Latest News

January 01, 2019

உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம்
by admin - 0

உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் நினைவாக நூலகம் 


பிரித்தானியாவில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் நினைவாக நூலகம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது  


அத்துடன் வைத்தியர் கா.சுஜந்தனின் கவி நூல் வெளியீடு நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானியா, ஒக்ஸ்ஃபோர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் திகதி அன்று இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஈழத்து படைப்பாளரும் மருத்துவப் போராளியுமான சுருதி மற்றும் சுஜோ எனும் புனை பெயர்களில் இந்த கவி நூல் எழுதப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் அனைவருக்கும் உரித்துடைய பொது நிலத்தில் தமிழரின் வரலாற்று முக்கியத்துவங்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கையளிக்கும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தியோகபூர்வமாக உலகத் தமிழர் வரலாற்று மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்றான நூலகத்தின் ஆரம்ப கட்டமாக அடையாள நூலக கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டு இளையோர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் பொதுச்சுடரினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி ஆகிய புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஏனைய முக்கியஸ்த்தர்களும் ஏற்றி தொடங்கி வைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பிரித்தானிய தேசியக்கொடியை ஹெய்ஸ் கவுன்சிலர் சான்சம்புரி ஏற்றியுள்ளார். பின்னர் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தினால் திருவுருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின் அகவணக்கம் இடம்பெற்றதுடன் தொடர்ந்து நூல் நிலையம் இளையோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலகமானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவாக அமைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஈழத்து எழுத்தாளரான சுருதி (சுஜோ) எனும் வைத்தியர் கா.சுஜந்தனின் படைப்பில் அகதியின் குழந்தை எனும் கவிதை நூல் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் தமிழர் கல்வி கலை பண்பாட்டு நடுவத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மாமனிதர், வைத்தியர். கெங்காதரனின் நினைவாக உருவான அகதியின் குழந்தை எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

உலகத் தமிழர் வரலாற்று மையம், தமிழர் கல்வி, கலை, பண்பாட்டு நடுவம் மற்றும் வெளியீட்டகம் சார்பாக புரட்சி என்பவர் உரையாற்றியுள்ளார்.

தொடர்ந்து அருண், வைத்தியர் வாமன் மற்றும் வைத்தியர் தணிகை ஆகியோரால் நூலாசிரியர் பற்றிய அறிமுக உரைகள் ஆற்றப்பட்டுள்ளன.

தாயக விடுதலை பயணத்தில் பெரும் பங்காற்றிய மூத்த வைத்தியர் சோமசுந்தர ராஜாவின் ஆசியுரையினை தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றுள்ளது.

நூலின் முதல் பிரதியினை தமிழீழ மருத்துவத்துறை பொறுப்பாளர் மனோஜ் வெளியிட்டு வைத்துள்ளார். நூலின் பிரதிகளை வைத்திய பெருந்தகைகளும் புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெற்றுக் கொண்டனர்.

நூல் வெளியீட்டு நிகழ்வில் போராளி கவிஞர் வாணன், ரேணுகா உதயகுமார், கவிஞர் இன்பன், தமிழ் ஆய்வு மையத்தை சேர்ந்த திவாகரன் ஆகியோர் நூல் பற்றிய தமது பார்வையை வழங்க ஊடகவியலாளர் மற்றும் ஆய்வாளர் தினேஸ் நூலுக்கான திறனாய்வு உரையினை நிகழ்த்தினார்.

நூலாசிரியர் சார்பாக பொருளியலாளரும், ஆய்வாளரும் நீண்டக்கால தேசிய செயற்பாட்டாளருமான ஆசிரியர் க.பாலகிருஷ்ணன் ஏற்புரையினை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வின் இறுதியாக நூல் வெளியீட்டின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியானது தாயக குழந்தைகளின் உயர் கல்விக்காக உதவும் நோக்குடன் மக்கள் நலன் காப்பகத்தின் பிரதிநிதியிடம் பொதுமக்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகளின் முன்னிலையில் கையளிக்கப்பட்டுள்ளது.

தயாபரனால் உலகத் தமிழர் வரலாற்று மையம் சார்பாக ஆற்றப்பட்ட நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றுள்ளது.

இதேவேளை உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் நடாத்தப்படும் வணக்க நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வுகளில் ஏராளாமான பொதுமக்களும், இளையோரும், போராளிகளும், புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதி நிதிகள் மற்றும் ஏனைய தமிழின ஆர்வலர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவினை நல்கியிருந்தனர்.














« PREV
NEXT »

No comments