Latest News

February 14, 2017

எந்த தீர்ப்பை எதிர்த்து மொட்டையடித்தார்களோ அதே தீர்ப்புக்கு இன்று பட்டாசு வெடிப்பது வேடிக்கை: ஸ்டாலின்
by admin - 0

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் வழியில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
 
 கூவத்தூர் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து?

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் வெறும் அறிவிப்புகள் மட்டும் தான் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வந்தன. ஏற்கனவே, ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கடற்கரையில் 144 தடை உத்தரவு போட்டார்கள். இப்பொழுது இந்த காபந்து ஆட்சியில் கூவத்தூர் பகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டு, இதுவே வாடிக்கையாகி விட்டது. இன்னும் என்னவெல்லாம் நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்போம்.

 சட்டம் ஒழுங்கு ஒரு மோசமான சூழலில் இருக்கிறது. எங்கும் கொலை கொள்ளைகள் பெருகியிருக்கிறது. அதற்கு நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்பதோடு, புகார்கள் வாங்கவே மறுக்கப்படுகிறதே?

 7 வயது சிறுமி ஹாசினி கொடூரமாக கொலை செய்யப்பட்டார், அதேபோல அரியலூர் மாவட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பெண் கற்பழிக்கப்பட்டு, அந்தக் கருவையே சிதைத்து கொலை செய்யப்பட்ட கொடுமை நடந்தது. அதிமுகவைச் சார்ந்த தோழர்களே பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட வீடியோக்கள் எல்லாம் வாட்ஸ்அப்பில் பரவுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதையெல்லாம் கண்டுபிடித்து, கட்டுப்படுத்த முடியாத காவல்துறை, கூவத்தூரில் நேற்றிலிருந்து மிகப்பெரிய அளவில், ராணுவத்தினரை போன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கோவளத்தில் சாலை மறியலை போலீஸார் தடுத்து நிறுத்தியதாக தெரிய வந்துள்ளது. இப்படித்தான் காவல்துறை செயல்பாடு இருக்கிறதே தவிர, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நிலையிலோ, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், கற்பழிப்பு போன்ற கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் நிலையிலோ இன்றைக்கு காவல்துறை இல்லை என்பதற்கு இவை சாட்சிகளாக இருக்கின்றன.

 அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இன்று மாலை அவர்களைச் சந்திக்க கவர்னர் நேரம் ஒதுக்கியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

 அது அதிமுகவின் உள்கட்சி பிரச்சினை. யாரை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்படித்தான் சசிகலாவை தேர்ந்தெடுத்தார்கள். சசிகலா தான் எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற கட்சித் தலைவர், அவர்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்று ஒரு அணி சொல்லிக் கொண்டிருந்தது. இன்று அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆக குற்றவாளிகளைத் தான் முதலமைச்சராகவோ, பொதுச் செயலாளராகவே தேர்ந்தெடுக்கும் நிலை இருந்து வருகிறது. நான் சொல்ல விரும்புவது, நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த வரலாற்று சிறப்புக்குரிய தீர்ப்பு நியாயமானது தான் என்று தீர்ப்பாகி, கடந்த 21 வருடங்களாக நடந்த வழக்கு, இன்று முடிவுக்கு வந்திருக்கிறது.

நீதிபதி குன்ஹா அவர்கள், முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கும், அவருடைய ஆருயிர் தோழி சசிகலா நடராஜன் அவர்களுக்கும், சசிகலாவின் உறவினர்களாக இருக்கக்கூடிய இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 வருட சிறை தண்டனை, முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம், மீதமுள்ளவர்களுக்கு தலா 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு விதித்தார். ஆனால் இடையில் அந்த தீர்ப்பு என்ன நிலைக்கு ஆளானது என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். பிறகு மேல் முறையீடு செய்யப்பட்டு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பு நியாயமானது என்று இன்று வந்துள்ள தீர்ப்பு நிரூபித்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வெளியான போது அதனை திமுகவின் சதி என்று சொன்னார்கள். அதுமட்டுமல்ல, காவடி எடுத்தார்கள், அலகு குத்திக்கொண்டு, மொட்டையடித்து, தாடி வளர்த்துக் கொண்டு, இப்படியெல்லாம் பலவற்றை செய்து, திமுக மீதும் விமர்சனம் செய்தனர். ஆனால், இன்றைக்கு அதே தீர்ப்பை நியாயமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அப்போது யாரெல்லாம் தாடி வளர்த்தார்களோ, காவடி எடுத்தார்களோ, அலகு குத்தினார்களோ, அவர்கள் எல்லாம் இன்றைக்கு இனிப்பு கொடுக்கிறார்கள்., பட்டாசு வெடிக்கிறார்கள். வழக்கு போட்டது இப்போது எதிர் கட்சியாக உள்ள திமுக. இந்த தீர்ப்பில் எங்களுக்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. ஆனால், நாங்கள் கூட அதை கொண்டாடவில்லை. ஆனால் அதிமுகவினர் இதை பெரிதாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அது தான் வேடிக்கையாக உள்ளது.

 ஆட்சியை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை வைத்து, ஆளுநரை வலியுறுத்தி வரும் நிலையில் திமுகவின் பார்வை என்ன?

எப்போது இந்தப் பிரச்சினை தொடங்கியதோ அப்போதே நாங்கள் மாண்புமிகு தமிழக கவர்னர் அவர்களை நேரில் சந்தித்து, எங்கள் கோரிக்கையை தெளிவாக எடுத்து வைத்திருக்கிறோம். யார் மெஜாரிட்டியை சட்டமன்றத்தில் நிரூபிக்கிறார்களோ அவர்கள் ஆட்சியமைக்க உடனடியாக மாண்புமிகு கவர்னர் அவர்கள் தனக்குள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி, அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.

நேற்றைக்கு திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு கூடி, அதிலும் இந்த கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி இருக்கிறோம். அதை செய்தியாளர்களிடமும் நான் தெரிவித்தி ருக்கிறேன். இப்போதும் அதையே சொல்கிறேன். எப்போதும் அதைத்தான் சொல்வேன்.
« PREV
NEXT »

No comments