யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக் கலைஞரும் யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார்.முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார். ஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார்.
இந்திய இராணுவக் காலப்பகுதியில் மக்களை எழுச்சிப் படுத்தும் பல பாடல்களைக்கு இவர் ராஜன் இசைக்குழுவுக்காக இசையமைத்தார். பலஸ்தீனம் உள்ளிட்ட போராட்ட நாடுகளின் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு இவர் இசையமைத்தார்.அதில் ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா..உன் பாதணிகளை எனக்குத்தா.. என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.
இதுபோன்ற பல ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். பிஞ்சு மனம் ஈழத் திரைப் படத்திற்கு இவர் பின்னணி இசையமைத்தார். அத்துடன் அப் படத்தில் இடம்பெற்ற பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற குமாரசாமி பாடிய பிரபலமான ஈழப் பாடலுக்கும் இவர் இமையமைத்தார்.அத்துடன் நீரடித்து நீரங்கு விலகாது .. என்ற பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.
இதேவேளை கலை பண்பாண்டுக் கழகம் வெளியிட்ட ஈழத்தின் பெண்கள் விடுதலையுடன் தொடர்பான திசைகள் வெளிக்கும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த இவர் தமிழீழ பெண் போராளிகளுடன் இணைந்து இசை படைப்புக்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர்தேவாவுடனும் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார். ஈழத்தின் ஆரம்பாகால இசை முயற்சிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ள யாழ் ரமணன் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் தங்கள் கிற்றார் இசை ஒலித்து பிரபலம் பெற்றிருந்தார். இவருக்கு யாழ் ரமணன் என்ற பெயரை பிரபல அறிவிப்பாளர் அபி.எச்.அப்துல் ஹமீத் சூட்டினார். இவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.தமிழீழ தேசியத்தலைவரது நன்மதிப்பினை பெற்றிருந்த ரமணனின் இறுதிக்கிரியைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.ஈழ விடுதலைப்போராட்டத்தில் 600 இற்கும் அதிகமான பாடல்களிற்கு இசைத்தமைவர் என்ற பெருமையினை ரமணன் பெற்றுக்கொண்டிருந்தார்.ரமணின் புகழுடலிற்கு மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
No comments
Post a Comment