Latest News

September 29, 2017

புதிய அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கையை பரிசீலிக்கக் கூடத்தயாரில்லை
by admin - 0

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி ஆரம்பமான புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்று அண்மையில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தமிழர்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளான வடகிழக்கு இணைப்பு, தேசம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சமஸ்டி ஆகிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.



அத்துடன் பெளத்த மதமே அரச மதம் என மீளவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம்.

இந்த அறிக்கையை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இந்த அறிக்கையைப் பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ள நாங்கள் தயாரில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களுக்கான தீர்வு எனும் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை அமைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தமிழ்மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த அரசியல் கோரிக்கைகள் அனைத்தையும் இந்த அறிக்கை அடியோடு

நிராகரித்துள்ளதுடன், கடந்த 68 ஆண்டு காலமாகத் தமிழர்களை அடக்கி ஒடுக்கி வருகின்ற பெளத்த சிங்களப் பேரினவாத அடிப்படைகளை மீளவும் வலியுறுத்துகின்ற வகையிலான அறிக்கையாகவும் இந்த இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக பெளத்த மதத்திற்கு முன்னுரிமை என்பதைத் தமிழ்த் தரப்புக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இவ்வாறான அறிக்கை வெளிவருவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள மிகப்பெரிய வரலாற்றுத் துரோகம்.

சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஸ்டித் தீர்வைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி வழங்கித் தேர்தல் காலங்களில் தமிழ்மக்களிடமிருந்து வாக்குப் பெற்றவர்கள் ஒற்றையாட்சிக்கும்,

பெளத்த மத முன்னுரிமை என்ற கொள்கைக்கும், வட-கிழக்குப் பிரிப்பிற்கும், சுயநிர்ணய மறுப்பிற்கும் சம்பந்தன், சுமந்திரன், மாவை தலைமையிலான கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியிருப்பது மிகப்பெரிய அநீதி.

இந்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில் யாப்பு இறுதிப்படுத்தப்பட்டுப் பொதுசன வாக்கெடுப்பிற்கு வருகின்ற போது அதனை ஆதரிப்பதற்கும் கூட்டமைப்புத் தயாராகவுள்ளதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஒற்றையாட்சி அடிப்படையிலான புதிய அரசியல் யாப்பு பொதுசன வாக்கெடுப்பிற்கு வரும் நிலை உருவானால் எங்கள் மக்கள் அதனைப் புறக்கணிக்கச் செய்வதற்காக எமது கட்சி சளைக்காது போராடும் என அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments