Latest News

April 27, 2017

ஈழப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைத்ததற்காக எம்மீது தேசத்துரோக வழக்குகள்!
by admin - 0

 

இறுதிக்கட்ட ஈழப்போரின்போது, ஈழப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைத்ததற்காக என் போன்றோர் மீதும் தேசத்துரோக வழக்குகள் தொடக்கப்பட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சீமான் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவருடைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் வைகோ தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு, 20 நாட்களுக்கு மேலாக சிறைப்பட்டிருப்பது மிகுந்த மனவருத்தத்தை தருகின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி சென்னை ராணிசீதை மகாலில் நடைபெற்ற ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அண்ணன் வைகோ அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக அவர் மீது தேசத்துரோக வழக்குப் புனையப்பட்டது.

இதன்விளைவாக, அவரது கடவுச்சீட்டும் முடக்கப்பட்டது. வழக்கு தொடுக்கப்பட்டு 8 வருடங்களுக்கு மேலாகியும் முடித்து வைக்கப்படாததால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் சென்று வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, பிணையை மறுத்துச் சிறைசென்றுள்ளார் அண்ணன் வைகோ.

தடை செய்யப்பட்ட இயக்கங்களையோ, அதன் தலைவர்களையோ ஆதரித்துப் பேசுவது குற்றமில்லை என ஒருமுறைக்குப் பலமுறையாக உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுப்படுத்தியுள்ளது.

இறுதிக்கட்ட ஈழப்போரின் போது, ஈழப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைத்ததற்காக என் போன்றோர் மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்குகளிலும் கூட அவ்வகைத் தீர்ப்புகளே வெளிவந்திருக்கின்றன.

அப்படியிருக்கையில், அண்ணன் வைகோ மீது தொடுக்கப்பட்ட இவ்வழக்கானது சட்ட விதிமுறைகளுக்கே எதிரானது. சனநாயகத்தின் அடிநாதமான கருத்துரிமைக்கே உலைவைக்கிற செயலாகும்.

ஈழப்படுகொலையை மூடி மறைக்கவும், அதற்கெதிராய் குரலெழுப்புவோரின் குரல்வளையை நெறிக்கவும் அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு தயவில் தமிழகத்தை ஆண்ட திமுக அரசு பயங்கரவாதத்தின் கொடுங்கரம் கொண்டு அடக்குகிற செயலாகவே இவ்வகை வழக்குகள் தொடுக்கப்பட்டன என்பதே காலம் உணர்த்தும் உண்மை.

இவ்வழக்குகள் சட்டப்படியும், நியாயப்படியும் நிலைநிறுத்த தக்கதல்ல என்பதால், உடனடியாக நடத்தி முடிக்க இயலும். ஆனால் இவ்வழக்கினை அரசின் தரப்பு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது.

இதன்மூலம், இவ்வழக்குகளுக்குப் பின்புலத்தில் இருக்கும் அரசியல் உள்நோக்கத்தையும், காழ்ப்புணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம். ஆளும் வர்க்கங்கள் போராட்டக்காரர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் இவ்வித வழக்குகளைத் தொடுத்து அதிகாரத்தினைத் தவறாகப் பயன்படுத்தி வருவது தமிழக ஆட்சியாளர்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்றாலும், இது வன்மையான கண்டனத்திற்குரியது.

எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழகத்தில் ஒரு அசாதாரணச் சூழலும், அரசியல் பெருங்குழப்பமும் நிலவிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் வாழ்வாதாரத்தினையும், நிலவளத்தினையும் நிர்மூலமாக்கும் திட்டங்கள் தமிழர் மண்ணில் புகுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக, அனுபவங்கள் பல பெற்ற அண்ணன் வைகோ அவர்கள் இத்தகைய சூழலில் சிறைப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு அஏற்பட்ட இழப்பாகும்.

அவர் விரைவில் சிறைமீண்டு தமிழகத்தின் உரிமைகளுக்காகக் கருத்துரையாளராகவும், களப்போராளியாகவும் போராடும் தருணத்தை எதிர்நோக்குகிறோம்.

எனவே, அண்ணன் வைகோ அவர்கள் மீது தொடரப்பட்ட இப்போலியான வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், அண்ணன் வைகோ அவர்கள் விடுதலைபெற்று தனது அரசியல், சமூகப் பங்களிப்பை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


« PREV
NEXT »

No comments