இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.
இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதை கோரியும் பிரித்தானிய பாராளுமன்றில் நேற்று திங்கட்கிழமை இனப்படுகொலை மாநாடு நடைபெற்றது.
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்றைய நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ‘தடுப்போம் தண்டிப்போம் என கொடுத்த வாக்குறுதி எங்கே’ எனும் தொனிப்பொருளில் பிரித்தானிய பாராளுமன்றின் 10 ஆம் இலக்கம் குழு அறையில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை குறித்த மாநாடு இடம்பெற்றது.
பிரித்தானியாவின் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டோனாவின் தலைமையில் ஆரம்பமான மேற்படி நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் ஆரம்ப உரையினை (நியூயோர்க்கிலிருந்து ஸ்கைப் தொழில் நுட்பத்தின் மூலம்) நிகழ்த்தினார்.
தொடர்ந்து மூத்த அரசியல் வாதியும் பரிஸ்டருமான பீற்றர் ஹேன்ஸ் இலங்கை தொடர்பான கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குழுவின் முக்கியஸ்தர் ரிச்சட் ரோஜர்ஸ் மற்றும் உலகளாவிய விடாமுயற்சி மற்றும் பங்குதாரர் அமைப்பின் அலெக்ஸ் பிரசந்தி ஆகியோர் பிரதான உரைகளையாற்றினர்.
இதனையடுத்து ICPPG இன் இயக்குனர் அம்பிகை சீவரட்ணம் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சாட்சியங்களை சொல்ல யாவரும் முன்வரவேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தர வழிவகுக்கும் என தனது உரையில் பிரதானமாக குறிப்பிட்டார்.
இறுதியாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன் நிறுத்தி நீதியை பெற்றுக்கொள்வதற்கான வலியுறுத்தலை பிரித்தானியா முன்னெடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வரும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இணையவழி கையெழுத்து போராட்டத்திற்கு பங்காற்றிய செயற்பாட்டளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.
செய்தி படங்கள் ஈழம் ரஞ்சன்
No comments
Post a Comment