Latest News

August 05, 2018

ஈழத்துக் கலைஞர் மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
by admin - 0

ஈழத்துக் கலைஞர் மாமனிதர் பொன்.கணேசமூர்த்தி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.



04-08-2006 அன்று  ஈழத்துக் கலைஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் அரச ஏவல் கூலிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து 
சுட்டுக் கொல்லப்பட்டார்.எழுத்தாளர்களை கொல்வதால் விடுதலை சார் சிந்தனைகளை முடக்கி விடலாம் என்ற சிங்கள பேரினவாத அரசின் திட்டத்தின் கீழ் அநியாயமாக கொல்லப்பட்ட ஒரு தேசிய சமூக எழுத்தாளர் இவராவார்.தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக சாத்வீக வழியில் தன் சிறுவயது முதல் அயராது உழைத்து 
வந்து விடுதலை வரலாற்றில் இடம்பிடித்தவர்.பல்துறை கலை ஆற்றல் கொண்ட இவர் வைகறை, இலங்கை மண் , "பொன் பரப்பித்தீவு" ஆகிய வானொலி தொடர் நாடகங்களையும் தனி நாடகங்களையும் உருவாக்கி வழங்கியிருந்தார். விடுதலைக் கருத்துக்களை விதைப்பதற்காக அரங்க நாடகங்களும் பொன்.கணேசமூர்த்தியினால் பாடசாலைப் பருவம் முதல் அரங்கேற்றப்பட்டுள்ளன.தமிழின உணர்வு எழுச்சியூட்டும் சஞ்சிகையின் ஆசிரியராக செயற்பட்டவர். "வரலாறு சொல்லும் பாடம்" என்ற நூலை உருவாக்குவதில் தீவிரமாக உழைத்து வந்தார்."மண்ணுக்காக" என்ற முழுநீள திரைப்படத்தையும் இவர் உருவாக்கினார்.



ஈழத்தின் வடபுலத்தில் கவிஞர் மிகப்பிரபலமானவர்.புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் அனைவரது மனத்தில் நிற்க்கும்.

அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர்.பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர்.
பல படைப்புக்களை வெளியிட்டவர்.

இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு அவர் எழுதிய இறுதிநாவல் எடுக்கவோ தொடுக்கவோ? உருக்கமானது.

இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென அருமையான பல தாயக பாடல்களை எழுதியளித்துள்ளார்.

1.தமிழீழ மொட்டுக்கள் 
2.செஞ்சோலை 
3.சூரியப் புதல்விகள் 
4.கடற்கரும்புலிகள் பாகம்-4
5.கடற்கரும்புலிகள் பாகம்-5

இன்னும் பல தாயக பாடல்களை எழுதியவர்.

இவருடைய மூன்றாவது மகன்  விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்து 1996 இல் யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்தவர்.
விடுதலைக்காக நிறைவான பணியாற்றியவர் பொன் கணேசமூர்த்தி.

பொன் கணேசமூர்த்தியின் நெறியாள்கையில் உருவான பிரபலமான மேடை நாடகங்கள்;

1. இரட்டை முகங்கள்
2. சந்தன கட்டைகள்
3. சந்தனக்காடு

வில்லிசை, உரைவீச்சு உட்பட்ட பல்வேறுபட்ட வானொலி நிகழ்ச்சிகளை படைத்திருந்த இவர் பெருமளவிலான 
விடுதலைப் பாடல்களையும் உருவாக்கியுள்ளார்.வானொலி, அரங்க திரைப்பட நடிகனாகவும் செயற்பட்ட இவர், பாடலாசிரியராகவும் நாவலாசிரியராகவும் கவிஞராகவும் பாடகராகவும் வில்லிசைக் கலைஞராகவும் சிறப்பாக செயற்பட்டு வந்தார்.இவர் ஓகஸ்ட் 4, 2006 இல் யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத அரச ஏவல் கூலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள்:

தூரம் தொடுவானம் (நாவல்)
துளித்துளி வைரங்கள் "Droplet Diamonds" (தமிழ்-ஆங்கில கவிதைத் தொகுதி)
எடுக்கவோ தொடுக்கவோ (கவிதைத்தொகுதி)
இலங்கை மண் (நாடகம், 2008)
"துளித்துளியாய்.." (நாவல்)

பன்முகப்பட்ட கலை இலக்கிய பணியாற்றி விடுதலை பாதையில் உளியாக திகழ்ந்த இவரை வரலாற்று பத்திரப்படுத்தியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து, படுகொலை செய்யப்பட்ட பொன். கணேசமூர்த்தி அவர்களுக்கு தமிழீழ தேசிய தலைவர் வே. பிரபாகரன் மார்ச் 15, 2008 இல் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளித்தார். 

***********************************
15-03-2008 அன்று வெளியிடப்பட்ட செய்தியிலிருந்து.
***********************************
ஈழத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பொன் கணேசமூர்த்தி அவர்களை, மாமனிதராக தமிழீழதேசியத் தலைவர் மதிப்பளித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் நாளன்று, யாழ் குடாநாட்டில் சிறீலங்கா படைகள் அரங்கேற்றிய கொலை வெறியாட்டத்தில், யாழ் நகரில் இயங்கும் மக்கள் வங்கியின் காங்கேசன்துறைக் கிளையின் முகாமையாளரும், தமிழ் தேசிய எழுத்தாளருமான பொன்.கணேசமூர்த்தி அவர்கள் பலியாகினார். இவரால் எழுதப்பட்ட, 'இலங்கை மண்' என்ற தலைசிறந்த நாடகநூல் இன்று கிளிநொச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.இதன்பொழுது, பொன்.கணேசமூர்த்தி அவர்களுக்கு மாமனிதர் நிலை வழங்கி, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்த செய்தி, தமிழீழஅரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களால் படித்தளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பண்பாட்டு மண்படத்தில், இன்று காலை 10:00 மணிக்கு இடம்பெற்ற நூல் அறிமுக நிகழ்விற்கு, தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச்சுடரினை தமிழீழ மாவீரர் பணிமனையின் பணிமுதல்வர் பொன்.தியாகம் அவர்கள் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஏற்றி வைத்தார். ஈகைச்சுடரினை, தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை – பண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அவர்கள் ஏற்ற, மாமனிதரின்திருவுருவப் படத்திற்கு, சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் அவர்கள் மலர் மாலை அணிவித்தார். தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் அவர்களின் தலைமையுரையினை தொடர்ந்து, வெளியீட்டுரையினை புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளர் நா.தமிழன்பன் அவர்கள் ஆற்றினார்.நூலை,போராளி அன்புச்செல்வன் அவர்கள் வெளியிட்டு வைக்க, முதற்படியை, போராளி மருத்துவர் தேவா அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலின் சிறப்புப் படிகளை, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் வழங்க, முதற் சிறப்புப் படியை, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நூலிற்கான மதிப்பீட்டுரையினை, சமர் நூலாக்கப் பிரிவுப் பொறுப்பாளர் யோ.செ.யோகி அவர்களும் சிறப்புரையினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் அவர்களும் ஆற்றியிருந்தனார்.

தூங்கிக் கிடந்த தமிழினத்தை தட்டியெழுப்பியவர் பொன் கணேசமூர்த்தி அவர்கள் என, தமிழீழ தேசியத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

பொன்.கணேசமூர்த்தி அவர்களுக்கு, மாமனிதர் நிலை வழங்கி மதிப்பளித்திருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், ஆதித்தமிழ் மன்னன் இராவணனை கதாநாயகனானக் கொண்டு, அவர் எழுதிய 'இலங்கை மண்' எனும் கலைப்படைப்பை, எவருமே மறந்துவிட முடியாது எனக் கூறியுள்ளார்.

''மக்களின் விடுதலை என்ற ஒரு மகத்தான இலட்சியத்தை வரித்து, அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய அயராது போராடி, அந்த இலட்சியப் போரில் தன்னையே அர்ப்பணித்த ஒரு உயர்ந்த மனிதர் இன்று எம்முடன் இல்லை.

இந்த உன்னதமான மனிதரை பகைவன் பலிகொண்ட செய்தி, எமக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தருகிறது.

திரு.பொன்.கணேசமூர்த்தி அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அபூர்வமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சத்திலே நேர்மையும் உள்ளத்திலே உயர்ந்த எண்ணமும் கொண்டவர். அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்வார்.

நகைச்சுவை நடனமாடும் அவரது நாவும், கேட்பதற்கு இனிமையான அவரது கேளிக்கைப் பேச்சும் அனைவரையும் கவர்வன.பொதுவாகவே, உயரிய கலைப்படைப்புக்கள் எப்போதுமே இரு முகங்களைத் தன்னகத்தே கொண்டவை. தாம் தோன்றிய சமகாலத்தை நோக்கியதாக ஒரு முகமும், எல்லையற்று வியாபித்து நிற்கின்ற எதிர்காலத்தை நோக்கிய இன்னொரு முகமுமாக, எக்காலத்திற்கும் பொருந்தும் உயரிய தன்மை கொண்டவை.

இத்தகைய, காலத்தில் சாகாத கலைப்படைப்புக்களைப் படைத்து, எமது மக்களது மனங்களைத் தொட்டுச் சென்றவர் இவர்.

கவிஞராக, சிந்தனையாளராக, வரலாற்று அறிஞராக, மேடைப் பேச்சாளராக, பாடகராக, பல்துறை விற்பன்னராக அறிமுகமாகி, கடந்த நாற்பது ஆண்டுகளில் அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.

இவர் தமிழீழ மண் மீதும், மக்கள் மீதும் அளவில்லாத அன்பும் பாசமும் கொண்டவர். தமிழீழ மண் விடுதலை பெற்று, ஒரு சுதந்திர தேசமாக மலர வேண்டும் என்ற ஆவல் கொண்டவர் இந்த அபிலாசைக்காக தனது அறிவாற்றலாலும், செயலாற்றலாலும் அயராது உழைத்தார்.

தனது ஆழ்மனதில் எரிமலையாகக் குமுறிய விடுதலை வேட்கையை, உணர்வின் வரிகளாக வடித்து, எம்மக்களது மனங்களிலே விடுதலைத்தீயை மூட்டினார்.இருண்ட காலத்து இதிகாசங்களின் தாலாட்டுப்பாடல்களில் தூங்கிக்கிடந்த எம்மக்களைத் தட்டியெழுப்பி, விடுதலைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சாதி, சீதனம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றிற்கு காப்பரணாக நின்று அநீதியில் அமைந்த பழைய சமூக உறவுகளைத் தகர்த்தெறிந்து, புதிய சமூக உறவுகளைக் கட்டியெழுப்பி, புதிய புரட்சிகரமான கருத்துக்களை மக்களதுமனதைப் பற்றிக்கொள்ளும் விதத்தில் முன்வைத்தார்.

சீதன முறைமை என்பது ஒரு பெண் அடக்குமுறை வடிவம் என்பதை, அறிவுசார் உலகத்தில் இருந்து சமூகவியல் கண்ணோட்டத்துடன் எடுத்து விளக்கி, பெண் விடுதலைக்குப் போராடினார்.

சாதாரண மனிதனின் சாதாரணமான சமூகப் பிரச்சினைகளைக்கூட, சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண மொழியில் எடுத்து விளக்கி சமூக விடுதலைக்காகப் போராடினார்.

தொண்ணூறுகளில் இவர் எழுதி, வானொலி நாடகமாக ஒலிபரப்பாகிய, இராவணனை கதாநாயகனாகக் கொண்ட ''இலங்கை மண்" எனும் கலைப்படைப்பை எவருமே மறந்துவிட முடியாது.

தமிழ் மன்னன் ஒருவனை, ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன்றுக்குப் பலியாக்கி, அதில் உண்மைகளை திரிவுபடுத்தி, பொய்மைகளை புனைவுபடுத்தி, தமது இலக்கியக் கதையாடலுக்கான சுவையூட்டியாகச் சேர்த்துக் கொண்டவர்களின் முகத்திரையைக் கிழித்து, உண்மையை அனைவருக்கும் உணரச் செய்தது இவருடைய படைப்பாகும்.

அத்தகைய காலத்தை மிஞ்சிய தமிழ் வரலாற்றை, கலைநுகர்வாளர்களின் கண்முன் கொணர்வித்து நிறுத்தியது, தமிழின் வாழ்வு மீது இவர் கொண்ட பற்றுதலுக்கு நற்சான்றாகும்.திரு.பொன். கணேசமூர்த்தி அவர்களின் இனப்பற்று, விடுதலைப்பற்று ஆகியவற்றுக்கு மதிப்பளித்தும், எமது தேச வளர்ச்சிக்கு அவர் வழங்கிய உயரிய பங்களிப்பைக் கௌரவித்தும், ''மாமனிதர்'' என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன்.

உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை, சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.'' இவ்வாறு, தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

-ஈழம் ரஞ்சன்-
« PREV
NEXT »

No comments