Latest News

May 17, 2020

ஒன்றிணைந்து தொடர்ந்து போராடுவோம்.உலகத் தமிழ் இளையோர் ஒன்றியம் WTYA
by Editor - 0

எமது அன்பார்ந்த தமிழீழ    மக்களே !


                                                                                    இன்று மே 17 நினைவு நாள். தமிழர்களின் நீண்ட பெரும் ஆயுதப்போராட்டத்தின் உயிர்நாடி விதையாகிய நினைவுநாள். தமிழர்கள் ஆட்சி, அதிகாரங்களுடன் இறையாண்மை செய்யப்பட்ட நிலம் பறிக்கப்பட்டு எம் இனம் ஒன்றாக கொண்று குவிக்கப்பட்ட இறுதிநாள். தமிழீழ தனியரசின் கட்டுமானங்கள், துறைகள், நிறுவனங்கள், பல்துறைசார்ந்த அமைப்புக்கள், முப்படைகள்கொண்ட மரபுவழி இராணுவ சமநிலைகள்யாவும் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்ட நாள். ஆகவேதான் ஆயுதமௌனிப்பு பெற்றதாகவும்  இன்நாள் அமைகிறது. எனவே மே 17க்கு ஒற்றைச்சொல்லில் தமிழ் அகராதியில் பொருள்தேட முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் வெளிப்படையாய் தெரிந்ததில் அறிய முடிகிறது. அடுத்த கட்ட நகர்வினை மேற்கொள்ளுங்கள் என்ற செய்தி அத்திவாரமிடப்பட்டிருக்கின்றது. ஆகவே எமது அன்பிற்கும், பெருமதிப்பிற்குரிய தமிழ் பேசும் எம் சொந்தங்களே! சர்வதேசமயப்படுத்தப்பட்ட இப்போராட்டத்தை தமிழ் பேசும் மக்களும், இளையதலைமுறையும் இணைந்து தொடர்ந்தும் இப்போராட்டத்தை முன்னெடுப்பீர்கள் என்ற செய்தியை வெளிப்படுத்தும் வரலாற்றுச்சிறப்புமிக்க நாளாகவும் இன் நாள் அமைகின்றது. ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்கு மறுநாள் மே 18ம் திகதியை சிங்களவர்களின் வெற்றி நாளாக சிங்கள அரசு பிரகடனப்படுத்தியமையும், அதன் காரணமும் உலகத்தமிழர்கள் உயிருடன் உயிர்ரற்ற சடலங்களாக மாறிப்போயிருந்தார்கள். அதாவது மே 17ம் திகதி இரவு பிணம்தின்னி கழுகுகளின் 57வது படைப்பிரிவினரிடம் எமது தேசியத்தலைவரின் வித்துடல் கிடைக்கப்பெற்றதாகவும் இதனை இலங்கை இராணுவத்தளபதிக்கு அறிவித்த 57வது கட்டளைத்தளபதி முள்ளிவாய்க்காலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். இதன் பின்னர் மே 18ம் திகதி பிரபாகரனின் உடலை உறுதிப்படுத்திவிட்டோம் இந்நாள் சிங்கள மக்களின் வெற்றிநாள் என்ற செய்தியை சிங்கள அரசு அறிவித்திருந்தமையையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இவ்விடயம் இவ்வாறிருக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழர்தரப்பின் பல கட்சிகள், குழுக்கள், அமைப்புக்கள் போன்றோர் மே 18ம் திகதியை இனப்படுகொலை நாளாக அறிவித்திருந்தமை தமிழர்களின் நீண்ட ஆயுதப்போராட்ட வரலாற்றை மாசுபடுத்துவதோடு எதிர்கால சந்ததிக்கு தவறான வரலாற்றை புகட்டுவதாகவே தென்படுகிறது. அது மட்டுமன்றி சிங்கள அரசு அறிவித்த அறிவிப்பை எதிர்மறையாக ஏற்றுக்கொள்வதாகவே அமைகிறது. ஆனால் நாடுகடந்த தமிழீழரசு சிங்கள அரசின் வெற்றிக்கு எதிரான தமிழர்களின் துக்கநாளாக அறிவித்திருந்தமை ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும், இறுதிப்போரின் முடிவும் வரலாற்றுப் பதிவும் மே 17ம் நாளையே முன்நிறுத்தியிருக்கிறது. ஆகவே எமது பேரன்புமிக்க உலகெங்கும் வாழும் தமிழ்பேசும் மக்களே! எமது அயுதப் போராட்டம் 37 அகவையும் 12 நாட்களுடனும் மௌனிக்கப்பட்டுவிட்டதென்பதை நேரடிச் சாட்சியங்கள் ஊடாகவும், பகுப்பாய்வுகள் மூலமாகவும் நியாயமான சந்தேகத்திற்க்கப்பால் உறுதிப்படுத்தி எம்மால் எண்பிக்கமுடிகின்றது. 

எனவே தான் மே 17ம் திகதியை ஒட்டுமொத்த தமிழின அழிப்பின் "இன அழிப்பு"நாளாக பிரகடனம் செய்யும் அதேநேரம் வரலாற்றுரீதியாக இன் நாளை பதிவு செய்யுமாறும் தமிழ்மக்கள் அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.

                                    எமது அன்பிற்கினிய மக்களே! உலகெங்கும் சிதறுண்டிருக்கும் எம் இளைய தலைமுறையினரே! நாம் பல தசாப்த காலங்களாக தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பல வழிகளில் போராடி வருகிறோம். குறிப்பாக எமது ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் சனநாயகரீதியாக எமது தமிழ்த்தலைவர்கள் அரசியல்ரீதியான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அதற்குமாறாக சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், வன்முறைகளையும், இனக்கலவரங்களையும் கட்டவிழ்த்துவிட்டார்களேதவிர எமது உரிமைகள் எவையும் வழங்கப்படவில்லை. தென்னாசியவின் கிழட்டுச்சிங்கள நரி என்று வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரமுறைமையும் 1956ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச்சட்டமும், கொடுங்கோலாட்சியும், இலங்கை தனிச்சிங்கள நாடு என்பதை பறைசாற்றுகின்றது. தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. அப்போதைய தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தை செல்வநாயகம் அவர்கள் இறுதியாக இலங்கை சட்டக்கல்லூரியில் உரையாற்றும் போது ஒன்றை தெளிவுபடுத்தியிருந்தார். அதாவது "நாம் அரசியல் ரீதியில் இராணுவ ஒடுக்குமுறைக்குலிருந்து தமிழர்களின் உரிமைக்காக போராடுகிறோம். சிங்கள அரசு எமது உரிமைகளைத்தர மறுக்கின்றது. ஆனால் என்றோ ஒரு நாள் தமிழ் இளைஞர்கள் துப்பாக்கி முனையில் சந்திப்பார்கள் அப்போது சிங்கள அரசு பதில் சொல்லவேண்டிய நிலை உருவாகும் என்பதை சுட்டிக்காட்டியிருந்தார்". இவ்வாறான சூழ்நிலையில்தான் தமிழர் தரப்பு 1972 மே மாதம் 5ம் திகதி ஆயுதப்போராட்டம் ஆரம்பிப்பதற்குரிய சூழல் உருவானதென்பதையும் இளைய தலைமுறைக்கு தெளிவு படுத்த விரும்புகிறோம். எமது தேசியத் தலைவரின் சிந்தனைகளில் ஒன்றான "எமது போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியங்கள் என்றும் மாறப்போவதில்லை" என்ற சிந்தனைக்கேற்ப  இளைய  சமுதாயம்  போராடமுன்வரவேண்டுமென விரும்புகிறோம். மே 17ம் திகதி ஆயுதப்போராட்ட மௌனிப்பிற்குப்பின்னர் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர் தரப்பு மேற்கொண்ட ஆக்கபூர்வமான அரசியல் முன்னேற்பாடுகள் என்ன? அவை எவ்வகையான பயன்பாட்டை தமிழ் மக்களுக்கு கொடுத்திருக்கின்றன? மாறாக சிங்கள அரசிற்கு எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன? ஆனால், தமிழ் மக்களின் கட்சிகள் , குழுக்கள் , அமைப்புக்களின் கட்டமைப்புகலுக்கிடையில் குழப்பங்களை ஏற்படுத்தி கருத்தியல் ரீதியான முரண்பாடுகளால், நேர்மையற்ற செயல்பாடுகளால் ஒற்றுமை குலைக்கப்பட்டு கொள்கையில் பிளவுபட்டு தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதென்பதுமட்டும் மறுப்பதற்கில்லை. அதேநேரம் ஒரு சில அமைப்புகள், சில தனிநபர்கள் மேற்கொண்டுவரும் ஆக்கபூர்வமான முயற்சிகள் மறுப்பதற்கில்லை. ஆகவே எமது போராட்டத்தை முன்நிறுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து போராட்ட தரப்பினருக்கும் எமது நன்றியையும் பாராட்டுதல்களையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ளவிரும்புகிறோம். குறிப்பாக தாய்த்தமிழகத்தில் எமது போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நாம்தமிழர் கட்சிக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதோடு உறுதி தளராது தொடர்ந்தும் போராடுமாறும் அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம். எமது அன்பிற்கும் பெரும் நம்பிக்கைக்குமுரிய எதிர்கால இளைய தலைமுறையினரே! அன்று பாரதி சொன்ன அக்கினிக் குஞ்சுகளை பிரபாகரன் சேனை வளர்த்து விட்டிருக்கிறது. அந்த அக்கினிக்குஞ்சுகளில் ஒன்றாக எமது விடுதலைப்போரட்டத்தை உங்கள் தோழ்களில் சுமக்க ஒவ்வொருவரும் எமது தேசியத் தலைவரின் சிந்தனையாளர்களாக மாறுங்கள். மாற்றம் ஒன்றே விடுதலையின் முதற்படி. ஒரு வரலாற்று உண்மையை புரிந்து கொள்ளுங்கள். ஒரு இனம் அழிக்கப்பட வேண்டுமானால். முதலில் மொழி அழிக்கப்பட வேண்டும். அந்தவகையில் தான் தமிழீழ நிலப்பரப்பு எங்கும் சிங்களமொழி  திட்டமிட்டுத்திணிக்கப்படுகிறது. இனக்கலப்பு திருமணங்கள் அரங்கேற்றப்படுகின்றன. தமிழர்களின் பிறப்பு வீதம் திட்டமிட்டு குறைக்கப்படுகிறது. இன் நிலையில் எமது தலைவர் கூறியது இன்னும் சில ஆண்டுகளில் நடந்துவிடுமோ என்ற ஏக்கம் மௌனமாகவே உறைந்து போகின்றது. ஆகவே தமிழர்கள் போராடினாலும் போராடாமல் விட்டாலும் எமது இனம் அழிக்கப்பட்டுக்கொண்டேதானிருக்கும். இந்த நியதியை மாற்றிஅமைத்து நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம் என்பதை ஆழமாக புரிந்து கொள்ளுமாறு அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம். தமிழர் தரப்பில் எமது உரிமைக்காக போராடும் தனிநபர்கள், குழுக்கள், அமைப்புகள் அனைவரையும் ஒரே அரசியல் கொள்கையோடு ஒரே தளத்தில் ஒற்றுமையோடு கொள்கை ரீதியாக ஒன்றினைந்து பொது எதிரிக்கு எதிராக போராட முன் வருமாறு மிகவும் அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம்.
                                                                                                       எம் பாசத்துக்குரிய புலம்பெயர் வாழ் எம் தேசத்து உறவுகளே! உலகில் எந்த ஒரு இனமும் போராடாமல், இரத்தம் சிந்தாமல், வியர்வை சிந்தாமல் போராடி வென்றதாக வரலாறில்லை. அதேநேரம் இறுதியான விடுதலை என்கின்ற தீர்வு துப்பாக்கிமுனையில் பெற்றதாகவும் சரித்திரமில்லை. எனவேதான் எமது தலைவர் எமது விடுதலைப்போரட்டத்தை சர்வதேசமயப்படுத்தியமை மட்டுமல்லாது தமிழர்கள் ஒரு பாரம்பரிய மொழி, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான இனம் என்பதையும், தமிழீழ கட்டமைப்புக்கள் ஊடாகவும், சர்வதேச பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், தமிழீழ தனியரசை உருவாக்கி உலகறிய செய்திருந்தார். எனவேதான் இந்த இடத்தில் இருந்துதான் தமிழர்களின் அடுத்தகட்ட அரசியல்முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அந்தவகையில் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக எமது திட்டத்துக்கு எவ்வகையான பாகுபாடின்றி அனைத்து தமிழர் தரப்பு ஒருங்கிணைப்பாளர்களும் ஒன்றுசேர்ந்து உழைக்குமாறு உளமாற வேண்டி நிக்கிறோம். எனவே தமிழர்களின் நீண்ட போராட்ட வரலாற்றுப் பாதையில் தமிழீழ தனியரசு அமைவதையே எமது கொள்கையும் இலட்சியமாகவும் கொண்டிருந்தோம் என்பது மறுப்பதற்கில்லை. எனவே உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர் தரப்பும் ஒன்றிணைந்து "தமிழீழத்திற்கான சர்வதேச வாக்கெடுப்பை" நடத்துவதற்கான தேவையினையும், அதன் சூழலையும், தெளிவுபடுத்தி தாம்வாழும்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் ஒன்று சேர்ந்து அந்தந்த நாடுகளுக்கு அழுத்தங்கள் கொடுப்பது மூலமாகவும், சட்டரீதியாகவும், சனநாயகரீதியான அரசியல் முன்னெடுப்புக்கள் மூலம் தொடர்ந்து மன உறுதி தளராது போராட வேண்டுமென வேண்டிநிற்கிறோம். தமிழர்களின் ஒன்றுபட்ட சக்திகளின் அழுத்தம் ஐ.நா சபை தமிழீழத்திற்கான சர்வதேச வாக்கெடுப்பு நடத்துவதற்கு மூன்றாம் தரப்பிற்கு உத்தரவிடப்படும்வரை தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டுமென அன்புரிமையுடன் வேண்டிநிற்கிறோம். அண்மையில் சர்வதேச வாக்கெடுப்பு மூலம் பிரிந்து சென்று தனியரசு அமைத்துக் கொண்ட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான் நாட்டைப் போல் தமிழீழம் பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் வரை அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து போராடுவோம்.

நன்றி
த.கதிரவன்
இணைப்பாளர்
உலக தமிழ் இளையோர் ஒன்றியம்
தமிழீழம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
« PREV
NEXT »

No comments