Latest News

April 27, 2017

போரில் வடகொரியா வெற்றி பெறுமா.?
by admin - 0

 

இன்றைய திகதியில் மக்களின் பேசுபொருளாக 3ம் உலகப்போர் பற்றியதாகவே இருக்கின்றது. அதற்கு பிரதான காரணமாக வடகொரியாவின் ஏவுகணைப்பரிசோதனையே முக்கியமாகக் கருதப்படுகின்றது. 

வடகொரியாவின் அணுவாயுதச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐநா சபை கொண்டுவந்த பொருளாதாரத் தடையையும் மீறி, இந்த பரிசோதனையை வடகொரியா மீண்டும் மேற்கொள்ள ஆயத்தம் செய்கின்றது.இந்தச் சோதனையின், பிராந்திய அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான், மற்றும் தென்கொரியா உட்பட அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளன. 

 


வடகொரியாவின் இளம் தலைவர் கிம் ஜொங் உண் (Kim Jong Un), அமெரிக்காவை இருந்த இடம் தெரியாமல் அழிக்கும் பலம் தமக்கு இருப்பதாக மார்தட்டுகின்றார். உண்மையில் வடகொரியாவால் அமெரிக்காவை அழிக்க முடியுமா? அதை அழிக்கும் ஆயுதபலம் வடகொரியாவுக்கு இருக்கின்றதா?இன்று பல எம்மவர்கள் அமெரிக்காவை, வடகொரியா அழிக்கும் என்றே நம்புகின்றனர். ஏன் எனது நண்பர்களும் சிலர் அப்படியேதான் நடக்குமென்று எண்ணுகின்றனர். இதற்கு ஒரு போதும் சாத்தியம் இல்லை என்பதே எனது கணிப்பு. 

 


ஏன் சாத்தியம் இல்லை.?
இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.! 

2ம் உலகப்போருக்கு முன்னர், இரண்டு கொரியாவும் ஒன்றிணைந்த கொரியாவாக, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 2ம் உலகப்போரில் தோல்வியைச் சந்தித்த ஜப்பான், கொரியாவை விட்டகன்றது.இந்தப் போரில் ஆதிக்கம் செலுத்திய ரஷ்ய மற்றும் அமெரிக்க சதியால் கொரியாவை இரண்டு நாடுகளாகப் பிரித்து, தங்கள் மறைமுக ஆளுகைக்குள் கொண்டுவந்தனர். அமெரிக்க சார்பு தென்கொரியா (முதலாளித்துவம்) பொருளாதாரத்தில் மென்பட்டு, அந்த மக்கள் செழிப்புடன் கூடிய வாழ்க்கையை இன்று வாழுகின்றனர். 

 


அதேநேரம் ரஷ்யாவின் பின்னால் சென்ற வடகொரியா (சோஷலிச கொள்கையை ஏற்றுள்ளது) வளர்முக நாடுகளின் பொருளாதாரத்துடன் பிணைந்து வளரமுடியாது, பல எதிர் நடவடிக்கைகளால், பல பொருளாதாரத் தடைகளைச் சந்தித்து, பெரும் உணவுப்பஞ்சத்துக்கு முகம் கொடுத்து வருகின்றது.

குடும்ப ஆட்சியை கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜொங் உண் மூன்றாவது ஆட்சியாளராவார். சோஷலிசத்தின் அடிப்படைக் குறிக்கோள் என்பது எல்லோரும் சமமான உரிமையுடன் கூடிய வாழ்க்கையே. 

உண்மையில் சோஷலிச நாடுகளான ரஷ்யா, சீனா, வடகொரியா போன்ற நாடுகளின் மக்கள்? சமமான வாழ்க்கையா வாழ்கின்றார்கள்? ஏற்றத்தாழ்வு இல்லாதா எல்லோருக்கும் சமமான பொருளாதார வாழ்க்கைத்தரம் கிடைத்துள்ளதா? ஒரு போதும் இல்லை.!ஆனால், இந்த நாடுகளின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் அதிகூடிய செல்வந்தர்களாக, கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத ஆடம்பர வாழ்க்கையை வாழுகின்றனர். இன்றைய திகதியில் உலகின் முதல் பணக்காரனாக ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டின் 75பில்லியன் சொத்துகள் சேர்த்து விட்டார். 

 


இதை விட மிகப்பெரும் அடக்குமுறைகளை வடகொரியா மக்கள் நாளாந்தம் சந்தித்து வாழ்கின்றனர். ஒரு அரசின் கடமை என்பது தனது நாட்டு மக்களின் மூன்று நேர உணவுத்தேவையை என்றாலும், குறைந்தது பூர்த்தி செய்யும் கட்டமைப்பை உருவாக்கி கொடுப்பதேயாகும்.

பெரும் உணவுப்பஞ்சத்தில் தத்தளிக்கும் வடகொரிய மக்கள், தங்கள் நாட்டில் இருந்து பாம்பு, எலி என எதையும் மிச்சம் வைக்காது உண்டு பசியாறி விட்டனர். இப்போது இந்த உயிரினங்கள் அழிந்தமையால் மாடு, ஆடு உண்ணும் புற்களை உண்டு உயிர் வாழ்கின்றனர். 

ஆனால், கிம் ஜொங் உண் அவரது தந்தை போலவே பல ஆடம்பர மாளிகைகளைக் கட்டி, சுகபோக வாழ்க்கையே வாழ்ந்து வருகின்றார். ஆக, வடகொரிய மக்களின் பெரும்பான்மையினர் இந்த சோஷலிச ஆட்சி முறைமைக்கு எதிராகவே உள்ளனர்.வடகொரியா தனது வருமானத்தில் பெரும் பங்கை இராணுவத் தளபாட மேம்படுத்தலுக்கும், உற்பத்திக்குமே பயன்படுத்துகின்றது. இதற்காக 6.7பில்லியன் டொலர் பணத்தை வருடமொன்றுக்கு செலவு செய்கின்றது. 

 


வடகொரியா மோத நினைக்கும் எதிரியான அமெரிக்காவோ 610பில்லியன் டொலர்களை இராணுவப் பாதுகாப்பு செலவுக்காக 2017 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கியுள்ளது. இன்றைய நிலையில் அதி நவீன ஆயுதங்களின் கையிருப்பு அமெரிக்காவிடமே உள்ளது.

வடகொரியாவின் இராணுவ பலம் என்ன? அதற்கு ஒரு உதாரணத்தைப் மட்டும் பார்ப்போம்.! 

வடகொரியா விமானப்படையிடம் ரஷ்யத் தயாரிப்பு மிக்-29 விமானமே (இது மூன்றாம் தலைமுறை விமானம்) சிறந்த தாக்குதல் விமானமாக உள்ளது. ஏனையவை அதற்கு முந்தைய விமானங்கள். இதை வைத்து அமெரிக்காவின் விமானங்களை எதிகொள்ள முடியுமா? ஒரு போதும் முடியாது.!

இந்த விமானங்களை, அமெரிக்காவின் F-15, F-22 போன்ற தாக்குதல் விமானகள், மேலெழுவதற்கு முன்னமே அழித்துவிட முடியும். அமெரிக்க விமானப்படை தற்சமயம் F-35 அதி நவீன ஐந்தாம் தலைமுறை (Stealth Fighter) தாக்குதல் விமானத்தை உருவாக்கி, தனது கடற்படையில் இணைத்துள்ளது. 

இந்த விமானத்தை எதிர்கொள்ளும் திறன் தற்போது வரைக்கும் எந்த நாட்டிடமும் இல்லை. இது போலவே தான் ஏனைய ஆயுதங்களும், அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது பல தலைமுறை பின்தங்கி நிற்கிறது வடகொரியா.நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். வடகொரியா இப்போதுதான் தனது அணு ஆயுதத்தை பரிசோதிக்கின்றது. ஆனால் அமெரிக்காவோ இற்றைக்கு 70வருடங்களுக்கு முன்னமே இந்த சோதனைகளைச் செய்து, மனிதர்கள்மீது சோதித்துப் பார்த்து விட்டது. 

 


வடகொரியா போரொன்றை ஆரம்பித்தால் தென்கொரியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா போன்ற வளர்ந்த மூன்று நாட்டு இராணுவத்தை நேரடியாகவும், இவர்களின் சார்பு நாடுகளின் தாக்குதலை மறைமுகமாகவும் சந்திக்க வேண்டி வரும்.

அமெரிக்க பாதுகாப்பு துறையான பெண்டகன் தமது F-35 விமானத்தை எந்த நாட்டிற்கும் விற்கப்போவதில்லையென்றும், அதன் தொழில்நுட்பத்தை கைமாற அனுமதிக்கப்போவதில்லை என்ற கோட்பாட்டை மீறி, F-35 விமானத்தை இஸ்ரேலுக்கு விற்பனை செய்துள்ளது. 

காரணம் இஸ்ரேலின் கண்டுபிடிப்பான இரும்பு கூரை ( ‘Iron Dome’) ஏவுகணை வழிமறிப்பு சாதனத்தை உருவாக்கி, அதன் தொழிநுட்பத்தை அமெரிக்காவுக்கும் கொடுத்திருந்தது. ( இது பற்றிய எனது முன்னைய பதிவை பார்க்கவும்) அந்த தொழில்நுட்பத்திறன் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் அமெரிக்காவின் “தாட்” என்று அழைக்கப்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையாகும்.

இஸ்ரேலின் இரும்புக் கூரை வெற்றி அளித்துள்ளதா?? ஆம் 97% வெற்றி அளித்துள்ளதாக நிபுணர்கள் கருத்து கூறியுள்ளார்கள். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் ஏவுகணைகள் மட்டுமல்ல ஆட்லறி, சிறியரக மோட்டர், மற்றும் எறிகணைகளையும் தடுக்கும் வல்லமை பெற்றுள்ளது. 

நேற்று இந்த ஏவுகணைகளின் பொறிமுறையைத்தான் அமெரிக்காவால், தென்கொரியாவிற்கு அனுப்பப்பட்டு, துரித கதியில் நிறுவுகின்றது அமெரிக்கா. இன்னும் சில நாட்களில் இது பாவனைக்கு வந்துவிடும்.

இந்த முறைமையால் வடகொரியாவின் ஏவுகணைகள் புறப்பட்ட அடுத்த நொடியே தானாக இயங்கும் “தாட்” ஏவுகணை, அதைத் தாக்கி அழிக்கும். 

ஒரு போரின் வெற்றி என்பது “எதிரி மீதான சிறந்த கணிப்பீட்டின் மூலமே எமக்கு சாதகமாக்க” முடியும். 

வடகொரியாவின் இப்போதைய இளம் தலைவரின் போர் முரசம் என்பது என்னைப்பொறுத்தவரை “சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது” என்பதேயாகும்.! 

சரி பொறுத்திருந்து தான் பார்ப்போம்.! 🙂 

எதிர்பார்ப்புகளுடன்
-ஈழத்து துரோணர்

« PREV
NEXT »

No comments