யார் "முன்னாள் போராளிகள்"? அவர்கள் "தமிழீழ சுதந்திரப் போராட்ட வீரர்கள்"!
தமிழீழ தாய்நிலத்தின் விடுதலைக்காக இறுதி வரை நின்று நெஞ்சை நிமிர்த்தி போராடிய வீரப் புலி மறவர்களை...
இவர்கள் "முன்னாள் போராளிகள்". அவர்கள் "முன்னாள் போராளிகள்" என்று அழைத்து கொச்சைப்படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.!
முன்னாள் போராளி என்பதன் உண்மையான அர்த்தம் எதுவென்றால்...
விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சேவையாற்றி விட்டு சில காரணங்களால் அமைப்பில் இருந்து முழுமையாக விலகி தமது குடும்பத்தோடு இணைந்தவர்களையே ஒரு சில காரணங்களுக்காக "இவர் முன்னாள் போராளி" எனக் குறிப்பிட்டு கருதப்படுவார்.
அவ்வாறு அமைப்பிலிருந்து முழுமையாக விலகி குடும்ப வாழ்க்கையில் முழுமையாக இணைந்தவர்களை "முன்னாள் போராளிகள்" என்று குறிப்பிடுவதில் எவ்வித மாற்றுக்கருத்தும் எவருக்கிமில்லை.
அதைவிட்டு...
தமது குடும்ப வாழ்க்கையை விட்டு தமது இளம்பருவத்து இனிய வாழ்வினைத் தொலைத்து, தமது ஆசாபாசங்களை துறந்து தாய் மண்ணை மட்டுமே நேசித்து தமிழீழ சுதந்திர தேசத்திற்காக இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல் துக்கங்களை புதைத்து, தூக்கங்களை மறந்து... கொண்ட கொள்கை மாறாமல் இறுதி வரை நின்று களமாடி உடல் அவயங்களை இழந்து பல வலிகளோடு தற்போதும் வாழ்ந்து வரும் வீர மறவர்களை "முன்னாள் போராளிகள்" என அழைத்து கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தாதீர்கள்!
அவ்வாறு நீங்கள் அழைத்து அந்நியப்படுத்துவதால்தான் இன்று வரையும் அந்த வீரப் போராளிகள் தாயகத்தில் ஒதுக்கப்பட்டு மூன்றாம் நிலை மனிதர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும்... புலம்பெயர் தேசங்களில் வாழும் பல போராளிகளை "இவர் தப்பியோடி வந்த முன்னாள் போராளி" எனவும், "இவர் இயக்கக் காசை கொள்ளையடித்துவிட்டு வந்த முன்னாள் போராளி" எனவும் இன்று வரையும் தூற்றி அவர்களை தாயகம் நோக்கிய ஒரு செயற்பாடுகளிலும் ஈடுபட விடாமல் முட்டுக்கட்டை போட்டு தூற்றி சேறு பூசி வருகிறீர்கள்!
போராளிகள் எவ்வாறு வெளிநாடு சென்றார்களெனில்....
சில போராளிகள் தாயகத்தில் சிங்கள அரசின் பல நெருக்கடிக்குள் சிக்குண்டு பல சித்திரவதைகளுக்குள் அகப்பட்டு தப்பி... சில புலம்பெயர் தேச உறவுகளாலும், சில போராளிகள் தமது வெளிநாட்டு உறவுகளின் உதவியோடும், சில போராளிகள் இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் தமது நெருக்கடி மிகுந்த நிலையினை ஆதாரங்களோடு உறுதிப்படுத்தியுமே அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டார்கள் என்பதே உண்மை!
போராளிகளைத் தவிர புலம்பெயர் தேசங்களில் வாழும் அனைத்து தமிழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காரணம் காட்டியே இன்று வரையும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது!
நீங்களும் எதுவும் செய்யமாட்டீர்கள், வரலாறாகவே வாழ்ந்த அந்த வீர மறவர்களையும் எதுவுமே செய்ய விடமாட்டீர்கள்.!
பல கள அனுபவங்களைப் பெற்று, பல அரசியல் நுண்ணறிவுகளைக் கற்று இன்றும் தூர நோக்கோடும் தெளிந்த சிந்தனையோடும் தாயக விடுதலைக்காக ஏதோவொரு வகையில் செயற்பட்டு வரும் அந்தப் புனிதமான போராளிகளை "முன்னாள் போராளிகள்" என கொச்சைப்படுத்தி ஒதுக்கி ஒருபோதும் அவர்களுக்கு தடையாக இருக்காதீர்கள்!
கொண்ட கொள்கையோடு இறுதி வரை நின்று போராடிய போராளிகளை "முன்னாள் போராளிகள்" என்று அழைப்பதை நிறுத்தி "தமிழீழ சுதந்திரப் போராட்ட வீரர்கள்" என அழைத்து அவர்களைக் கௌரவப்படுத்தி தாயகத்திலும் சரி, புலத்திலும் சரி அந்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு துணையாக நின்று அவர்களைப் பலப்படுத்துங்கள்.
அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்களோடு நாம் வாழ்வதே நமக்கு பலமும், பெருமையும் ஆகும். அந்தச் சுதந்திரப் போராட்ட வீரர்களோடு கைகோர்த்து நமக்கான புது விடியலை உருவாக்குவோம்.
(*குறிப்பு: வெளிநாடு செல்லமுடியாது மிகவும் வறுமையோடு தாயகத்தில் வாழ்ந்து வரும் பல "தமிழீழ சுதந்திரப் போராட்ட வீரர்கள்" சிங்கள அரசின் பல கெடுபிடிகளுக்குள் அகப்பட்டு பல சொல்லொணாத் துயரங்களோடு இன்றுவரையும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!)
- வல்வை அகலினியன்.
No comments
Post a Comment