எமது படையினரை சர்வதேச ரீதியில் போர்க்குற்றவிடயத்தில் பிரதிவாதியாக்குவதற்கு நான் தயாரில்லை. படையினரை பாதுகாப்பது அரசின் கொள்கையாகும். அதேபோன்று பிரச்சினையை நாங்கள் தீர்த்துக்கொள்கிறோம். இதில் எவரும் தலையிட வேண்டிய அவசியமில்லை என உலகிற்கு சத்தமிட்டுக் கூறுகின்றேன் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலகின் பிரபல்யமான நாட்டுத் தலைவர்கள் எமது நாட்டின் இறைமையைப் பாதுகாக்க அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தனிப்பட்ட ரீதியில் எனக்கு உறுதியளித்துள்ளனர் என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டார்.
குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகையில்
யுத்தத்தை வெற்றிகொண்ட நாடென்ற ரீதியில் படையினரை பலப்படுத்துதல், அவர்களுக்கு சிறப்புரிமைகளை மற்றும் உரிமைகளை பெற்றுக்கொடுத்தல் என்பன அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
அத்தோடு படையினரை பாதுகாப்பதும் அவர்களது பிள்ளைகளுக்கு வழங்கக்கூடிய சேவைகளை வழங்குவதும் அரசின் கடப்பாடாகும்.
கடந்த இரண்டு கிழமைகளுக்குள் நாட்டின் ஊடகங்களிலும் அரசியல் துறையிலும் பல்வேறுபட்ட விமர்சனங்கள் மத்தியிலும் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
கடந்த வாரம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளரின் புதிய பிரேரணை வெளியாகியது. இது தொடர்பில் பல்வேறுபட்ட கோணங்களில் அரசுக்கெதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை ஊடகங்களின் மூலம் நான் பார்வையிட்டேன்.
எமது கடற்படையிலிருந்து முக்கிய அதிகாரியொருவர் ஜெனீவா சென்றார். பிரதிவாதியின் வெளிப்பாட்டை வழங்குவதற்காகவே சென்றார். அதனை கையளித்தார்.
நான் சட்டத்தரணியல்ல. பிரதிவாதியின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஒருவர் பிரதிவாதியாக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அறிக்கையை சமர்ப்பிப்பது பொருத்தமான விடயமல்ல.
யுத்தகாலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் வேறு விடயங்கள் தொடர்பில் எமது படையினருக்கும் அரசுக்கும் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசின் கொள்கையை, எனது கொள்கையை தெளிவாக அறிவிக்க வேண்டும்.
அது தான் நாட்டின் எந்தவொரு படையினரையும் குற்றவாளியாக்குவதற்கு தயாரில்லை. குற்றவாளியாக்கவும் மாட்டேன். நாம் இதற்கு குழப்பமடையத் தேவையில்லை. இன்று எமக்கு சர்வதேச நாடுகள், அமைப்புக்கள், ஐ.நா. என பல்வேறு தரப்பினர் தமது ஆதரவை வழங்குகின்றன. இதனை எவ்வாறு பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறீர்கள் என பலர் என்னிடம் நட்புரீதியாக கேள்விகள் கேட்கின்றனர்.
உலகின் பிரபல்யமான நாடுகளின் தலைவர்கள் எனக்கு தனிப்பட்ட ரீதியில் உறுதி வழங்கியுள்ளனர். எந்த ரூபத்தில் பிரச்சினைகள் வந்தாலும் நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகள் உட்பட படையினர் தொடர்பிலான பிரச்சினைகள் ஒருபோதும் தலைதூக்க இடமளிக்க மாட்டோம் என உறுதிபடக்கூறியுள்ளனர்.
அனைத்து பிரச்சினைகளின் போதும் இலங்கை அரசுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதி வழங்கியுள்ளனர். சர்வதேச ஆதரவையும் நட்புறவையும் எமது படையினரின் கௌரவத்தை பாதுகாப்பதற்காகவே பயன்படுத்துவேன்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட எந்தவொரு படையினரையும் பிரச்சினையில் சிக்க இடமளிக்க மாட்டேன்.
இப் பிரச்சினையை நாங்கள் தீர்த்துக்கொள்கிறோம். எவரும் தலையிட வேண்டிய அவசியமில்லை என உலகிற்கு சத்தமிட்டுக் கூறுகின்றேன்.
விடுதலைப்புலி பயங்கரவாதிகள் அல்லாத ஊடகவியலாளர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு தரத்தை சேர்ந்தவர்களின் கொலைகள், தாக்குதல்கள் போன்ற விடயங்களுடன் தொடர்புபட்ட எவரையும் பாதுகாக்கத் தயாரில்லை.
இது தொடர்பிலான விசாரணைகளின் போது அரச அதிகாரிகள், படையினர், தனியார் நிறுவனத்தை சார்ந்தவர்கள், என்பது பார்க்கப்பட மாட்டாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். அவ்வாறானவர்களைப் பாதுகாக்க முடியாது.
யுத்தம் செய்த படையினரை பாதுகாப்பது எமது கடப்பாடாகும். அவர்களைப் பலப்படுத்துவது எமது கடமையாகும். இதனை நிறைவேற்றுவோம்.
படையினரின் கௌரவம் அவர்களது பெயரை பாதுகாப்பது படையினர் தொடர்பான மக்கள் ஆதரவை மேலும் மேலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பலப்படுத்துவோம் என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
No comments
Post a Comment