிராகவும் பல தாக்குதல்களை திட்டமிட்டு, தலைமையேற்று வழி நடாத்தியவர். தன்னுயிரைத் தந்து மாங்குளம் படைமுகாம் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்.

நினைவுப் பகிர்வு:- வசந்தன் 
விடுதலைப் புலிகள் (மார்கழி 1990) இதழிலிருந்து.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
« PREV
NEXT »

No comments