தமிழ்நாட்டில் வெடித்த தமிழீழ எரிமலை.!
கவிஞர் காசி ஆனந்தன்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என்ற நினைவு அப்போது தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தார், நானும் தமிழ்நாட்டிலிருந்தேன். விடுதலை புலிகள் இயக்கம் துடங்கபட்ட காலம் ஐம்பது வீரர்கள் மட்டுமே அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தார்கள். தலைவர் அவர்களுடன் தமிழ்நாட்டில் பதினைந்து பேர் வரை கூடவே தங்கியிருந்தார்கள். புலிகளுக்கு உணவளிப்பது கூட சிரமமாக இருக்கிறது அண்ணா உங்கள் கவிதைகளை தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டு அதில் வரும் விற்பனை பணத்தை நான் பயன்படுத்த விரும்புகிறேன் என்று தலைவர் சொன்னார்.
நான் குறிப்பிடுவது எம்.ஜி.ஆர் உதவி செய்ததற்கு முந்தைய காலம். சென்னை வாணி மஹாலில் என் கவிதை நூல் வெளியீடு நடந்தது. அந்த நூலை எதற்காக வெளியிடுகிறேன் என்று தலைவர் அவர்களுக்கு, எனக்கு, ஓவியர் சந்தானம் அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது.
வாணி மஹாலில் நடைப்பெற்ற கவிதை வெளியீட்டு விழாவில் நானும் சந்தானம் அவர்களும் கலந்துக்கொண்ட அந்த நாள் எங்கள் உறவின் தொடக்கம்.
அந்த காலத்தில் தமிழீழத்தில் தோன்றிய பல ஆயுதக் குழுக்களும் தமிழ்நாட்டில் முகாமிட்டு இருந்தன, அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அணைவரும் ஓவியர் சந்தானத்தின் ஆளுமையை தெரிந்தே அவரை நெருங்கினார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அவர் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு கடைசிவரை தலைவர்.பிரபாகரனையே தன் தலைவராகவும் விடுதலைப் புலிகளையே தனது அமைப்பாகவும் முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு நான் காரணமாக இருந்தேன்.
அப்பொழுது அவர் ஒரு அரசு பணியாளராக இருந்தார். ஓவியத்தோடு தொடர்புடைய இந்திய அரசின் ஒரு துறையில் அவர் தலைமை இயக்குனராக பணியாற்றினார், இருந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக அந்த காலத்திலேயே அவர் தமிழ்நாட்டில் வெளிபடையாக இயங்கினார். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைக்குறித்து முதல் ஓவியக் கண்காட்சியை அவர் நடத்தினார்.
தமிழ்நாட்டிலிருந்து தமிழீழத்துக்கு பல தலைவர்கள் கலைஞர்கள் போய் வந்துக்கொண்டிருந்தனர். தமிழீழத்திற்கு அவர் போனதும் இல்லை, வந்ததும் இல்லை. ஆனால் தமிழீழம் அவர் கூடவே இருந்தது. அவர் நெஞ்சில் இருந்தது, அவர் நினைவில் இருந்தது, அவர் மூச்சில் இருந்தது, அவர் பேச்சில் இருந்தது.
ஓவியர் சந்தானம் ஒரு ஈடுஇணையற்ற ஓவியர். அவர் ஓவியத்தை பார்த்து ஒருமுறை நான் கூறியது நினைவுக்கு வருகிறது “ ஓவியர் சந்தானத்தின் வளைந்த கோட்டினிலும் ஒரு நிமிர்வு இருக்கும்; அவருடைய கருப்பு வண்ணத்திலும் ஒரு சிவப்பு இருக்கும்”. ஆம் இதுதான் வீரசந்தானத்தின் ஓவியம்.
முள்ளிவாய்க்காலிற்குப் பின்பு ஓவியர் சந்தானம் முழு அளவில் உடைந்துப்போனார். என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் கடைசிவரை அவர் நனைந்த கண்களுடனும் பெரும்மூச்சுடனுமே பேசினார். தமிழீழ மண்ணில் மிதவாத சக்திகளில் துரோக தனமான அரசியல் தலைத்தூக்கிவிட்டதாக அவர் விம்பினார் வெதும்பினார். மீண்டும் ஒரு மீள் உருவாக்கம் – மறுபடியும் ஒரு மறுமலர்ச்சி – திரும்பவும் ஒரு தீப்பிழம்பு என்ற ஏக்கத்துடனே வாழ்ந்தார் சந்தானம்.
உலக நாடுகளின் வேண்டுகோளுக்கோ, ஐ.நா மன்றத்தின் ஆணைக்கோ கட்டுபட்டு முடிவுகளை எடுப்பவனல்ல சிங்களவன், உறுதிகொண்டு களத்தில் நின்று விடுதலைப்புலிகள் நடத்திய போர்நெறிதான் சிங்களவனை என்றைக்கும் கட்டுப்படுத்தும். புலிகள் வாழ்ந்த காலத்தில் – போர் நடந்த காலத்தில் சிங்களவன் அடங்கி ஒடுங்கியிருந்தான். போர் முடிந்த காலத்திலிருந்து இன்று வரை ஈழ மண்ணில் தமிழ் மக்களையும் அவர்களின் தாயகத்தையும் தொடர்ந்து சிங்களவன் வேட்டையாடுகிறான். போர் ஒன்றுதான் தமிழீழ விடுதலைக்கு ஒரே தீர்வு என்று தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் மேடைகளிலும், முள்ளிவாய்க்காலுக்கு பின்பு தொடர்ந்து போர் முரசு கொட்டிவந்தார்.
குரலாளும் அவர் தமிழீழத்துக்கு போராடினார், ஓவியம் வரைந்த விரலாளும் அவர் தமிழீழத்துக்கு போராடினார். அந்த குரலும் ஓய்ந்தது, அந்த விரலும் ஓய்ந்தது.
தலைவர் பிரபாகரன் அவர்களின் அதே மூச்சோடும், வீச்சோடும் அவர் தலைமையில் என்பதாயிரம் மாவீரர்கள் களமாடிய அதே அதிர்வோடும் ஆற்றலோடும் தமிழீழ மண்ணில் மீண்டும் விடுதலை எரிமலை வெடிக்க வேண்டும் என்ற ஒற்றை கனவோடுதான் ஓவியர் சந்தானம் தன் கண்களை மூடிக்கொண்டார்.
எனக்கு தெரியும் சாவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பும் தமிழீழ மண்ணில் அந்த பெரிய நெருப்பை திரும்பவும் எப்படி மூட்டுவது என்ற மிகப்பெரிய தவிப்பு அவரிடம் இருந்தது. நானும் எனது நண்பர்களும் அவரை சந்தித்த அந்த நேரத்தில் தமிழீழம் அமையும், தமிழீழம் அமையும் என்று அந்த ஓவிய புலி உறும்பியது. ஓவியர் சந்தானம் தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒருவராய் இருப்பார். தமிழீழம் இந்த ஓவிய மாவீரனை சேர்த்தே தலைவணங்கி வீறுகொண்டெழும்.
-கவிஞர் காசி ஆனந்தன்
இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையம்
No comments
Post a Comment