கடல் எம் சனங்களுக்கு சவக்குழியானது! – கவிஞர் தீபச்செல்வன்
by
Editor
11:14:00
-
0
இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டன. ஈழ இறுதிப் போரின் போது அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் நந்திக்கடலில் கொன்று எரியப்பட்டனர். அதற்கு முன்பாகவே கடலில் பல இனக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் குமுதினிப்படுகொலை.
ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. ஈழத்தின் மிகப் பெரிய தீவு என்பதனால் நெடுந்தீவு என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகின்ற போது, அடிப்படைவசதிகளற்ற நிலையில் இருக்கிறது நெடுந்தீவு. எனினும் பல அறிஞர்களையும் கலைஞர்களையும் ஈழத்திற்கு அளித்த மிக முக்கியமான தீவ இதுவாகும். இத் தீவுக்கான போக்குவரத்து புங்குடுதீவில் இருந்து படகு வழியாகவே அன்று தொட்டு இன்றுவரையில் மேற்கொள்ளப்படுகின்றது.
மே 15ஆம் நாள். 1985ஆம் ஆண்டு. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகு பயணிகளை சுமந்து சென்றது. அன்றைக்கு காலையில் 7.15மணிக்கு 64 பயணிகளை ஏற்றிய குமுதினிப்படகு, நயினாதீவுக்குச்சென்றது. வழமைபோலான பயணம். கடலை ரசித்தபடி சென்ற மக்களுக்கு இலங்கை கட்படையின் அச்சம் உள்ளுக்குள் இருந்தது. ஆனாலும் எதிர்பாராதபடி இலங்கை இராணுவத்தின் இரண்டு பிளாஸ்டிக் படகுகள் சூழ்ந்தன. இடைமறித்த படகுகளை கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.
இலங்கை அரச படைகளை சேர்ந்த ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். படகின் பின்னால் இருந்த மக்களை படகின் இயந்திர அறைக்கு வருமாறு ஆயுதங்களால் படைகள் மிரட்டினர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இயந்திய அறை இருக்கை மட்டத்திலிருந்து 4 அடி ஆழமாக இருந்தது. அதற்குள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். பயணிகளோ அச்சத்துடன் உள்ளே சென்றனர்.
No comments
Post a Comment